Tuesday, 30 July 2024

நண்பர்களே!

நண்பர்களே!

தொடக்கப் பள்ளிக்குப் போகுமுன் தொடங்கிய நட்பு காமராஜ் நட்பு
தொடக்கப் பள்ளியைத் துவங்கியபோது தொடங்கிய நட்பு மகாத்மா நட்பு

நான்காம் வகுப்பில் படிக்கும்போது
நானடைந்த நட்பு டாங்கே நட்பு
ஆறாம் வகுப்பில் படிக்கும்போது ஆர்வமிகுந்த நட்பு குமார் நட்பு

12ம் வகுப்பில் படிக்கும்போது
பழக்கமான நட்பு சீனிவாசன் நட்பு
இளங்கலைப் பட்டம் படிக்கும்போது
இனிமையான நட்பு இராமசாமி நட்பு

முதுகலைப் பட்டம் படிக்கும்போது
முக்கியமான நட்பு ஈஸ்வரமூர்த்தி நட்பு
படிப்பை முடித்து வேலை தேடும்போது
பலமான நட்பு திருநாவுக்கரசு நட்பு

கள்ளமில்லா நட்பு கருணாநிதி நட்பு                                                                                                          இல்வாழ்க்கைப் பயணத்தின்போது இன்பமிகு நட்பு அன்பரசி நட்பு  இறக்கும்வரை பூமியில் இருக்கும்போது இல்லறத்தின் நட்பு நற்பிள்ளைகள் நட்பு!

என் கவிதையைப் படித்து முடித்துப்        பாராட்டும் நட்பு எனக்குப் பிடித்த நட்பு!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 28 July 2024

பெற்றோர் தினம்

 

என்னைப் பெற்றோரே!

பெற்ற பயனை நீவிர் பெற என்னைப் பெற்றீரே என் பெற்றோரே
பிறந்த பயனை நான் பெறவும் என்னைப் பெற்றுள்ளீர் என் பெற்றோரே!

மனித நேயத்தோடு வாழ என்னைப்
பெற்றீரே என் பெற்றோரே
மனித தர்மத்தோடும் வாழும் என்னைப்
பெற்றுள்ளீர் என் பெற்றோரே!

அன்புத் துணையோடு வாழ என்னைப்
பெற்றீரே என் பெற்றோரே
அன்பு இணையோடும் வாழும் என்னைப்
பெற்றுள்ளீர் என் பெற்றோரே!

அயல் நாட்டில் வாழும்படி என்னைப்  பெற்றீரே என் பெற்றோரே
அருமையான நாட்டில் வாழ என்னைப் பெற்றுள்ளீர் என் பெற்றோரே!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 25 July 2024

செய்வதை செவ்வெனச் செய்

செய்வதை செவ்வெனச் செய்

அதையாவது செய்துவிட வேண்டுமென நினைப்போரெல்லாம்
அதையே செய்து முடிப்பார்கள்

இதையாவது செய்துவிட வேண்டுமென
நினைப்போரெல்லாம்
இதையே செய்து முடிப்பார்கள்

எதையாவது செய்துவிட வேண்டுமென
நினைப்போரெல்லாம்
எதையோ செய்து முடிப்பார்கள்

அப்படியாவது செய்ய வேண்டுமென
நினைப்போரெல்லாம்
அப்படியே செய்து முடிப்பார்கள்

இப்படியாவது செய்ய வேண்டுமென
நினைப்போரும்கூட
இப்படியே செய்து முடிப்பார்கள்

எப்படியாவது செய்துவிட வேண்டுமென
நினைப்போரெல்லாம்
எப்படியோ செய்து முடிப்பார்கள்

அதையோ இதையோ எதையோ
அப்படி இப்படி எப்படிச் செய்தாலும் செய்வதை செவ்வெனச் செய்தால் செய்தபின் செய்தவருக்குச் சிறப்பு!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 21 July 2024

மனதில் நிலைத்த என் மாமரங்கள்

 

மனதில் நிலைத்த என் மாமரங்கள்

மேலக்கொல்லையின் மேலக் கடைசியில் இருந்த மல்கோவா மரமே!                மாங்காயைப் பறித்துக் கீழே போட்டதும் தெறித்து விடும் மென்மைமிகு மரமே!

