Sunday, 31 July 2022

விலையை வைத்து மதிப்பிடல்

விலையை வைத்து மதிப்பிடல்

போதைப் பொருளை விற்பனை செய்ய எங்கும் உள்ளது தடை!
போதைப் புழங்கிகளைக் கைது செய்யவும் எங்கும் உள்ளது படை!
இங்கே தடையில் உள்ளதா குறை?
அல்லது படையில் உள்ளதா நிறை?
அங்கீகரிக்கப்பட்ட பொருளின் மதிப்பை நிர்ணயிக்கலாம் விலை!
அங்கீகாரமற்றப் பொருளின் மதிப்பை நிர்ணயிக்கலாமா விலை?

- தஞ்சை த இராமநாதன்



Saturday, 30 July 2022

நட்பு என்றால் என்ன?

 

நட்பு என்றால் என்ன?

பார்க்காமலே பலகாலம் பழகிப் பார்த்தவுடன் உயிர் நீத்த ஒரு நட்பு அது பலமான ஆந்தையார் சோழர் நட்பு

பார்த்துப் பார்த்து பலகாலம் பழகிப்
பார்க்காமலே உயிர் நீப்பதும் பல நட்பு
அது புலம் பெயர்ந்தார் தோழர் நட்பு

எப்போதுப் பார்த்தாலும் பார்த்தப் பின் எப்போதுப் பார்ப்போமோ என எண்ணும்
வண்ணம் எண்ண வைப்பது சில நட்பு

எப்போதுப் பார்த்தாலும் பார்த்த பின் ஏன்தான் பார்த்தோமோ என எண்ணும் வண்ணம் எண்ண வைப்பது பல நட்பு!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 29 July 2022

உதைக்க மாட்டாயா பசுவே?

 

உதைக்க மாட்டாயா பசுவே?

பாலைக் கறந்து அதில் பாதியளவு நீரைப் பக்குவமாய்க் கலந்தால் அது சமத்து
மடி நிறைந்து சுரந்தப் பாலை உன் சிசு பீச்சிக் குடித்தால் அதுவும் சமத்து
புல்லோடு புண்ணாக்கைக் கொடுத்து பாலைக் கறந்தால் அது சமத்து
கன்றை அவிழ்த்து ஊட்ட விட்டு உடனேப் பிரித்துக் கறந்தால் அதுவும் சமத்து
பலன் இருந்தால் கோ மாதாவெனக் கூவிக் கும்பிடுவதில் அதிச் சமத்து
பலன் இல்லையெனில் போ மாதாவென வெட்டிக் கொல்வதிலும் அதேச் சமத்து!

- தஞ்சை த இராமநாதன்


வேல் வீச்சுக்கு வேலு நாச்சியார்

 

வேல் வீச்சுக்கு வேலு நாச்சியார் 

அப்பா செல்ல முத்து அம்மா முத்து ஆத்தாள் பெற்றெடுத்த தீரத் திருமகள்
முத்து வடுகநாதரை மணமுடித்து
சிவகங்கையை ஆண்ட வீர மருமகள்
ஆங்கிலேயனை அலறவிட்டு தமிழரின்
வீரத்தை நிலை நாட்டிய தீரக் குலமகள்
குந்தவை நாச்சியார் இனக் குணத்தைப்
பெற்று வேல் ஏந்திய வீர நிலமகள்
பிறந்த மண்ணின் வீரம் காக்க தாக்கத் தயங்காது தாக்கிய மறத்தமிழ் மகள்
முதல் இந்தியப் பெண் போராளியான அரியப் பரம்பரையின் தலை மகள்!

