Wednesday, 30 June 2021

திருவள்ளுவர்தான் தலைவர்

 

திருவள்ளுவர்தான் தலைவர்

தங்கத்தமிழுக்கு தலைவரானதால்                  தங்கத்துக்கும் பெருமை;                                    தகுதியானவரை தலைவராக்கியதால் தலைமைக்கும் பெருமை

இலக்கண இலக்கிய காலத்திலும் அவரால் பெருமை;                                                                    எதுகை மோனைப் பாடல் காலத்திலும் அவரால் பெருமை

வான் ஒலியின் ஒலியில் ஒலிக்குது அவரின் பெருமை;                                                  ஒளி ஒலியிலும் ஒளிர்ந்து ஒலிக்குது அவரின் பெருமை!

- தஞ்சை த இராமநாதன்

பாதுகாப்போடு வாழ்க

 

பாதுகாப்போடு வாழ்க

(பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்)

பூமித் தாயும் ஒரு பெண்                                          அம்மனாகியத் தாயும் ஒரு பெண்

அகமாயி காப்பதும் ஒரு பெண்                            மகமாயிக் காப்பதும் ஒரு பெண்

கற்புக்கரசி கண்ணகியால் நமக்குக் கிடைத்ததுப் பெருமை                          கற்பில்லாத கோவலனால் நமக்குக் கிடைத்ததோ சிறுமை

கோவலனின் செயல்பாட்டால் நமக்குக் கேவலம்                                                                          கோவல ரக ஆணின் செயல்பாட்டாலும் நமக்குக் கேவலம்

இரண்டு மூன்று மனைவியெனத் தாராளம் வாய் கிழிய மேடையில் பேசுவதோ ஏராளம்

மென்மையின் வீரத்தோடு உழைத்து வாழ்க    மேதகுக் கொள்கையோடு தழைத்து வாழ்க!

- தஞ்சை த இராமநாதன்

உறவாடும் உறவு

 

உறவாடும் உறவு

கூட்டுக் குடும்பம் குதூகலக் குடும்பம்                நல் உறவோடு உறவாடும் குடும்பம்

புது மனுஷா புது மனுஷி என்பார் தாத்தா          என் கண்ணே என் ராசா என்பார் ஆத்தா

உடலை உருட்டி உரம் எடுப்பார் பாட்டி                ஓடி ஆடுவார் தாத்தா தலையை ஆட்டி

தாடைக் கொண்டு தடவி விடுவார் பாட்டி  கூடவே நிற்பார் தாத்தா ஆர்வத்தைக் கூட்டி

முறம் எடுத்துக் கொடுக்கும் எடுபிடி தாத்தா முறம் பிடித்து உருட்டி விடும் கெடுபிடி ஆத்தா

இங்கா என்பதின் பொருளும் தெரியாது  இங்காப் பாடலின் ராகமும் புரியாது!

- தஞ்சை த இராமநாதன்

குறளின் குரல்

 

குறளின் குரல்

குறள் விளக்கம் அறியார்க்கு இவர் ஒளி விளக்கு                                                                          தெளியாதார் கூட்டத்திற்கு இவர் விதி விலக்கு

குறள் உரையில் இவர் சேர்த்தது முத்தான முத்து                                                                              நகல் எடுத்தோரெல்லாம் சேர்த்தது சொத்தான சொத்து

போலிகளுக்கு வேண்டும் தமிழில் தடை            Move ஆக வேண்டும் மு வ அவர்களின் நடை!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 29 June 2021

பனையின் பயன்கள்

 

பனையின் பயன்கள்

நுங்கு வேண்டாம் என்போர்க்கு கள்ளாகும் பொன்னிறத்தில் இயற்கை இனிப்புடன் கற்கண்டாகும்

நுங்கை பதத்தோடு வெட்டாதப் போது பழமாகும்                                                                    கரும் பழமானாலும் நாரோடு சேர்ந்து மங்களகரமாகும்

பறிக்காத பனம் பழம் கொட்டி கொட்டை கன்றாகும்                                                  கன்றாகாமல் தேவைப்பட்டால் பனங் கிழங்காகும்

கரு கருவென பச்சைக் கன்று பனங் குட்டியாகும்                                                  பனையின் கருக்கு மட்டை பனைக்கு தற்காப்பாகும்

பனை ஓலை பலவித கைவினைப் பொருளாகும்                                            கஞ்சியைக் குடிக்க பனை ஓலை தொன்னையாகும்

பனை ஓலையோடு மட்டை ஏழைகளின் கூரையாகும்                                                                ஊற வைத்து உரித்தால் கருக்கு மட்டை கயிறாகும்

முற்றிய மரம் வீட்டுக்கு உறுதியான உத்திரமாகும்                                                                நிலை இல்லா நிழலுடைய அத்தனையும் பயனாகும்!

- தஞ்சை த இராமநாதன்

அஞ்சல் நாள்

 

அஞ்சல் நாள்

பழுப்பு நிறத்தில் திறந்தக் கடிதம்                    நீல நிறத்தில் திறக்காதக் கடிதம்

தபால்காரர் மணி அடித்தால் பயம்                      தபாலில் money வந்தால் சுகம்

காதலுக்கு வர்ததும் அதே கடிதம்                      மோதலுக்கு வருவதும் அதே கடிதம்

WhatsApp இருக்கு நமக்கு              கடிதமெல்லாம் பிறகு எதற்கு?

கடித மயமான பொற்காலம் அது?          கணினி மயமான கற்காலம் இது?

- தஞ்சை த இராமநாதன்

வாழ்க்கைச் சக்கரம்

 

வாழ்க்கைச் சக்கரம்

கவலை இல்லா வாழ்க்கை இருந்தது எப்போது?

அது அப்போது...

காலணி இல்லா வாழ்க்கை இருந்தது எப்போது?

அது அப்போது...

இயற்கைக் காற்றை முழுமையாய் சுவாசித்தது  எப்போது?

அது அப்போது...

முள் குத்தி காலில் இரத்தம் வந்தது எப்போது?

அது அப்போது...

சாப்பாட்டை மறந்து விளையாடியது எப்போது?

அது அப்போது...

மிட்டாயை உடைத்தோ கடித்தோ பகிர்ந்தது  எப்போது?

அது அப்போது...

உண்மையில் மகிழ்வான வாழ்வை வாழ்ந்தது  எப்போது?

அது அப்போது...

இவ் வாழ்க்கையை மீண்டும் பெறுவது எப்போது?

அது எப்போது...?

- தஞ்சை த இராமநாதன்

மண்பாண்டம்

 

மண்பாண்டம்

பானைத் தண்ணி சுத்தத் தண்ணி;  அசுத்தத்தை அகற்றும் பானைத் தண்ணி

பழைய சோற்றைக் கெடாமல் காக்கும்; நீராகார குளுமையை கட்டிக் காக்கும்

பொங்கல் பானை பொங்கும் பானை;            தட்டிப் பார்த்து வாங்கும் பானை

வாங்கிடுவர் சிற்சிறு பேரம் பேசி;                      நடந்திடுவர் சிற்சில கதைகள் பேசி

தலையில் தூக்க பக்குவம் தேவை;      உலையில் வைக்க பயிற்சி தேவை

இறக்கும் போது பொறுமை தேவை;                இறங்கிய சுமை நமக்குத் தேவை

சிறுபானையில் இனிப்புப் பொங்கல்; பெரும்பானையில் வெண்மைப் பொங்கல்

கச்சிதமாய் பொங்கிட உகந்தப் பானை;  அகப்பையோடு உலாவிட அமைந்தப் பானை!

