Sunday, 29 October 2023

அதிஷ்டக்கார அம்மாயி அம்மணி அம்மாள்

அதிஷ்டக்கார அம்மாயி அம்மணி அம்மாள் (38வது வருட நினைவு நாள்)

பாட்டன் வீட்டுக் கண்டியர் குடும்பத்தில் பிறந்தவர் இம்அம்மணி 
அம்மா வீட்டு மாதிரார் குடும்பத்தில் வாக்கப்பட்டவர் இப்பெண்மணி

ஆறு அருமைப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர் அம்மணி 
இருபது பேரப் பிள்ளைகளை வளர்த்தெடுத்தவர் இப்பெண்மணி

மாடி வீட்டு மாதுராருக்கு வலதுகரமாய் இருந்தவர் அம்மணி
ஏழை எளியோர்க்கு உதவிகரமாய் இருந்தவர் இப்பெண்மணி 

காதில் புல்லாக்கை அணிந்த பணக்கார முகவழகி அம்மணி
கழுத்தில் அட்டிகை அணிந்த குணக்கார
அகவழகி இப்பெண்மணி

தாயம் விளையாட்டில் சாதுரியமாகக் கோபப்படுவார் அம்மணி
பாயும் காளை மாட்டைச் சாமர்த்தியமாகப் பிடித்திடுவார் இப்பெண்மணி!

அம்மணி அம்மாளென பெயர் பெற்ற இப்பெண்மணிதான் எனக்கு அம்மாயி                    இறந்து 38 ஆண்டுகள் ஓடோடி விடினும் என்றும்  நீங்கா நினைவில் வாழும் என் அம்மாச்சி!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 25 October 2023

தஞ்சாவூரார் இராசராச சோழன்

 

தஞ்சாவூரார் இராசராச சோழன்

உலகிலே தலை சிறந்ததொரு பேரரசர்
கல்லிலே கலையைத் தந்ததொரு பேரரசர்
தஞ்சையைச் சிவ பூமியாக்கிய பேரரசர்
தஞ்சையைத் தவப் பூமியாக்கிய பேரரசர்

சதயத் திருவிழா பெரிய கோவிலில்
இதயத் திருவிழா பெரிய கோவிலில் பக்தியோடு விழா பெரிய கோவிலில்
சக்தியோடு விழா பெரிய கோவிலில்

அயலார் ஆச்சரியப்படும் பெரிய கோவில் 
அரசியலார் அச்சப்படும் பெரிய கோவில் 
படித்தறிந்தோர் போற்றும் பெரிய கோவில்
பகுத்தறிந்தோர் போற்றும் பெரிய கோவில்

தஞ்சைக்கு மட்டும் சதய விழாவிற்கு அரசு
விடுமுறை
எஞ்சிய மாவட்டத்திற்கு ஏன் இல்லை அரசு விடுமுறை?
இராசராச சோழன் தஞ்சைக்கு மட்டும்  சொந்தமென்றால்---
சோழன் ஆண்ட தரணி யாவும் தஞ்சைக்குச் சொந்தமன்றோ?

- தஞ்சை த.இராமநாதன்


Monday, 23 October 2023

ஆயுதமும் பூஜையும்

 

ஆயுதமும் பூஜையும்

அறுவை சிகிச்சை செய்வோருக்கும் ஆயுதம் உண்டு
அறுத்து சர்ச்சை செய்வோருக்கும் ஆயுதம் உண்டு
ஆலையில் வெட்டும் வேலைக்கும் ஆயுதம் உண்டு
ஆளை வெட்டும் வெட்டி வேலைக்கும் ஆயுதம் உண்டு
இரும்பை உருக்கும் இடத்திலும் ஆயுதம் உண்டு
ஈயத்தை உருக்கும் இடத்திலும் ஆயுதம் உண்டு
உழைத்து மரிவோருக்கும் ஆயுதம் உண்டு
ஊதாரியாய்த் திரிவோருக்கும் ஆயுதம் உண்டு
எதார்த்தமாய் வாழ்வோர்க்கும் ஆயுதம் உண்டு
ஏமாற்றியேப் பிழைப்போர்க்கும் ஆயுதம் உண்டு
ஐம்புலன்களின் ஐக்கிய நிலைக்கும் ஆயுதம் உண்டு
ஐம்புலன்களின் அயோக்கிய நிலைக்கும் ஆயுதம் உண்டு
ஒட்டி உறவாடி வீழ்த்துவோருக்கும் ஆயுதம் உண்டு
ஓடி உறவாடி வீழ்வோருக்கும் ஆயுதம் உண்டு

இத்தனை ஆயுதங்களுக்குப் பூஜையைப்        போட ஆயத்தமானாலும்...
கல்வியெனும் ஆயுதத்திற்கு அறிவோடு பூஜையைப் போட ஆயத்தமாவோம்!