- தஞ்சை த இராமநாதன்



Thursday, 28 July 2022

ராஜாவைக் கொல்ல ஆடும் ஆட்டம்

 

ராஜாவைக் கொல்ல ஆடும் ஆட்டம்

ராஜாவைப் பின் நிறுத்தி சிப்பாய்களை முன் நிறுத்தி ஆடும் ஆட்டம்
சிறு பலிக் கொடுத்து பெரும் பலி வாங்க இரு அறிவாளிகள் ஆடும் ஆட்டம்
ஒரு நகர்வு தவறினாலே வெட்டுப்படும் வாய்ப்பைக் கொடுக்கும் ஆட்டம்
அவசரப்பட்டு வெட்டினால் அடுத்தவரும்            வெட்டி வேட்டையாடும் ஆட்டம்
முன்னோக்கிக் குதித்துக் குதித்து இடம் அல்லது வலம் தாக்கும் குதிரையின் ஆட்டம் ராணி கோபம் கொண்டால் கண்ட திசையெல்லாம் தாக்கும் ஆட்டம்    இருபுறமும் ராஜா சாகாதிருந்தால்                அது சம நிலையில் முடியும் ஆட்டம்                      அந்தப்புறமோ இந்தப்புறமோ ராஜா செத்தால் முடிந்துவிடும் சதுரங்க ஆட்டம்!

- தஞ்சை த இராமநாதன்




Wednesday, 27 July 2022

காலை கையாக்கிய நாயாரே

 

காலை கையாக்கிய நாயாரே

குழந்தையை அமர வைத்து அயராது ஆட்டி    விட்டு ஆட வைக்கும் நாயாரே               ஊஞ்சலிலே உட்கார வைத்து விழ விடாது ஆர்வமாய் ஆட்டும் நாயாரே         
காலைக் கையாக்கி நாய்க்குக் கையில்லை என்பாரைப் பொய்யாக்கிய நாயாரே          
எப்படி ஆட்டினாலும் இப்படிக் கட்டிப் போட்டு ஆட்ட விட்டாரே நாயாரே!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 26 July 2022

எங்கும் எதிலும் கொரோனா

 

எங்கும் எதிலும் கொரோனா

எவரும் பார்க்காதக் கொரானா எவரும் பார்க்க விரும்பாதக் கொரோனா                    பிடிக்காதவரை பிடித்தவரைப் பார்க்க பயப்படச் செய்தக் கொரோனா                              பிடித்தவரை பிடித்தவரும் பார்க்க பயப்படச் செய்தக் கொரோனா                                  படித்தவரை படித்ததில் இல்லாததைப் படிக்க வைத்தக் கொரோனா                                  படுக்காதவரை படுக்க வைத்துப் பாடம் படிக்க வைத்தக் கொரோனா                                        வலிய வந்து வலியைத் தந்து நொந்து நோக வைத்தக் கொரோனா                                              சாதி மறந்து சமயம் மறந்து எல்லோரும் பயப்படும் ஒரே கடவுள் கொரோனா!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 25 July 2022

முதிர்ந்துக் கனிந்த உள்ளங்கள்

 

முதிர்ந்துக் கனிந்த உள்ளங்கள்

துணையாக இருந்து அதுவும் உற்றத் துணையாக இருந்தால் -
தள்ளாடித் தடுமாறினாலும் தவறில்லாத் திட்டத்தினில் இருப்பார்!

துணையாக இருந்து அதுவும் கற்றத்
துணையாக இருந்தால் -
தள்ளாடித் தடுமாறினாலும் மாறாதத்
தடத்தினில் இருப்பார்!

தூண்போல் இருந்து உறுதுணையாகத்
துணையே இருந்தால் -
தேனாய் இனித்து மனதில் திளைத்து
துடிப்புடன் இருப்பார்!

தூக்கக் குறட்டை தூங்காத அரட்டைத் தாங்குபவராக இருந்தால் -
தெளிவுமிக்கப் பாட்டன் பாட்டியாய் சுயத் தெளிவுடன் இருப்பார்!