பரந்து விரிந்த பெரிய மரத்தடியில் நான் தரையில் அமர்ந்தே பறித்த நீல மரமே!
உன் நிழலில் அமர்ந்து பறித்து அடுக்கிப் பரவசமடைய வைத்த நற்சுவை மரமே!

சின்ன மரமாக இருந்தாலும் பெரியளவு மாங்காயைக் கொடுத்த ஒட்டு மரமே!
காயாக உண்டபோதும் தனிச் சுவை
பழமாக இனியக் கனிச் சுவை மரமே!

களத்தோரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்த செந்நிற காயின் செந்தூரா மரமே!
மாவுபோல் கடிபட்டுத் தனி மணத்தோடு
இரண்டு கிளையாக வளர்ந்த மரமே!

தரையோடு படுத்து தலை நிமிர்த்தி உருண்டை மாங்காய் போரடி மரமே!
அடை மாங்காய் வைக்க அருமையான நொண்டி மரமெனப் பெயருடைய மரமே!

மரத்திலேயே பழுத்துத் தானாக விழுந்து கமகமவென மணக்கும் வாசல் மரமே!
நாரோடு இருந்தாலும் நாறும் இனிக்கும்
தோலும் இனிக்கும் நற்கனி மரமே!

மாங்காய்ப் பறித்த நாட்களை மனதிலே அசைபோட வைக்கும் என் மாமரங்களே!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 17 July 2024

உயிரைக் காக்கும் நெல் மணிகள்

உயிரைக் காக்கும் நெல் மணிகள்

நாற்றங்காலில் கால் பதித்து 
காலை முதல் மாலை வரை உழுது
உழப்பட்ட சேற்றைச் சமப்படுத்தி
நன்னீரை நிரப்பித் தெளிய வைத்து            ஊறி முளை விட்ட விதையை எடுத்து
கூடையில் வைத்துச் சுற்றி விதைத்து
பருவம் வரும்வரை நாற்றை வளர்த்து
பருவம் வந்தபின் நாற்றைப் பறித்து
வயலின் உழையில் நடவை முடித்து
நீர்ப் பாய்ச்சி வரப்பு மிதித்து வளர்த்து
உரத்தை வீசிக் களையைப் பறித்து
பயிரைக் காக்கப் பூச்சி மருந்து தெளித்து
கருக்காய் ஆகாமல் நெல்மணிக் காத்து
பொன்னிறமாகும் கதிரைப் பார்த்து
கதிர் அரிவாள் வைத்து அறுத்து எடுத்து
அரி அரியாய் வயலில் பரப்பி வைத்து
கட்டுக் கட்டாய்க் கட்டி தலையில் தூக்கி
களம் கொண்டுபோய் அரியை அடித்து
உதிர்ந்த நெல்லை பொலியில் குவித்து
கூடை நெல்லை தோளில் அணைத்து
காற்றோடு பதரைப் பறக்க வைத்து
முறம் கொண்டு பதரை வீசி எடுத்து
கட்டிய மூட்டையில் அழகாய் இருந்து
மனித உயிரைக் காக்கக் காத்திருப்பது    அரிசி தரும் பொன் நிற நெல் மணிகள்!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 12 July 2024

சரபோஜி கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் M.M



சரபோஜி கல்லூரி முன்னாள்
தமிழ்ப் பேராசிரியர் M.M
(ஆம்பலாப்பட்டு முனைவர் மு.முத்துசாமி அவர்களின் 7வது வருட நினைவு நாள்: 13 July 2026)

உங்கள் ஊரில் உள்ள காக்கைகளின் எண்ணிக்கையை எண்ணியதுண்டோ?