- தஞ்சை த இராமநாதன்

பட்டுக்கோட்டையார்

 

பட்டுக்கோட்டையார்

அறியாமை அகல அவசியப் பாட்டு                      ஆணவ ஆட்டங்களை ஆட்டியப் பாட்டு

இனிமை இன்பம் இனிக்கப் பாட்டு                      உண்மை உறுதி உணர்வுப் பாட்டு

உழைப்போர்க்கு உற்சாகப் பாட்டு                      மூடர்களை முடமாக்கியப் பாட்டு

ஏமாற்றியவர் எகிறி ஓடப் பாட்டு                            ஆடிப்பாட பாட்டாளிக்குப் பாட்டு

தம்பிகளை தட்டி எழுப்பியப் பாட்டு                      தூக்க நிலைமாற எழுச்சிப் பாட்டு

நிம்மதி பெற ஏழைக்குப் பாட்டு                  பயிரைப் பற்றி பாராட்டிப் பாட்டு

சொல்லிய சேதி கேட்கப் பாட்டு                              திருடாமல் வாழ அறிவுரைப் பாட்டு

நிலாவாக மாறியக் காதல் பாட்டு            தத்துவம் நிறைந்த தரமானப் பாட்டு!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 27 June 2021

சாலையோர தேநீர் கடை

 

சாலையோர தேநீர் கடை

தாமிர பாத்திரத்தில் தேநீராக மாற நீர் குதித்துக் கொண்டே இருக்கும்!அலுமினிய பாத்திரத்தில் பால் கொதித்துக் கொண்டே இருக்கும்!

கொதிக்கும் போதே வெண்ணிற ஆடையை பால் சூட்டிக் கொள்ளும்!வடிகட்டிப் பையை சாயா நிறத்திற்கு தேயிலை மாற்றிக் கொள்ளும்!

அனைத்தையும் சேர்த்து தூக்கி ஆத்தினால் நுரை உயர்ந்து சிறக்கும்!நின்றபடியே கண்ணாடி குவளையில் தேநீர் குடித்தால் தூக்கம் பறக்கும்!

- தஞ்சை த இராமநாதன்

மாடும் மனிதரும்

 

மாடும் மனிதரும்

துண்டு போர்த்தினாலும் மகிழ்ச்சி      சால்வையைப் போர்த்தினாலும் மகிழ்ச்சி கோஷம்  போட்டால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி மனிதருக்கு மட்டுமல்ல மாட்டுக்கும்தான்!

- தஞ்சை த இராமநாதன்

நல்வழி நலம்

 

நல்வழி நலம்

உடலோடு உள்ளத்திலும் தூய்மை                        முகத்தோடு அகத்திலும் தூய்மை

உடல் மனம் ஆன்மாவின் தொடர்பு                      வேர் தண்டு இலையின் தொடர்பு

ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை                நற் பண்பில்லாமல் உயர்வில்லை

சங்கம மனதில் அமைதி நிலை                              சத்திய நிலையில் ஆனந்த நிலை

சாதிக் கட்டு அறுபடல் நலம்                                மதப் போதை எடுபடல் நலம்

மனித நெறி ஆற்றல் பெறல் நலம்                        மனதின் வழி அருள் பெறல் நலம்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 26 June 2021

எங்கு செல்வேன் நான்?

 

எங்கு செல்வேன் நான்?

தாயை இழந்தேன் தந்தையை இழந்தேன் எப்போது இழந்தேன் என்பதையும் மறந்தேன் அழுதேன் அழுதேன் அயரும்வரை அழுதேன் என் கண்ணின் கண்ணீரையும் இழந்தேன்

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்தோம் பிழைப்புக்காக                                                            இங்கேயேயே காத்திருக்கேன் உதவுவோரின் அழைப்புக்காக

வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் நிலமே வந்த என்னையும் வாழ வைத்தால் நலமே யாதும் ஊரே என்றிருரைத்த நிலமே    யாவரும் கேளிர் என சொன்னால் நலமே! 

- தஞ்சை த இராமநாதன்

தன்மானம் வேண்டும்

 

தன்மானம் வேண்டும்

கந்தையை கசக்கிக் கட்டினோம்                      கூழை குளித்துக் குடித்தோம்

சுத்தமான செயல் நித்தமும் சோறு போடும் சுத்தமான நாவோ சந்தத்துடன் பாடல் பாடும்

வீட்டுக்கு ஒரு கழிவறை நிச்சயம் வேண்டும் கழிவறை சுத்தமும் நிச்சயம் வேண்டும்

திறந்த வெளிக் கழிவு சுத்தமாக வேண்டாம் வீதியோரக் கழிப்பும் மொத்தமாக வேண்டாம்

பேச்சில் மட்டும் மானம் காப்பது அவமானம் செயலில் காட்டி இனம் காப்பது தன்மானம்

புதரும் வாய்க்காலும் குடத்தடியும் இல்லை      கைபேசி இருக்கு கழிக்கக் கழிவறை இல்லை

இஷ்டப்படி கண்ட இடத்தில் கழிக்கும் ஆணே பெண்ணின் கஷ்டத்தை உணராதது ஏனோ?

மானம் கெட்ட மனித சமுதாயமே ஒழிக      மானம் மிக்க மனித சமுதாயமே வருக

கொடுமை கொரோனாவோடு முடிக        சொல்லும் செயலும் ஒன்று படுக

மாற வேண்டியது தனிநபர் கடமை            சமுதாயம் என்பது தனிநபர் உடமை!

- தஞ்சை த இராமநாதன்

பாரம் தாங்கும் கை

 

பாரம் தாங்கும் கை

தலையில் தூக்கும் பாரத்தை சாயாமல் அணைத்துத் தாங்குவதோ வலக்கை                  இடுப்பில் தொங்கும் பாரத்தை விழாமல்          இணைத்துப் பிடிப்பதோ இடக்கை

கிளையை வெட்டி விறகை எரித்து சமைத்து உண்டு வாழ்ந்து வந்தது வெற்றி வழக்கம்      காட்டை அடியோடு அழித்துத் தொலைத்து இன்று நொந்து வாழ்வது வெட்டிப் பழக்கம்!              

- தஞ்சை த இராமநாதன்

Friday, 25 June 2021

பார்த்தும் பார்க்காதவர் குருடரே

 

பார்த்தும் பார்க்காதவர் குருடரே

பார்வை இழந்தோர் பார்த்து நடந்தாலும் நடக்குது ஆபத்து                                                        பார்வை இருப்போர் பார்த்து நடந்தாலும் நடக்குது ஆபத்து

கண் போனவர் போகும் போக்கின் வழி            கண் கூடாய்த் தெரியுது                                            கண் பார்ப்பவர் போகும் போக்கின் வழி          கண் குருடாய்த் தெரியுது

பார்வை இல்லாதோர் பார்க்கும் பார்வையில் தெய்வமே காட்சி                                                        பார்வை இருப்போர் பார்க்கும் பார்வையில் மாயமே காட்சி!

- தஞ்சை த இராமநாதன்

உயர்ந்த மனிதர்

 

உயர்ந்த மனிதர்

உருவத்தில் உயர்ந்த மனிதர்                                உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர்

மக்களுக்காக வாழ்ந்த மனிதர்                              மக்களால் வீழ்ந்த மனிதர்

தனக்கென பணம் சேர்க்காத மனிதர்  தனக்கென குணம் சேர்த்த மனிதர்

எளிய வாழ்க்கை வாழ்ந்த மனிதர்                        ஏழ்மை வாழ்வில் வாழ்ந்த மனிதர் 

கல்விக்காக பள்ளி திறந்தார்                                  பசியாற உணவும் தந்தார்

படிக்காமல் படிக்க வைத்தார்              படிப்பினால் சிறக்க தந்தார்

சுய நலம் பேணாத மனிதர்                                    பொது நலம் பேணிய மனிதர்

மணக்கும் மனதோடு வாழ்ந்தவர்                  மணக்காத வாழ்வோடு வாழ்ந்தவர்

அமைதியுடன் இருந்தத் தமிழர்      வறுமையுடன் இறந்தத் தமிழர்!