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 24 July 2022

காற்றோடு கலந்தது கானம்

 

காற்றோடு கலந்தது கானம்

உள் மூச்சுக் குழலிலே உயிரைத்தரும் வெளிப்புறக் காற்றே
புல்லாங்குழலிலே மறு உயர்வைப்பெறும் அகப்புறக் காற்றே
உடலெனும் உள் கூட்டிற்கு உயிர்க் கொடுக்கும் வெளிப்புறக் காற்றே
புல்லாங்குழலெனும் கூட்டிற்கு உயிர்க் கொடுக்கும் அகப்புறக் காற்றே
மூக்கில் நுழைந்து பிராணனாய் உயிரைத்    தரும் வெளிப்புறக் காற்றே
வாயில் வெளிவந்து பிரமாதமாய் இசைத் தரும் அகப்புறக் காற்றே
உள்ளிருந்து வெளிவரும் கல்யாணி ராக
ரகத்தின் அகப்புறக் காற்றே
விளங்கச் சொன்னால் வெற்றிடத்தை
நிரப்பி இசையாக்கும் அற்புதக் காற்றே!

- தஞ்சை த இராமநாதன்


தூக்கமும் தாகமும்

தூக்கமும் தாகமும்

பட்டி தொட்டியெல்லாம் காலம் தொட்டு தொட்டு தாலாட்டும் தொட்டில் கண்டோம்
பரணி தரணியெல்லாம் தொட்டில் கட்டி
தாலாட்டும் தாயை வீட்டில் கண்டோம் வாசலில் மாடு கட்டி வைக்கோல் இட்டு குளிரில் கொட்டகையில் கண்டோம்

மிஞ்சியக் கழனித் தண்ணியைத் தவிடு
புண்ணாக்கோடு குடிக்கக் கண்டோம் அத்தனையும் அரிதாய்ப் போனாலும்              எத்தனை எளிதாய் வலைதளத்தில் கண்டோம்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 23 July 2022

கூடையும் குடி காக்கும்

 

கூடையும் குடி காக்கும்

ஓலையில் கூடையைப் பின்னிப் பின்னிப் பழகலாம்
ஓடையில் கூடையால் மீனை பிடித்துப் பிடித்துப் பழகலாம்
சாலையில் கூட கூடையை விற்று விற்றுப் பிழைக்கலாம்
வேலையில் கூட கூடையை சுமந்து சுமந்துப் பிழைக்கலாம்
தலையில் கூட தூக்கி காலால் நடந்து நடந்து விற்கலாம்                                                                    தொலைவில் கூட வண்டியை மிதித்து மிதித்து விற்கலாம்!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 22 July 2022

ஆராமல் ஆத்திக் கொடுத்தல்

 

ஆராமல் ஆத்திக் கொடுத்தல்

கடந்த காலத்தில் அன்றும் பிரபலம்
காலம் கடந்தாலும் இன்றும் பிரபலம்
கும்பகோணத்தில் அவைப் பிரபலம்
நம்ம கோணத்தில் சுவைப் பிரபலம்
தினமும் குடித்த மணமும் பிரபலம்
பிடித்துக் குடித்த தினமும் பிரபலம்
படிக்கும்போதே குடித்ததால் பிரபலம்
குடிப்பதற்காகவேப் படித்ததால் பிரபலம்
ஆத்தி ஆத்திக் கொடுத்ததால் பிரபலம்
ஆத்தி ஆராமல் குடித்ததால் பிரபலம்!

- தஞ்சை த இராமநாதன்


யார் பணக்காரன்? யார் குணக்காரன்?

 

யார் பணக்காரன்? யார் குணக்காரன்?

கண்டவர் காலில் விழுந்து மானமிழந்து பணம் பார்த்தால் அவன் பணக்காரனா?
ஆள்பவர் காலில் விழுந்து இனமிழந்து
பதவிப் பெற்றால் அவன் குணக்காரனா?
பணம் திடீரென வந்ததால் மற்றவரை ஏழையெனப் பார்ப்பவன் பணக்காரனா?
பாவச் செயல் பல செய்து பதவியோடு வாழும் பச்சோந்தி குணக்காரனா?
கொள்ளையடித்தக் கேடி கோடிகளைச்
சேர்த்ததால் அவன் பணக்காரனா?
ஏழைக்குக் கொடுக்காது உண்டியலில் லட்சத்தைப் போடுபவன் குணக்காரனா?
போதுமென்ற மனதோடு உழைத்து ஈட்டி வறுமையற்று வாழ்பவனே பணக்காரன்!
அகத்தோடு புறத்தை சமநிலைப்படுத்தி
மாசற்று வாழ்பவனே குணக்காரன்!