எண்ணியுள்ளேன் எனச் சொல்வார் எண்ணியது எப்படியென எண்ணவும் செய்வார்
எங்களூரில் 248 காக்கைகள் என்பார்
குறைந்தால் வெளியூர்ப் பயணமென்பார்
கூடினால் விருந்தாளி வருகையென்பார்

ஏனென்ற கேள்வியைச் சரியாகத் தட்டிக் கேட்பார்
ஏன் என்ற கேள்வியைத் தவறாது கேட்கவும் சொல்வார்
எதற்குக் கேள்வியெனச் சரியாக யோசிக்கச் சொல்வார்
என்ன கேள்வியெனத் தவறாது யோசிக்கவும் சொல்வார்

ஆம்பலான அல்லிக்கு மருதமென்பார்          ஆ எனும் பசுவுக்கு முல்லையென்பார்
இருநிலம் சேர்ந்த ஒரு சிற்றூரென்பார்
அதுவே நமது ஆம்பலாப்பட்டு என்பார்!

(மறக்க முடியாத மாண்புகள் நிறைந்த என் தாய் மாமாவை / மாமனாரை வணங்குகின்றேன்!)

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 8 July 2024

வெட்டிக் கொல்கிறார்கள்

வெட்டிக் கொல்கிறார்கள்

வெட்டிக் கொள்கிறார்கள்
வெட்டியும் கொல்கிறார்கள்
கூடிக் கொள்கிறார்கள்
கூடியும் கொல்கிறார்கள்
தேடிக் கொள்கிறார்கள்
தேடியும் கொல்கிறார்கள்
ஓடிக் கொள்கிறார்கள்
ஓடியும் கொல்கிறார்கள்
ஆடிக் கொள்கிறார்கள்                                ஆடியும் கொல்கிறார்கள்                              பேசிக் கொள்கிறார்கள்                            பேசியும் கொல்கிறார்கள்                          மோதிக் கொள்கிறார்கள்                        மோதியும் கொல்கிறார்கள்                    மறைந்து கொள்கிறார்கள்                  மறைந்தும் கொல்கிறார்கள்                          கர்வம் கொள்கிறார்கள்                      கர்வத்தாலும் கொல்கிறார்கள்                      காமம் கொள்கிறார்கள்                    காமத்தாலும் கொல்கிறார்கள்                    கர்மம் கொள்கிறார்கள்                      கர்மத்தாலும் கொல்கிறார்கள்

மிருகத்தனம் கொள்ளாதீர்கள்
மிருகத்தனத்தாலும் கொல்லாதீர்கள்!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 2 July 2024

யகரத்தில் கரம்

இதயத்தை இதமாக்கிடும் யகரத்தை நீக்கினாலும் (இதயம் - இதம்)
கலயத்தைக் கலமாக்கிடும் யகரம் நீங்கினாலும் (கலயம் - கலம்) 
இனியதை இனிதாக்கிடும் யகரத்தை நீக்கினாலும் (இனியது - இனிது)
புதியதைப் புதிதாக்கிடும் யகரம் நீங்கினாலும் (புதியது - புதிது)
பந்தயத்தைப் பந்தமாக்கிடும் யகரத்தை நீக்கினாலும் (பந்தயம் - பந்தம்)
பரப்பியதை பரப்பிதாக்கிடும் யகரம் நீங்கினாலும் (பரப்பியது - பரப்பிது)
விடயத்தை விடமாக்கிடும் யகரத்தை நீக்கினாலும் (விடயம் - விடம்)
விஷயத்தை விஷமாக்கிடும் யகரம் நீங்கினாலும் (விஷயம்- விஷம்)
பயணத்தைப் பணமாக்கிடும் யகரத்தை நீக்கினாலும் (பயணம் - பணம்)
பணயத்தையும் பணமாக்கிடும் யகரம் நீங்கினாலும்! (பணயம் - பணம்)

- தஞ்சை த இராமநாதன்

Monday, 1 July 2024

வேண்டியது வேண்டும்

வேண்டியது வேண்டும்

வேண்டியே வேண்டாததை விடுவோம் 
வேண்டியதை வேண்டியே பெறுவோம்
வேண்டாததை வேண்டாமல் விடுவோம்
வேண்டியே வேண்டியதைப் பெறுவோம்

வேண்டியவரை வேண்டிடச் செய்வோம் வேண்டாதவரை வேண்டவும் செய்வோம்
வேண்டாதவற்றை வேண்டாது விடுவோம்
வேண்டியவற்றை வேண்டிப் பெறுவோம்

வேண்டியதை வேண்டியவருக்காக வேண்டுவோம்!

- தஞ்சை த இராமநாதன்