- தஞ்சை த இராமநாதன்

காந்தி மகான்

 

காந்தி மகான்

சட்டத்தில் சிறப்புடன் உயர்வானப் பட்டம் பட்டத்தின் சிறப்புடன் உயர்வானத் திட்டம்

திட்டத்தின் பாதையில் மக்களுக்குப் பெரும் பணி                                                              மக்களோடு மக்களாகி மக்களுக்கு அரும் பணி

நாட்டில் நெடுந் தூரம் நடந்தே சென்றார் நாட்டில் கடும் துயரம் கடந்தே வென்றார்

எளிய உடையில் கண்டார் வீர நடை                    வீர நடையில் கொண்டார் அமைதிப் படை

சீறிப்பாயாத அமைதியான ஆண் சிங்கம் சீரிய செயல் செய்வது அவரின் அங்கம்

மிரட்டாமல் மிரட்டியதிலும் பெரும் வீரர் அடிக்காமல் அடித்ததிலும் பெரும் தீரர் 

மனித ஆத்மாக்களில் மகா ஆத்மா பரமாத்மாவோடு இணைந்த மகா ஆத்மா

கர்ம வினைகள் நீங்கிப் பிரிந்த ஆத்மா அகிம்சை மழையைப் பொழிந்த ஆத்மா

காசு பதவிக்காக குறி வைக்காத மகாத்மா தேசப் பணிக்காக குறி வைத்த மகாத்மா

வைத்தக் குறி தப்பாது நாட்டை மீட்டெடுத்த மகாத்மா                                                          வைத்தக் குறி தப்பாது சுடுபட்டு மாண்டுவிட்ட மகாத்மா!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 24 June 2021

இயல் இசையோடு நாடகம்

 

இயல் இசையோடு நாடகம்

பரமனுக்காகப் பாட்டெழுதியக் கண்ணன் சிவனைப் போற்ற வாயசைத்தத் தாசன்

பரமசிவன் கழுத்தின் பாம்பிற்காக பாட்டைப் படைத்தக் கண்ணன்                                    எழுதியப் பாட்டிற்கு மேடையும் ஏறி பாட்டைப் பாடி வாயசைத்தத் தாசன்

திருமாலின் பெயரோடு கண்ணனுக்குப் பக்க வாத்தியம் வாசித்த விஸ்வன்        பெருமாளின் பெயரோடு பல்லிசை இசைத்து மெருகேற்றிய நாதன்

- தஞ்சை த இராமநாதன்

படிப்பது அழகு

 

படிப்பது அழகு

புத்தகத்தைக் குழந்தை படிப்பதும் அழகு புத்தகத்தைக் குழந்தை பிடிப்பதும் அழகு      கை பேசி இல்லாது இருப்பதும் அழகு பிடித்ததைப் பிடித்தபடி படிப்பதும் அழகு பிஞ்சு முகத்தில் கொஞ்சச் சொல்லும் அழகு கொஞ்சி சிரித்தால் மெருகேற்றிடும் அழகு பஞ்சு மெத்தையில் மிருதுவான பிஞ்சு அழகு கெஞ்சிக் கேட்பதிலும் மிஞ்சிடும் அழகு புத்தக வெளிப் புறத்தில் வெற்றி அழகு படித்து அகம் தெளிந்தால் முற்றிலும் அழகு படம் பார்த்து பாடம் கற்பதிலும் அழகு          படம் காட்டுவோருக்குப் பாடம் கற்பிப்பதோ அழகிலும் அழகு!

- தஞ்சை த இராமநாதன்

கல்லும் காலமும்

 

கல்லும் காலமும்

அம்மி மேல் குழவி இருப்பது நியாயம்                குழவி மேல் அம்மி இருப்பது எப்படி நியாயம்?

ஆட்டுக்கல் மேல் குழவி இருப்பது நியாயம் குழவி மேல் ஆட்டுக்கல் இருப்பது எப்படி நியாயம்?

ஒன்று வாங்க அடுத்தது சும்மா இனாமா?ஒன்றாகக் கலந்து விட்டதால் ஒரே இனமா?

இது அரைக்கப் பயன்படப்போகும் கல்லா?காட்சிக்காக காண வைக்கப்பட்டப் பொருளா?

அம்மியில் அரைத்தப் பின் துவையலில் இருக்கும் ருசி                                                              ருசித்தப் பின் சற்று நேரத்தில் எடுக்கும் பசி

மாங்காயை இதில் நசுக்கி சுவைப்பது சுவை உப்பும் மிளகாயும் சேர்ந்தால் அது தனி சுவை

ஆட்டுக்கல்லில் நீரோடு இருந்தால் ஈர மாவு திருவையில் உலர்வோடு இருந்தால் கார மாவு

இட்லி தோசை எல்லாம் வந்தது அங்கிருந்தே முறுக்கு அதுரசம் எல்லாம் வந்தததும் அங்கிருந்தே

காலம் மாற கருவிகளும் மாறின                          விற்பவர் மாறி விற்பனையும் மாறின

பழையனக் கழிதலில் நமக்கு மெய் வெற்றியா?                                                                  புதியனப் புகுதலில் நமக்கு நோய்த் தொற்றியா?

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 23 June 2021

தண்ணீருக்குப் பூட்டு

 

தண்ணீருக்குப் பூட்டு 

காற்றை உருளையில் அடைப்பதது சோதனை தண்ணீரை பீப்பாயில் அடைப்பது வேதனை

பொழிந்த நீரைத் தேக்க தேக்கமும் இல்லை தேக்கம் அமைக்க திட்ட நோக்கமும் இல்லை

நீர் என்பது இயற்கையில் உள்ள சுழற்சி நீரைத் தேக்கிப் பயன்படுத்த இல்லை முயற்சி

கிடைத்ததைப் பூட்டி வைத்து குடிப்பதற்காக வைத்தவர்களை போற்றுவோம்

கிடைக்காதோ என்ற எண்ணத்துடன் பூட்ட வைத்துப் படுத்துபவர்களைத் தூற்றுவோம்!

- தஞ்சை த இராமநாதன்

லட்சியவாதி

 

லட்சியவாதி

சிங்க மனம் பகத் சிங்கிடம்                                      பகட்டான மனம் பல அசிங்க மனிதரிடம்

வட நாட்டு வீர இளைஞன் பகத் சிங்                    பாரத நாட்டு தவப் புதல்வன் பகத் சிங்

கோபம் நிறைந்த குணமுடையோன்                    வீரம் நிறைந்த நெஞ்சுடையோன்

பல லட்சாதிபதி கால் வருடிகள் இங்கே              சில லஜபதி லட்சியவாதிகள் எங்கே?

பண நகை நட்புகள் இங்கே                                    மன நக நட்புகள் எங்கே?

உரிமைமிகு உணர்வுடன் தேச உணர்வு            உயிரிணை நேசத்துடன் பாச உணர்வு!