- தஞ்சை த இராமநாதன்


Thursday, 21 July 2022

எது பள்ளி?

 

எது பள்ளி?

பள்ளியில் நல்ல பாடத்தைக் கற்று தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது பள்ளி
பள்ளியில் சிறைக் கைதியாக இருந்து மன அழுத்தம் பெற்றால் அது பள்ளியா?
பள்ளியில் நல் ஒழுக்கத்தைக் கற்று
வெளியில் வந்தால் அது பள்ளி
பள்ளியில் ஒழுங்கீனத்தைப் பெற்று வெளியில் வந்தால் அது பள்ளியா?
தகுதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்பப் பாடம் நடத்தினால் அது அர்த்தமுள்ளப் பள்ளி
தகுதிக்கு அப்பாற்பட்டப் பாடம் நடத்தி  விரும்பாததைத் திணிப்பது பள்ளியா?
பார்த்ததும் கும்பிட வைக்கும் நிலையில்  ஆசிரியர்கள் இருந்தால் அது பள்ளி
பார்த்ததும் குட்டிட வைக்கும் நிலையில்
ஆசிரியர்கள் இருந்தால் அது பள்ளியா?

- தஞ்சை த இராமநாதன்


Wednesday, 20 July 2022

அம்பும் அன்பும்

 

அம்பும் அன்பும்

முதுகில் குத்திய அம்புக் காயங்கள் தந்ததோ மறக்க முடியாத சோகங்கள்
மார்பில் தூக்கிய அன்புச் செல்வங்கள் தந்ததோ மறக்க முடியாத சுகங்கள்
முதுகில் தாக்கிய அம்பின் சோகங்கள் இறக்கும் முன்பே மறந்துப் போகும்
மார்பில் தேக்கிய அன்பின் சுகங்கள் இறந்தால் மட்டும் இறந்துப் போகும்
அம்பைக் கொண்டு வீண் வம்பை செய்வோரிடம் ஒதுங்கிப் போகனும்
பண்பைக் கொண்டு தன் அன்பைக் கொடுப்போரிடம் ஒத்துப் போகனும்!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 19 July 2022

விளைந்து அரிசியாக வந்த நெல்

 

விளைந்து அரிசியாக வந்த நெல்

சொந்த நிலத்தில் விளைந்து விரைந்து அரிசியாக வெகுதூரம் செல்லும் நெல்லே

உமியை விலக்கியப்பின் எல்லா ரக நெல்லும் திறப்பது அரிசிப் பல்லே

சொந்த சேற்று நிலத்தில் விளைந்தாலும் வீட்டிலேயே அரிசியாகி சோறாகாத நெல்லே

கடையிலிருந்து தான் விளைந்த வீட்டிற்கே அரிசியாக வரும்போது கலந்திருக்கும் கல்லே 

உன்னைக் கடையில் வாங்கித் தின்ன கூட்டம் கூடுவதை அறிவாயா நெல்லே?

- தஞ்சை த இராமநாதன்


எப்போதும் அப்பா அப்பாதான்

 

எப்போதும் அப்பா அப்பாதான் 

அப்போது அப்பா இருந்தார்
இப்போதோ அப்பா இறந்தார் அப்போது என்னுருவில் இருந்தார் இப்போதோ என்னுயிரில் மறைந்தார் 

அப்போது தன்மானத்துடன் வாழ்ந்தார் இப்போதோ என்மானத்துடன் கலந்தார்
அப்போது நான் அழ நினைத்தாலும் தேற்றிட அழாததுபோல் நடித்தார்

இப்போது நான் கதறி அழுதாலும்                        தேற்றிட முடியாது அழுதே நொடித்தார் அப்போதும் இப்போதும் எப்போதும் அப்பா அப்பாதான்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 17 July 2022

சீருடை சிறார்களின் சிரிப்பு

 

சீருடை சிறார்களின் சிரிப்பு

தலைக்கனம் மறந்து தரையில் அமர்ந்து மனம் மகிழ்ந்து மலர்ந்தச் சிரிப்பு
சரிசமமாய் அமர்ந்து சாதியினை மறந்து பாட சாலையில் மழலையரின் சிரிப்பு
பந்தாவை மறந்து படிப்பதை நினைந்து
பலம் வாய்ந்த நட்புறவின் சிரிப்பு
பாடம் படிப்பதை தினமும் தொடர்ந்து
படம் பிடிப்பதை அறிந்ததும் சிரிப்பு!