- தஞ்சை த.இராமநாதன் 

Sunday, 22 October 2023

பெருமைமிகு ஆம்பலாப்பட்டு அய்யாவு மாதிரார் (25வது வருட நினைவு நாள் 24 Oct 2025)

 

அயராத உழைப்புக்குத் தயங்காதவர்
ஆடம்பர வாழ்க்கைக்கு மயங்காதவர்

இயல்பான வாழ்வில் மேன்மையானவர்
ஈவு இரக்கக் குணத்தில் மென்மையானவர் 

உழைப்பால் உயர்வை அடைந்து காட்டியவர் 

ஊரினில் முதலில் மாடி வீட்டைக் கட்டியவர்

எளிய வாழ்க்கையுடன் ஏற்றம் கண்டவர்      ஏற்றமிகு கொள்கையுடன் மாற்றம் கண்டவர்

ஐயாவெனும் அழகான முருகையா இவர் ஒப்பற்ற அருமையான அய்யாவு இவர்

ஓயாது தன்னுடன் குடையோடு இருந்தவர் ஔவியம் இன்றி அடக்கத்தோடு இருந்தவர்

எஃகைப் போல் அடித்தளம் இட்டு எம் குலம் காத்தவர்! 

குபேரனைப் போன்ற வேந்தர் என் தாத்தா    இப்பேரனுக்குப் பாடல் வேந்தர் என் தாத்தா      இவரைப்போல் எவரென வாழ்ந்தவர் என் தாத்தா                                                      அவரைப்போல் நானென என்னை வாழ்த்தியவர் என் தாத்தா                                      நாமறிந்த நல்லவர் ஆம்பல் கண்டியர் தெரு தாத்தா                                                                            நானறிந்த வல்லவர் என் அம்மாச்சி வீட்டுத் தாத்தா!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 6 October 2023

கொதிக்கும் டீ

 

கொதிக்கும் டீ

இன்ன டீ வேண்டுமெனக் கேட்டால்          என்ன டீ வேண்டுமெனக் கூறுவதும்
எங்கே டீ இல்லையாயெனக் கேட்டால்
இங்கே டீ இருக்கெனக் கூறுவதும்            எதுக்கு டீ போடுறீங்கணுக் கேட்டால்            ஏன் டீ போடக்கூடாதாயெனக் கூறுவதும்

ஆற்றிய டீயைக் குடிக்கக் கேட்டால்
ஆறிய டீயைக் குடிக்கக் கொடுப்பதும்
கெஞ்சி டீயைக் குடிக்கக் கேட்டால்            இஞ்சி டீயைக் குடிக்கக் கொடுப்பதும்
கொதித்த டீயைக் குடிக்கக் கேட்டால் கொதித்து டீயைக் குடிக்கக் கொடுப்பதும்...

தேநீரை டீயெனக் கேட்டதாலோ?

- தஞ்சை த.இராமநாதன்


Sunday, 1 October 2023

ஆண்டவா!

 

ஆண்டவா!

ஆண்டவர்கள் எல்லாம் ஆண்டவனை அடைந்தவர்களும் இல்லை
ஆள்பவர்கள் எல்லாம் ஆண்டவனை அடையப்போகிறவர்களும் இல்லை

ஆண்டவரை ஆண்டவனே என        அழைப்போர் அதிகமாக உண்டு
ஆள்பவரை ஆள்பவனே என            அழைப்போர் அரிதாக உண்டு

ஆண்டவனிடத்தில் அய்யோவென                    அறியாது துடிப்போர் பக்தகோடிகள்
ஆள்பவனிடத்தில் அய்யாவென            அயராது துதிப்போர் பக்காகேடிகள்

ஆண்டவனை ஆண்டவர் என            அழைக்கும் பணிவும் வேண்டும்
ஆள்பவரை ஆள்பவன் என                அழைக்கும் துணிவும் வேண்டும்!

- தஞ்சை த.இராமநாதன்