- தஞ்சை த இராமநாதன்

இயற்கையானக் குரல்

 

இயற்கையானக் குரல்

ஆயிரம் நிலவோடு ஆரம்பித்தப் பாடல்              கோடி நினைவோடு முடிந்தப் பாடல்

துள்ளித் துள்ளி ஆடவும் பாடல் ஆன்மிகத்தோடு இறைக்கும் பாடல்

மாயமான வாழ்வை உணரப் பாடல்                      உயரிய உழைப்பை அறியப் பாடல்

கம்பீரத்தில் கர்ஜித்த வீரப் பாடல்    கண்ணீரைப் பெருக்கிய சோகப் பாடல்

காதல் செய்யாமலே காதலிக்கவும் பாடல்  காதலைச் செய்ய தூண்டவும் பாடல்

தூங்காமலும் தூங்கி விழாமலும் இருக்கப் பாடல்                                                                            தூங்கி விழித்தப் பின் தூங்கவும் பாடல்

மழைத் துளிகள் முகமானப் பாடல் தண்ணீரினுள் வியர்க்கவும் பாடல்

மூச்சு விடாமல் முடிக்கவும் பாடல்                          மூச்சு விட்டப் பிறகும் கேட்கும் பாடல்

சும்மாக் கிழித்த கடைசிக் குரல்  அண்ணாத்தையில் ஒலித்தக் குரல்!

இயற்கைக்காக இயற்கையானக் குரல் இயற்கையோடு இயற்கையானக் குரல்!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 22 June 2021

நடந்தது நடக்க வேண்டாம்

 

நடந்தது நடக்க வேண்டாம் 

மின்சாரக் கம்பியில் மெதுவாய் நடந்து கடக்கத் துணிந்தது ஏன்?                                          மின்சாரக் கம்பியை மெதுவாய்ப் பிடித்து நடக்கத் துணிந்தது ஏன்?

மின்கம்பி மின்சாரத்தைக் கடத்தாத போது நடந்ததால் நடக்காதது நடக்காமலே போகுமே மின்கம்பி மின்சாரத்தைக் கடத்தும் போது நடந்திருந்தால் நடக்காதது நடக்காமலா போகுமா?

கம்பியைக் கையில் பிடித்து நடந்த  வாழ்க்கை கடந்த வாழ்க்கையாகிப் போகட்டும் நம்பிக்கையில் நடக்கும் வாழ்க்கை கடக்கப் போகும் வாழ்க்கை ஆகட்டும்!

- தஞ்சை த இராமநாதன்

எண்ணமும் வண்ணமும்

 

எண்ணமும் வண்ணமும்

சித்திரம் பேசுவதென்பதும் விசித்திரம் அல்ல சித்திரப் பெண்ணின் சித்திரமும் விசித்திரம் அல்ல

வடிக்கும் சித்திரப் பெண் சிற்பியான சித்திரம் வடித்த சித்திரப் பூமியும் சிறப்பான சித்திரம்

உளி வைத்து அடித்தால் உலகமும் மாறும்  சுத்தி வந்து அடித்தால் சுற்றமும் மாறும்

அடிக்கும்போது அடிப்பதைப் கூர்ந்து அடி படிக்கும்போது படிப்பதை ஆழ்ந்துப் படி

வீட்டுக்கு வீடு வீட்டின் எல்லையில் தொல்லை நாட்டுக்கு நாடு நாட்டின் எல்லையிலும் தொல்லை

பரந்து விரிந்தது இந்தப் புண்ணிய பூமி எல்லையால் பிரிந்து போவதால் அந்நிய பூமி

நாட்டுக்கு நாடு நடைப்பாதையில் தட மாற்றம் நிலத்தாலேயே நடுநிலையில் தடுமாற்றம்

நாட்டுக்கு நாடு மனித நிறத்தால் மாற்றம் நிறத்தை நாடும் நாட்டில் மனதில் நாற்றம்

வண்ணத்தில் தெரியுது கை வண்ணம் எண்ணத்திலிது புது வகை எண்ணம்!

- தஞ்சை த இராமநாதன்

பூவை விற்றுப் படிக்கும் படிப்பு

 

பூவை விற்றுப் படிக்கும் படிப்பு

பாடசாலை முடிந்து தொடர்ந்திடும் படிப்பு பூமாலை முடிந்ததும் தொடர்ந்திடும் படிப்பு

மலர்ந்தப் பூ வாசம் இம்மண் சாலையில்            புத்தக மணம் வீசும்  இப்பொன் வேளையில்

அம்மாவுக்கு உதவ பூ விற்க வந்த மகன் அம்மாவின் உதவிக்கு உதவ வந்த மகன் 

இந்தப் பூவின் நிறமோ வெள்ளை நிறம்            இந்தப் பையன் வாழ்வோ மெல்ல மாறும்

நல்லத் துடிப்போடு பகுதி நேர வேலை              நல்லப் படிப்போடு தகுதி பெறுவாய் நாளை

அன்னைக்கு நீ தருவது பெரும் மகிழ்ச்சி என்னைக்கும் மகிழ்வு தரும் இந்நிகழ்ச்சி

நூலோடு சேர்ந்த பூவிற்கு வசந்த காலம் நூலோடு சேர்ந்த வாழ்விற்கு உகந்த காலம்

பறித்தப் பூ தவறாது மணத்தைத் தரும்              படித்தப் படிப்பு தவறாது தனத்தைத் தரும்

இன்று பூவை விற்று படிக்கும் படிப்பு                  வென்று பூமாலை பெறப் போகும் படிப்பு!

- தஞ்சை த இராமநாதன்


Monday, 21 June 2021

ராஜ யோகா

 

ராஜ யோகா

ஆறு நிலைகளை உள்ளடக்கி ஏழாம் நிலையில் துவங்குவது ராஜ யோகா

வெளிப்புற புலன்களை ஒருநிலைப் படுத்தும் முதல் நிலை யமம்

உள்புற உணர்வுகளை ஒருநிலைப் படுத்தும் இரண்டாம் நிலை நியமம்

ஒரே நிலையில் உட்கார தயாராகும் மூன்றாம் நிலை ஆசனம்

உயிர்க் காற்றை உள் நிறுத்தி மூச்சை நிலைப்படுத்தும் நிலை பிராணாயமம்

ஐம்புலன்களின் உணர்வின் தாக்கத்தை விடுவிக்கும் ஐந்தாம் நிலை பிரத்தியஹாரா

மனதை ஒழுங்குப்படுத்தும் நிலையான ஆறாம் நிலை தாரணா

ஆறு நிலையும் நிலையான பிறகு உள் நோக்கி செறிவு பெறும் நிலை தியானம் 

அனைத்து நிலைகளையும் உள்ளடக்கி முழுமைப் பெறும் கடைசி நிலை சமாதி!

- தஞ்சை த இராமநாதன்

எது அழகு?

 

எது அழகு?

உடலழகை ஒவ்வொன்றாக உளியால் ஒன்றுக் கூட்டிய விதமும் அழகு                              உடலசைவை ஒவ்வொன்றாக உளியால் வென்றுக் காட்டிய விதமும் அழகு

சிற்பியின் கை வண்ணத்தில் வடித்த சிலையில் கால் ஆடுவதும் அழகு                        சிற்பியின் கலை எண்ணத்தில் உதித்த  சிலையில் கை ஆடுவதும் அழகு 

கால்படும்படி காலின் அடியை வடிவமைத்த சிற்பியின் சிற்பக் கை வண்ணமும் அழகு        கண்படும்படி சிலையை வடிவமைத்த சிற்பியின் மன எண்ணமும் அழகு

ஆனாலும்,

அரைகுறை உடையைக் காண்பித்து அதை கடவுளாகச் காண்பிப்பதில் இல்லை அழகு      அரைகுறை உடையை வைத்து அர்த்தங்களை கற்பிப்பதில் இல்லவே இல்லை அழகு

நல்ல சிற்பத்தைச் செதுக்கினால் செதுக்கிய சிற்பியின் நல்ல சிந்தனையில் இருக்கும் அழகு                                                                            நல்ல சிற்பத்தைச் செதுக்காத இச்சிற்பியின் அபல சிந்தனையில் எங்கே இருக்கு அழகு?