- தஞ்சை த இராமநாதன்



வாலைப் பிடிக்கும் சட்டம்

 

வாலைப் பிடிக்கும் சட்டம்

தடை செய்யப்பட்டது நெகிழியெனில் தடை செய்யப்படாதது மகிழியா என்ன?
புதுசைத் தடுக்க சட்டம் வேண்டுமெனில்
பழசை அப்புறப்படுத்தத் திட்டம் என்ன?
சட்டம் போட்டுத் தடுத்தால் தயாரிப்பதை சரியாகத் தடுத்து விடாலாமெனில்
தயாரித்த நெகிழியைத் தடுக்கச் சட்டம் போடுவது வாலைப் பிடிக்கவா என்ன?

- தஞ்சை த இராமநாதன்



Friday, 15 July 2022

அவரிடம் அரசியலார் கற்றப் பாடம்

 

அவரிடம் அரசியலார் கற்றப் பாடம்

எளிமையுடன் வாழ்ந்ததால்
வறுமையுடன் வாழ்ந்தார்
கபடமின்றி வாழ்ந்ததால்
கவலையுடன் வாழ்ந்தார்
தமிழனுக்காக வாழ்ந்ததால்
தமிழனாலேயே வீழ்ந்தார்
பாடசாலை அமைத்ததால்
பாடம் பயின்று இறந்தார்

ஆகவே - இக்கால அரசியல்வாதி,

அவரைப்போல் வாழத் துணியாது
ஆதாயத்தைப் பார்க்கத் துணிந்தார்!

- தஞ்சை த இராமநாதன் 

உள்ளங்கையில் உலகம்

 

உள்ளங்கையில் உலகம்

தக்கத் தருணத்தில் நல்ல உதவி
கிடைக்குமென நினைப்பது நம்பிக்கை
தக்கத் தருணத்தில் மெல்ல நழுவிச் செல்வது பலருக்கு வாடிக்கை
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டு போராடிக் கொண்டிருப்பது கோரிக்கை
உழைப்போரை ஏமாற்றி வேடம் போட்டு
சுரண்டிக் கொண்டிருப்பது வேடிக்கை
தேர்தலுக்குத் தேர்தல் தன் தொகுதி சிங்கப்பூர் ஆகுமென்பது அறிக்கை
தேர்தலுக்குப் பின் ஏழை வாக்காளருக்கு          கிடைப்பதில்லை உண்ணப் பருக்கை
உழைத்ததால் உள்ளங்கை காய்த்துப்போய்    காணாமல் போனதோ கையில் ரேகை
வண்ணமாக வரைந்து பூமத்திய ரேகை வந்தாலும் மறைந்ததோ கையின் ரேகை!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 13 July 2022

சுமக்காது கடந்து செல்வோம்

 

சுமக்காது கடந்து செல்வோம்

குழிப் பறிப்போரை தலைமேல் வைத்து மதிக்காது காலடியில் வைப்பதே சரி
கோள் சொல்லியே பழக்கப்பட்டோரை கோல் அடிப்பதைப்போல் அடிப்பதே சரி
படிக்காமலே படித்தோர்க்கு பாடம் புகட்ட
நினைப்போருக்கு பாடம் புகட்டுவதே சரி
எச்சில் இலை கோபுரத்தில் ஒட்டினாலும் காற்றை வைத்து அகற்றுவதே சரி
ஏறிய ஏணியை ஓங்கி உதைப்போரை ஏணியே இல்லாது அகற்றுவதே சரி
பொறாமையுடன் பொய் உரைப்போரை
பொறுமையுடன் ஒதுக்குவதே சரி
ஊர்க் குருவி உயர உயரப் பறந்தாலும்
பருந்தாகாதென உணர்த்துவதே சரி!

- தஞ்சை த இராமநாதன்


இறந்தும் தொடரும் அழுகை

 

இறந்தும் தொடரும் அழுகை

இருந்தவரை இருந்தவரின் அருமை இழந்தார்க்குத் தெரிந்ததுமில்லை
இருந்தவரை இறந்தவரின் பெருமை இருப்பார்க்குப் புரிந்ததுமில்லை
இறக்கும்வரை இருந்தவரை சிலபேர் காரணத்தோடு பற்றாமலுமில்லை
இறக்கும்வரை இல்லாதவரை பலபேர் காரணமற்று தூற்றாமலுமில்லை
பொய்யானதைக் கண்டு இறக்கும் முன் இறந்தவர் அழாமல் இருந்ததுமில்லை மெய்யானதைக் கண்டு இறந்த பின் இறந்தவர் அழாமல் இருப்பதுமில்லை!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 12 July 2022

சேற்றினிலே சோற்றைக் காணலாம்

 

சேற்றினிலே சோற்றைக் காணலாம்

பயிரைப் பறித்து பயிரை முடிந்துக் கட்டி வயலில் பயிர் மூடியை விளம்பினோம்
முடிந்தப் பயிரின் முடிச்சை அவிழ்த்து
இனுக்கு இனுக்காக சேற்றில் நட்டோம்
உள்ளங்கை முதல் முழங்கால் வரை    சோறின் சேற்றில் நனைந்தே நின்றோம் 
கால் கடுக்க கை வலிக்க உடல் வியர்க்க
வெயிலில் கிடந்து நோயைக் கடந்தோம்
ஆனால் இன்று,
இயந்திரத்தை இயங்கிட வைத்தோம் இயங்கியோரை நோய்ப்பட வைத்தோம்!

- தஞ்சை த இராமநாதன்






Monday, 11 July 2022

ஆடிய ஆட்டமும் ஓடிய ஓட்டமும்

 

ஆடிய ஆட்டமும் ஓடிய ஓட்டமும்

பணத்தை வைத்து பதவியை வைத்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடலாம்
ஈவு இரக்கமற்று கண்டபடி சுட்டுத்தள்ளி
கொன்றபின் வீரனென கொண்டாடலாம்
வேட்டிக் கட்டி மீசைக் காட்டி தன்மான வீரனென வீராப்பைக் காட்டலாம்
குடும்பத்தையே கோலோச்ச வைத்து நாட்டையே நாட்டாமை செய்யலாம்
ஆள்வதும் முடிந்து ஆட்டமும் முடிந்தால்
ஆண்டதை விட்டு ஆண்டியாய் ஓடலாம்!

- தஞ்சை த இராமநாதன்


Sunday, 10 July 2022

ஆப்பிள்...காயா? அல்லது பழமா?

 

ஆப்பிள்...காயா? அல்லது பழமா?

பழுக்காது பழமாவதுதான் ஆப்பிள்
பழுத்தாலும் காயேதான் ஆப்பிள்
அழுகாது தேறியப் பழம்தான் ஆப்பிள்
அழகு ஏறியப் பழம்தான் ஆப்பிள்
பிடித்துக் கடித்தால் பிடிபடும் ஆப்பிள்
கடிக்கப் பிடித்தால் கடிபடும் ஆப்பிள்
விளைவால் சிறந்தது சிவப்பு ஆப்பிள்
விலையால் உயர்ந்தது பச்சை ஆப்பிள்!

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 9 July 2022

ஊழல் செய்வதும் ஊழ்வினையா?

 

ஊழல் செய்வதும் ஊழ்வினையா?

அரசுப் பணத்தை தீவினை செய்து
நல்லவராய்ப் பாவனை செய்து
ஆயிரம் கோடிகளை ஆராதனை செய்து
சாதனையெனப் போதனை செய்து
பதவிப் போனதும் சோதனை செய்தால்
கூடாதென ரோதனை செய்வதா?