மானம் காத்த தமிழ்ப் பரம்பரையை மானக்கேடு செய்வதில் இல்லை அழகு              முறத்தால் அடித்த வீரப் பரம்பரையை உளிப் புறத்தால் அழிப்பதில் இல்லை அழகு!

- தஞ்சை த இராமநாதன்

வண்டியும் ஓடும் கதையும் ஓடும்

 

வண்டியும் ஓடும் கதையும் ஓடும்

கடையாணி வண்டி ஓட்டியது அந்தக் காலம் கடனாளி வண்டி ஓட்டுவது இந்தக் காலம்

நுகத்தடிப் பூட்டி ஓட்டியது அந்தக் காலம் மோசடியைக் கூட்டி ஓட்டுவது இந்தக் காலம்

முன்பாரம் அழுத்தினால் சாய்ந்து விடும் பின்பாரம் தூக்கினால் தொங்கி விடும்

ஏர்க்கால் தூக்கி எடையைப் பார்க்கப்படும்  ஏர்க்கால் அழுத்தி சமம் பார்க்கப்படும்

மனைவி போல் மூக்கணாங் கயிறு இறுக்கும் கணவன் போல் பூட்டாங் கயிறு இருக்கும்

எரிந்த வைக்கோல் கருநிற மசகாகிவிடும் இலகுவான மசகால் ஓட்டம் இலகுவாகிவிடும்

குடத்தைக் காக்கும் பொறுப்பு ஆரக்காலிடம் சக்கரத்தைக் காக்கும் பொறுப்பும் ஆரக்காலிடம் 

வண்டித் தட்டியை ஆடவிடாப் பொறுப்பு உயரமான ஓரக் குச்சியினிடம்

ஓரக் குச்சியை ஒண்டியாய் விடாப் பொறுப்பு கட்டப்பட்ட நீளமான தட்டியினிடம்

கவலையே இல்லாது வண்டியில் செல்வார்கள் சந்தைக்குப் பயணம்

கதையே இல்லாது கதை சொல்வதுதான் வண்டியில் சந்தோசப் பயணம்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 20 June 2021

காலத்திற்கும் மாறாதப் பிச்சை

 

காலத்திற்கும் மாறாதப் பிச்சை 

பாத்திரம் அறிந்து பிச்சை இடச் சொன்னவர்கள் உண்டு அன்று

ஆளைப் பார்த்து பிச்சை கேட்க சொல்கிறவர்கள் உண்டு இன்று

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே அன்று

பிச்சை நன்றே பிச்சை நன்றே கற்ற பின்னும் பிச்சை நன்றே இன்று

பிச்சைப் போடுபவர் இருக்கும்வரை பிச்சை எடுப்பவர் இருந்தார் அன்றும்

பிச்சை எடுப்பவர் இருக்கும்வரை பிச்சைப் போடுபவர் இருக்கார் இன்றும்

உடையை மாற்றினாலும் பிச்சை பிச்சையே நடையை மாற்றினாலும் பிச்சை பிச்சையே

பிச்சை எடுத்து பிச்சைக் கொடுத்தாலும் பிச்சை பிச்சையே 

பிச்சைக் கொடுத்து பிச்சை எடுத்தாலும் பிச்சை பிச்சையே!

 - தஞ்சை த இராமநாதன்

எடுத்தாலும் கொடுக்காதே

 

எடுத்தாலும் கொடுக்காதே

லஞ்சம் வாங்காதே என்பது தவறானக் கூற்று 

லஞ்சம் கொடுக்காதே என்பதே சரியானக் கூற்று!

பிச்சை எடுக்காதே என்பது  தவறானக் கூற்று 

பிச்சைக் கொடுக்காதே என்பதே சரியானக் கூற்று

நாடு மாற வேண்டும் என்பது தவறானக் கூற்று 

நாம் மாற வேண்டும் என்பதே சரியானக் கூற்று!

- தஞ்சை த இராமநாதன்

ஒற்றைக் கால் வீரர்

 

ஒற்றைக் கால் வீரர்

மண் வெட்டியால் மண்ணை வெட்டினார்    வெட்டிய மண்ணால் வரப்பைக் கட்டினார்

கட்டிய வரப்பால் நீரை உயர்த்தினார் உயர்த்திய நீரால் உழவைப் பெருக்கினார்

ஆழ உழுது நிலத்தை மென்மை ஆக்கினார் நிலத்தின் நீரை தெளிந்த நீர் ஆக்கினார்

தெளிந்த நீரில் தன் முகத்தையும் பார்த்தார் முளைத்த விதையின் முகத்தையும் பார்த்தார்

நீரை வடித்து காயவும் வைத்தார்                          காய வைத்து நீரையும் வைத்தார்

விளையும் பயிரை முளையிலே கண்டார் வளர்ந்தப் பயிரை நாற்றாய்க் கண்டார்

நாற்றைப் பறிக்க பக்குவம் கொண்டார் பிரித்துப் பயிரை நடும் பக்குவமும் கொண்டார்

வளர்ந்தப் பயிரில் கதிர் வரச் செய்தார் விளைந்த நெல்லில் சோறு வரச் செய்தார்

இவர் ஒற்றைக்காலில் நின்றே வென்றார் இவர் நாற்றங்காலில் வென்றே நின்றார்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 19 June 2021

தீக்குச்சி

 

தீக்குச்சி

பெருமையோடு பெட்டிக்குள் ஓய்வெடுத்து உரிமைக்காகக் காத்திருக்கும் தீக்குச்சி பொறுமையோடு பெட்டிக்குள் காத்திருந்து வறுத்தெடுக்கக் காத்திருக்கும் தீக்குச்சி

யாரும் சீண்டாதவரை பெட்டிக்குள் அடங்கி அடக்கமாய்க் கிடக்கும் தீக்குச்சி                            யாராவது சீண்டி உரசிவிட்டால் அடங்காது ஆரவாரமாய் மாறிவிடும் தீக்குச்சி

எரிபொருளோடு எரி வெப்பத்தையும் தன்னுள் உள்ளடக்கியது தீக்குச்சி                        எரிந்து எரித்துவிட்டு எரிந்தத் துன்பத்தையும் தன்னுள் உள்ளடக்குவது தீக்குச்சி 

காய்ந்து உலர்ந்து கவலையற்று செயலாற்ற  அடைந்து காத்திருப்பதும் தீக்குச்சி                       நனைந்து தளர்ந்து கவலையுற்று செயலற்று உடைந்து செத்துப்போவதும் தீக்குச்சி!

- தஞ்சை த இராமநாதன்

கெஞ்சிக் கொஞ்சும் உறவு

 

கெஞ்சிக் கொஞ்சும் உறவு

தாத்தா பாட்டி தடுமாறி எழுந்திட முயற்சி            பேரன் பேத்தி தவழ்ந்துத் தாங்கிட முயற்சி

மெய்யோடு கை கலந்த முயற்சி                            உறவோடு உணர்வு கலந்த முயற்சி

ஒன்றோடு கலந்த தலைமுறை முயற்சி இரண்டறக் கலந்த உரிமை முறை முயற்சி

மூன்று சந்ததியோடு தொடரும் முயற்சி நான்கிலும் தொடர்ந்து தொடரும் முயற்சி

தடியோடு தள்ளாடும் ஒரு புற முயற்சி தரையோடு தவழ்ந்திடும் மறு புற முயற்சி

பல்லில்லா சிரிப்போடு இரு புற முயற்சி அளவில்லா ரசிப்போடு இரு புறமும் முயற்சி

என் பேரப் பிள்ளையென பெரும் முயற்சி தாத்தா பாட்டியென செல்லம் தரும் முயற்சி

உணர்வு நிறைந்த பாரம்பரிய முயற்சி உரிமைக் கலந்த பரம்பரை முயற்சி!