- தஞ்சை த இராமநாதன்


Friday, 8 July 2022

காசின் மீது ஆசை

 

காசின் மீது ஆசை

இல்லாதக் காசைப் பெருக்க ஆசை
பெருக்கும் ஆசையால் பொறுக்கவும் ஆசை
இருக்கும் காசை அபகரிக்க ஆசை
அபகரித்தக் காசைப் பெருக்கவும் ஆசை
இல்லாததை இருப்பதாக்குவது ஆசை
இருப்பதை இல்லாததாக்குவதும் ஆசை!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 5 July 2022

மரம்போல் வாழ முடியுமா?

 

மரம்போல் வாழ முடியுமா?

வருவோர் போவோர்க்கெல்லாம் நிழல் கொடுத்து ஆக்ஸிஜனைத் தரும் மரம்
பறவைகள் இளைப்பாற கிளையோடு                இலை கொடுத்து காக்கும் மரம்
வெய்யில் அடித்தாலும் உள் வாங்கி உணவாக்கிக் கொள்ளும் மரம்
பூத்தபின் காய்த்துக் குலுங்கி கனிவான பழத்தை தாராளமாய்த் தரும் மரம்
மரம் வேண்டுமென வெட்டினாலும்                  மரம் வேண்டாமென வெட்டினாலும்
வெட்டியாய் வெட்டியவர்க்கும் விறகாகி எரிந்து மடிந்து உரமாகிடும் மரம்!

- தஞ்சை த இராமநாதன்


Monday, 4 July 2022

அந்தக்கால ஞாபகம்

 

அந்தக்கால ஞாபகம்

வீட்டைச் சுற்றி குஞ்சுகளோடு கோழி கொக்கரித்து சுற்றி வந்ததே தோழி
வீட்டை விட்டு கொல்லைக் காட்டோடு குஞ்சுகளோடு சுற்றி வருகிறதே தோழி
வீட்டு வாசலிலேயே கோழியோடு                  குஞ்சுகளைப் பார்த்தோமே தோழி
நாட்டை விட்டு கோட்டை விட்டதோடு                வீட்டையும் விட்டு விட்டோமோ தோழி?

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 2 July 2022

கையோடு சேர்ந்த கைபேசி

 

கையோடு சேர்ந்த கைபேசி

கையைத் தாக்கி மெய்யைத் தாக்கினாலும் தாக்கட்டும்
உறவைப் புறக்கணித்து மரபைப் புறக்கணித்தாலும் புறக்கணிக்கட்டும் சாப்பிடுவதை மறக்கடித்து கூப்பிடுதை மறக்கடித்தாலும் மறக்கடிக்கட்டும்
இளமையை இழக்கடித்து முதுமையை இழக்கடித்தாலும் இழக்கடிக்கட்டும்
இனி கையை விட்டு அகலவே அகலாது கையோடு சேர்ந்த கைபேசி!

- தஞ்சை த இராமநாதன்


இயற்கையான வளம் வேண்டும்

 

இயற்கையான வளம் வேண்டும்

மலை மீது மரமாவென மளைக்க வேண்டாம்
வெடி வைத்து மலையைத் துளைக்க வேண்டாம்
இயற்கையின் வரத்தை தொலைக்க வேண்டாம்
பணத்திற்காக மலை வளத்தை கலைக்க வேண்டாம்!

- தஞ்சை த இராமநாதன்


Friday, 1 July 2022

அவரவரை அவரவரே அறிவார்

 

அவரவரை அவரவரே அறிவார்

சோதனையால் வேதனையோ
வேதனையால் சோதனையோ
காலத்தின் கோலமோ
கேவலத்தின் காலமோ
சாபத்தின் கோபமோ
கோபத்தின் சாபமோ
பிரிந்தத் துயரோ
துயரத்தின் பிரிவோ
வறுமையின் கொடுமையோ
கொடுமையான வறுமையோ
போட்டியால் பொறாமையோ
பொறாமையால் போட்டியோ...

அவரவர் மனதை அவரவரே அறிவார்
அடுத்தவர் மனதை எவரறிவார்?

- தஞ்சை த இராமநாதன்