- தஞ்சை த இராமநாதன்

அன்பும் மனிதமும்

 

அன்பும் மனிதமும்

அன்று பாரி கொடுத்தத் தேரு                                இன்றும் பாரினிலே நல்லப் பேரு                          அன்றே தேர்க் கொடுத்த ஊரு                                என்றும் உலகம் போற்றும் பாரு

அன்பால் ஒன்றாகும் இரு இதயம்                        அன்பால் ஒரு 'தாஜ்மகால்' உதயம்                      அன்பால் கிடைத்த உலக அதிசயம்                      அன்பால் கட்டி முடிக்கப்பட்ட விசயம்

சோழ பாண்டிய நாட்டிடையே உறவு                      அது பார்க்காமலே உண்டான உறவு                    பெருஞ் சோழன் உயிர்த் துறந்தார்                       பாண்டிப் புலவனும் சேர்ந்து இறந்தார்

உறவோடு அண்ணனுக்கு அதிகாரம்                துறவோடு தமிழுக்கு சிலப்பதிகாரம்                    நற்காவியம் தந்த இளங்கோவடிகள்                    நீதிக் காத்தது அவர் தந்த அடிகள்

அன்று மதுரை தீ பற்றி எரிந்தது                            அங்கே அன்பின் சினம் தெரிந்தது                      மனிதம் மாண்டதால் மன்னன் மாண்டார்          மன்னன் மாண்டதால் மாதேவியும் மாண்டார்

நகமும் சதையும் விரலின் இயற்கை                    கீதமும் ஓசையும் குரலின் இயற்கை                    உடலோடு மனம் உயிரான இயற்கை                மனதோடு தொடர்பான தியானம் இயற்கை!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 18 June 2021

நல்லவரும் கெட்டவரும்

 

நல்லவரும் கெட்டவரும்

நல்லவரை நல்லவர் என சொல்பவர் எல்லாம் நல்லவரே

கெட்டவரை கெட்டவர் என சொல்லாதவர் எல்லாம் கெட்டவரே                                      

வாய்ப்பு இருந்து ஏய்த்து நல்லவர் என ஆனவர் எல்லாம் கெட்டவரே

வாய்ப்பு இருந்தும் ஏய்க்காது கெட்டவர் என ஆனவர் எல்லாம் நல்லவரே

காட்டிக் கொடுக்காது கெட்டவர் என ஆனவர் எல்லாம் நல்லவரே

காட்டிக் கொடுத்தே நல்லவர் என ஆனவர் எல்லாம் கெட்டவரே

கொள்ளை அடித்து கோடிக் கணக்கில் உண்டியலில் போட்டு நல்லவர் என ஆனவர் எல்லாம் கெட்டவரே

கொள்கைப் பிடித்து தெருக் கோடியில் குடிசையில் வாழ்ந்து கெட்டவர் என ஆனவர் எல்லாம் நல்லவரே!

- தஞ்சை த இராமநாதன்

முகத் திரை

 

முகத் திரை

பொய்த் திரை முகமும் பலருக்கு உண்டு பொய்யே திரையான முகமும் பலருக்கு உண்டு

காதல் செய்ய முகத் திரை பலருக்கு உண்டு களவு செய்ய முகத் திரையும் பலருக்கு உண்டு

காக்கிச் சட்டையில் முகத் திரை பலருக்கு உண்டு                                                                            கழகப் பெயரில் முகத் திரையும் பலருக்கு உண்டு

பணத்திற்காக பாசம் காட்டும் முகத் திரை பலருக்கு உண்டு                                                        பதவிக்காக மண்டியிடும் முகத் திரையும் பலருக்கு உண்டு

பந்தா காட்டி மிரட்டும் முகத் திரை பலருக்கு உண்டு                                                                            பங்காளியை காலி செய்யும் முகத் திரையும் பலருக்கு உண்டு

- தஞ்சை த இராமநாதன்

பெரியார்

 

பெரியார்

அடக்கு முறையை அடக்கிய பெரியார்                மூட நம்பிக்கையை முடக்கிய பெரியார்

தீண்டாமையை ஓட விரட்டிய பெரியார்              சமூக நீதியை நிலை நாட்டிய பெரியார்

பயமற்றுப் பேச சுதந்திரம் தந்த பெரியார் பகுத்தறியும் சமுதாயம் தந்த பெரியார் 

படித்தவருக்கும் பாடம் பயிற்றுநர் பெரியார் பக்குவமான பகுத்தறிவுப் பகலவர் பெரியார் 

அண்ணாவுக்கு and/or விளக்கிட்ட பெரியார் பெண்ணுரிமைக்கு அடித்தளமிட்ட பெரியார்

ஞானிக்கு இணையான அகழகர் பெரியார்      தாடிக்குத் துணையான முகழகர் பெரியார்

வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர் பெரியார் அறிவாளரை போற்றி மதித்தவர் பெரியார் 

செயற்கரிய செயல் செய்தவர் பெரியார்            செய்த செயலால் உயர்ந்தவர் பெரியார்!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 17 June 2021

பணத்தின் அடிமைகள்



பணத்தின் அடிமைகள்

தெரியாத நோயைத் தெரிந்தே பரப்புவதும் பணத்தினால்                                                              தெரிந்த நோயென சிகிச்சைப் படுத்தவதும் பணத்தினால்

மானிடப் பாசமே வேடமானதும் பணத்தினால்  மானிடப் பந்தமே வேடமானதும் பணத்தினால்

படிக்கத் தொடங்கியப் பயணமும் பணத்தினால்                                                              முடித்துத் தொடரும் பயணமும் பணத்தினால்

முட்டாள் முதலாளி ஆவதும் பணத்தினால்        முதலாளி முட்டாள் ஆவதும் பணத்தினால்

கெட்டவர்கள் அதிர்ந்து முந்துவதும் பணத்தினால்                                                              நல்லவர்கள் அறிந்து பிந்துவதும் பணத்தினால்

இல்லார்க்கு சர்க்கரை இலுப்பைப் பூவில் அதுவும் பணத்தினால்                                          இருப்போர்க்குக் கஞ்சி சாப்பாடு விடுதியில் அதுவும் பணத்தினால்!

- தஞ்சை த இராமநாதன்

நேரோடு நேராய்ப் பேசிய அண்ணா

 

நேரோடு நேராய்ப் பேசிய அண்ணா

ஆளும்வரை ஆளுபவர் கட்சியின் ஆட்சி அன்றுமுதல் அண்ணாவின் கட்சிதான் ஆட்சி

 பிரிந்து பிறந்தன பலவிதமானக் கட்சி அனைத்திலும் அண்ணாவின் படக் காட்சி

புதுமைப் பிறந்த இடம் அண்ணாவின் காஞ்சி ஆன்மிகத் தத்துவம் சிறந்த இடமும் காஞ்சி

ஏழையின் சிரிப்பால் மலர்ந்தக் காஞ்சி              மலர்ந்து தமிழ் மணம் பெற்றதும் காஞ்சி

அண்ணனாக வாழ்வில் வாழ்ந்து சென்றார் அண்ணாவாகவே வாழ்வோரை வென்றார்

உடுத்தினார் தனக்கென ஒரு தனி உடை நடத்தினார் தனக்கென ஒரு தனிப் படை

தமிழ்ப் பேச்சிலும் மிகுந்து நிற்கும் நகை நேரோடு நேராய் ஆங்கிலப்  பேச்சிலும் மிகை

மேடைப் பேச்சில் தன் பாணி உருவாக்கினார் சொல் வீச்சில்  தனிப் பாணி உருவாக்கினார்

தமிழோடு ஒப்பிட்டார் சீறிப் பாயும் புலியை    டில்லி பெற்றது தீராப் பெரும் கிலியை

ஒரு விரல் புறத்தைக் காட்டும் தத்துவம்              மூன்று விரல் அகத்தைக் காட்டும் தத்துவம்!

- தஞ்சை த இராமநாதன்


போற்றுவோரும் தூற்றுவோரும் நாமே!

 கோபமும் குணமும் சமம் கொண்டார் யார்?அகமும் புறமும் சமம் கண்டார் யார்?

தர்மம் பண்ணின மனதை மறப்பவர் யார்?        பணம் பண்ணாத மனதை மதிப்பவர் யார்?

இரை தேட இயலாத வறியார் யார்?                      இறை தேட முயலாத சிறியார் யார்?

இருக்கும்போது இகழைப் பெறாதவர் யார்?      இறக்கும்போது புகழைப் பெறுபவர் யார்?

பார்க்கும்போது போற்றாத உறவினர் யார்?    பார்க்காதபோது தூற்றாத மரபினர் யார்?

தன்னிலை நோக்கி அகம் பார்ப்பார் யார்?தனிநிலை நோக்கி புறம் பார்க்காதார் யார்?

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 16 June 2021

ஆயி தாயி அம்மா

 

தாயை ஆயி என்றாலும் தாயி என்றாலும் அம்மா உறவுதான் உயர்வானது எந்நாளும்

உடை மாறினாலும் அம்மா உறவு ஒன்றே காலம் மாறினாலும் அம்மா உணர்வு நன்றே

கட்டி அணைத்துக் காப்பதும் அம்மா இனம் மெல்லக் குட்டி கண்டிப்பதும் அம்மா மனம் 

நூலைப் போல சேலை என்பார் நூற்பார்  தாயைப் போல பிள்ளை என்பார் பார்ப்பார்

முன் பேசி சோதிப்பர் தாயின் நற்குணத்தை    பின் பேசி சாதிப்பர் சேயின் திருமணத்தை!

- தஞ்சை த இராமநாதன்


அரிதிலும் அரிது அரிதிலும் பெரிது

 

அரிதிலும் அரிது அரிதிலும் பெரிது

ஆணவம் அற்ற ஆடவரும் அரிது              ஆடம்பரம் அற்ற பெண்டிரும் அரிது        ஆளுமை மிக்க அரசும் அரிது              ஆரோக்கிய மிக்க வாழ்வும் அரிது

இவ்வுலகில் மானிடராய்ப் பிறப்பாரும் அரிது  இருக்கும் போது கொடுப்பாரும் அரிது இறக்கும் போது அழாதாரும் அரிது          இருந்தே இறப்பாரும் அரிதிலும் அரிது

ஈகைக் குணம் உள்ளோரும் அரிது                    ஈதல் செய்யும் குலத்தோரும் அரிது                    ஈரம் வற்றா உள்ளங்களும் அரிது                      ஈரடி வழியில் வாழ்தலும் அரிது

உண்மைப் பேசி வாழ்வோரும் அரிது            உறுதி மிக்க நெஞ்சினோரும் அரிது உழைத்து மட்டும் உயர்ந்தோரும் அரிது    உலக நல்வழியை அறிந்தோரும் அரிது

ஊனத்தை உள்ளினுள் கொள்ளாரும் அரிது    ஊனத்தைப் பழியா நல்லாரும் அரிது              ஊனத்தை மாற்றும் விஞ்ஞானியும் பெரிது    ஊனத்தைத் தேற்றும் விஞ்ஞானமும் பெரிது!

- தஞ்சை த இராமநாதன்




பூட்டியும் பிரியாதக் கூட்டு

 

பூட்டியும் பிரியாதக் கூட்டு

வீட்டு வாயிலில் ஒரு பெரிய பூட்டைப் போட்டு வீட்டின் பாதுகாப்பை நிலை நாட்டு

நாட்டு எல்லையில் ஒரு பெரிய கோட்டைப் போட்டு நாட்டின் பாதுகாப்பை நிலை நாட்டு

எப்படிப்பட்ட பூட்டானாலும் பொருத்தமான சாவியோடு சேர்ந்து விடும் கூட்டு

பூட்டைப் பூட்டியவுடன் பூட்டப்பட்ட பூட்டு பூட்டிய சாவியுடன் தடைப்பட்டு விடும் கூட்டு

உடைத்து எறிய வேண்டியப் பூட்டு பூட்டியே இருந்தாலும் உடனே உடைத்துக் காட்டு

அடிமைப் பூட்டு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 15 June 2021

யார் அவர் யாரோ?

யார் அவர் யாரோ?

திருநெல்வேலியில் அல்வா விற்பது யார்?

பாண்டிச்சேரியில் பதநீர் விற்பது யார்?

தஞ்சாவூரில் தண்ணீர் விற்பது யார்?

பள்ளியில் படிப்பை விற்பது யார்?

கோயிலில் சிலையைத் திருடுவது யார்?

தமிழின் தரத்தை தாழ்த்துவது யார்?

தமிழர் வீரத்தை வீழ்த்துவது யார்?

அநியாயம் செய்து அழியப் போவது யார்?

- தஞ்சை த இராமநாதன்


படிக்காமல் படித்தப் பாட்டி

 

படிக்காமல் படித்தப் பாட்டி 

கண்ணாடி இல்லாது கதையைப் படிக்கப் பார்க்கும் பாட்டி

படிக்க இயலாது படத்தை மட்டும் பார்த்து ரசிக்கும் பாட்டி

பக்கத்தைப் புரட்டாது படத்தை மட்டுமே பார்க்கும் பாட்டி

பார்த்தப் படத்தை பாடமாக நினைத்துப் படிக்கும் பாட்டி!

- தஞ்சை த இராமநாதன்


அனாதைக்கு அம்மா யார்?

 

அனாதைக்கு அம்மா யார்?

என்னைப் பெற்றெடுக்காத படத்தம்மா      என்னைத் தத்தெடுப்பாயா பட்டணத்தம்மா? 

நான் அழுதால் கண்ணீர் வெளி வராதம்மா  நான் கத்தினால் சத்த ஒலியும் வராதம்மா

பசியால் வயிர் எரிந்ததை அறிவேனம்மா          பசி தொடர்வதால் எரிவதையும் அறியேனம்மா

என்னையும் உன் பிள்ளையாக நினையம்மா  என் அம்மாவாகி என்னையும் அணையம்மா!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 14 June 2021

உயிருக்கு உயிர் கொடுப்போம்

 

உயிருக்கு உயிர் கொடுப்போம்

பொன்னைக் கொடுக்கலாம் பொருளைக் கொடுக்கலாம்!

நிலத்தைக் கொடுக்கலாம் வளத்தைக் கொடுக்கலாம்!

பணத்தைக் கொடுக்கலாம் குணத்தைக் கொடுக்கலாம்!

அன்பைக் கொடுக்கலாம் பண்பைக் கொடுக்கலாம்!

அறிவைக் கொடுக்கலாம் பரிவைக் கொடுக்கலாம்!

விருந்தைக் கொடுக்கலாம் மருந்தைக் கொடுக்கலாம்!

உண்ணக் கொடுக்கலாம் தின்னக் கொடுக்கலாம்!

அள்ளிக் கொடுக்கலாம் கிள்ளிக் கொடுக்கலாம்!

துண்டைக் கொடுக்கலாம் தொண்டைக் கொடுக்கலாம்!

உறுப்பைக் கொடுக்கலாம் வெறுப்பைக் கொடுக்கலாம்!

ஆடலைக் கொடுக்கலாம் பாடலைக் கொடுக்கலாம்!

கேட்டுக் கொடுக்கலாம் போட்டுக் கொடுக்கலாம்!

பேருக்காகக் கொடுக்கலாம் போருக்காகக் கொடுக்கலாம்!

சாதிக்காகக் கொடுக்கலாம் சதிக்காகக் கொடுக்கலாம்!

போட்டிக்காகக் கொடுக்கலாம் பேட்டிக்காகக் கொடுக்கலாம்!

சொத்தைக் கொடுக்கலாம் கெத்தைக் கொடுக்கலாம்!

இன்பத்திற்காகக் கொடுக்கலாம் துன்பத்திற்காகக் கொடுக்கலாம்!

ஏக்கத்தைக் கொடுக்கலாம் தூக்கத்தைக் கொடுக்கலாம்!

முகத்துக்காகக் கொடுக்கலாம் மோகத்துக்காகக் கொடுக்கலாம்!

சொந்தத்துக்காகக் கொடுக்கலாம் பந்தத்துக்காகக் கொடுக்கலாம்!

மனமிருந்தால் கொடுக்கலாம் பணமிருந்தால் கொடுக்கலாம்!

எதனைக் கொடுத்தாலும் - இதற்கு ஈடாகுமா?

- தஞ்சை த இராமநாதன்




சுற்று சூழலில் சீர்கேடு

 சுற்று சூழலில் சீர்கேடு (மறு பதிவு)

நீரையும் தாங்கி சிறக்குது பூமி                              நீர் தங்காது சிறக்காது பூமி                                அனைத்தையும் சுற்றி வளைக்குது காற்று        மூன்றும் சேர சுற்றுச் சூழலாகும் கூற்று 

இயற்கையோடு இயற்கையாக                    இயற்கையுடன் இயற்கையாக                              இயற்கையின் இயற்கைக்கு                                  உட்பட்டு வாழ்ந்த படிக்காத புத்திசாலிகளால் சுற்று சூழல் சீர்கெடாதக் காலம் அப்போது

ஆளுக்காள் அம்பலம் என்றாகி                              எல்லோருக்கும் எல்லாம் தெரியுமென்றாகி      எல்லோரும் படித்திருக்கோம் என்றாகி              மார் தட்டும் படித்த முட்டாள்களால்                      சுற்றுச் சூழல் சீர்கெடும் காலம் இப்போது 

இயற்கைக் காட்டை வெட்டி நாசமாக்கி            நாசமானதை செயற்கை நாடாக்கி                        நாட்டில் கயவர்கள் கூட்டத்தை அதிகமாக்கி காடுபோல் நாடும் தடம் மாறியது இப்போது!

- தஞ்சை த இராமநாதன


கெத்தோடு கெத்தாக...

 கெத்தோடு கெத்தாக... 

உங்க எல்லோருக்கும் வணக்கம்                          நமக்குள்ளே வேணாம் பிணக்கம்

ஓடி உழைத்து பணத்தைச் சேர்க்கோணும்        சேர்த்த பணத்தை பார்த்துச் சேமிக்கோணும்

விட்டுவிடக் கூடாது நம்ம கெத்தை                        விற்றுவிடக் கூடாது நம்ம சொத்தை

கூட்டுப் பிடிச்சா ரொம்ப உயராது வட்டி              கூட்டுக் கிடைச்சா உயரும் நம்மப் பட்டி

கூடியே வாழ்ந்தால் அதுவே  நன்மை                  கோடியே வந்தாலும் இதுவே உண்மை

பெண் உரிமயை விட்டுவிடக் கூடாது                  ஆண் உரிமையைத் தொட்டுவிடக் கூடாது

நாம் எல்லோரும் உழைக்கோணும் கண்ணு    உழைத்திட்டால் உயர்ந்திடும் நம்ம மண்ணு!

- தஞ்சை த இராமநாதன்

அன்புத் தாயே!

 

இறக்கப் பிறந்தாய் இரக்கம் கொள்                    சொல்லோடு அல்ல செயலோடு நில்

குற்றம் பார்க்காத நல்ல உள்ளம்                          சுற்றம் மனதில் நிலை கொள்ளும்

இறந்தும் இறவாதவர் மனதில் வாழ்க              அன்பால் விளையும் ஆற்றல் பெறுக

தண்டனைத் தராத மனமே வருக                          மன்னித்து வாழ வாய்ப்பைத் தருக

அவமானம் பொறு சன்மானம் தரும்                  குற்றமற்ற மனம் இறையருள் பெறும்

புன்னகை அன்பின் முதல் ஊற்று                        இவையாவும் அன்னையின் கூற்று!

- தஞ்சை த இராமநாதன்


கை பிடித்தவரை கை பிடித்தவர்

 

கை பிடித்தவரை கை பிடித்தவர்

கை பிடித்து கை கொடுத்து நடக்கும் நடை        கை பிடித்தவரை கை பிடித்து நடக்கும் நடை நடந்தப் பாதையில் நிமிர்ந்து நடக்கும் நடை கடந்தப் பாதையில் தொடந்து நடக்கும் நடை 

வாழ்க்கைப் பயணத்தில் சில மேடு பள்ளம் வழிப் பயணத்தில் பல ரோடு பள்ளம்                  பல நூறு உறவினர் அவங்க சொந்தம்              பல ஆயிரம் உற்றார் அவங்க பந்தம்

நண்பர்களோடு கதையைக் கதைக்க நாட்டம்  அன்பர்களோடு இசையை இசைக்கத் திட்டம் நடக்கும் வழியில் நடக்குது ஒரு நோட்டம் கடக்கும் வழியில் இருக்குது ஒரு தோட்டம்!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 12 June 2021

அகமும் புறமும்

 

அகமும் புறமும்

பட்டுப் புழுவின் அழகோ அழகு!

அழகில் நமக்கு ஆசையோ ஆசை!

புற அழகோடு மிளிரும் பெதும்பையே!

அக அழகோடும் வாழிய வாழியவே!

- தஞ்சை த இராமநாதன்


ஆனந்தக் குடில்

 

ஆனந்தக் குடில்

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

அங்கே ஆடாமல் இக்குடில் நிற்கும்!

தலைக்கனம் உள்ள நம் மானிடம்

வாயிலில் தலைகுனியும் உன்னிடம்!

சாணம் கொண்டு மெழுகிய வாசல்

மாக்கோலம் கண்ட நல்வாசல்!

பாய் போட்டு நாகரீக உபசரிப்பு

வாழை இலையுடன் விருந்தளிப்பு!

இது சேய்கள் நிறைந்த இல்லம்

அன்பிற்குக் குறைவில்லா இல்லம்!

உழைத்து வாழும் நல் உள்ளங்கள்

மறைந்து போகும் பல கள்ளங்கள்!

கோடைக் கேற்ற இதமான குளிர்ச்சி

குளிரில் கதகதப்பான மகிழ்ச்சி!

காலையில் நீர் ஆகாரம் சிறப்பு

வெயிலுக்கு இளநீர் மேலும் சிறப்பு!

கூடி வாழ்ந்தால் பெருகும் வாழ்வு

கூடிப் படித்தால் விலகும் தாழ்வு!

பகிர்ந்து பசியாறும் எளிய வாழ்க்கை

தசையாடும் ஆனந்த இவ்வாழ்க்கை!

- தஞ்சை த இராமநாதன்