Sunday, 31 August 2025

தமிழின் தடம்

 

இன்றைக்கென்பது இன்னைக்கென இன்றா ஆனது?
என்றைக்கென்பது என்னைக்கென என்றோ ஆனது
அன்றைக்கென்பது அன்னைக்கென அன்றே ஆனது

கொன்றவனைக் கொன்னவனென கொன்றதாலே ஆனது
தின்றவனைத் தின்னவனென தின்றதாலே ஆனது
நின்றதை நின்னதென நினைவில் நிற்பதாலே ஆனது

நன்றாக இருந்தால் நன்னா இருக்கென இன்றா ஆனது?
ஒன்னா இருந்தால் ஒற்றுமை என்பது என்றோ ஆனது
அன்னைக்கோ இன்னைக்கோ என்னைக்கோ
அன்றும் இன்றும் என்றும் தமிழின் தரம் தடம் மாறிவிட விடக் கூடாது!

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 26 August 2025

நுழைவு வாயில் வாயிலாகலாமா?

 

கூட்டத்தைக் கூட்டிப் பரபரப்படையச்
செய்யாதீரெனச் சொல்லலாமா?          வார்த்தை வெளி வராதபடி வாயை மூடி வாயிலின் முன் நிற்கலாமா?

வாயால் சொல்ல முடியாத வகையில்
செல்லும் வழிக்குப் பெயரும் வாயில்
தலைக்கு மேலே அன்னாந்து கூர்ந்துப்
பார்த்தால் கண்ணில் படுவதும் வாயில்

Gateஐ வாயில் என்பதான பொருளுடன் தரமாகத் தமிழில் கொடுத்துள்ளனர்
வழி Gateஐ நுழைவு வாயில் எனாமல்            பூசி மெழுகித் தரத்தைத் தடுத்துள்னர்!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 22 August 2025

திருச்சியில் அதிர்ச்சி

 

தேனாக பாய்ந்து அனைவருக்கும் இனித்த மொழி தமிழ்மொழி
தென்றலாக அனைவரையும் அரவணைத்த மொழி தமிழ்மொழி
வான் புகழ் கொண்ட வள்ளுவனால் புகழோடு வாழ்ந்த மொழி தமிழ்மொழி
மண் புகழ் பூங்கொன்றனால் உயர்ந்து வையகம் அறிந்த மொழி தமிழ்மொழி

விமான நிலையம் தமிழர் கோயிலைப் போல் கம்பீரமாகக் காட்சித் தருகிறது திருச்சியில்      கட்டணம் வசூலிக்க ஹிந்தியில் மட்டும் பேசுவதால் மனம் உறைகிறது அதிர்ச்சியில் 
வீண் பேச்சை மட்டும் பேசி நம் தமிழை நாமே தாழ்த்தி விட்டுவிடக் கூடாது வீழ்ச்சியில்
தமிழை வீழ்த்த எவர் முயற்சி செய்தாலும் அவர்களே வீழ்வர் அவரவர் சூழ்ச்சியில்!

- தஞ்சை  த.இராமநாதன்

Wednesday, 20 August 2025

அருமையான ஆறு

 

ஐந்திணையில் நான்கினைக் கடந்து
ஆறோடு ஆறு ஆறாகவே இருந்து
ஆறாக ஓடோடிக் கடலோடுக் கலந்து     கரிக்கப் போவதை அறியாத ஆறே

ஆறு அறிவுகளைப் பற்றித் தெளிந்து
ஆற அமர்ந்து ஆறாவதை அறிந்து   பெரியோர் அறிவுரைக்குப் பணிந்து
தன்னிலை உணர்வது ஆறாம் அறிவே

ஆறக் கூடிய மனதை ஆற விடாதவாறு    சுட்டச் சொல்லின் காயம்  ஆறாதவாறு
அவதியின் அல்லலைக் காட்டாதவாறு வயோதிக வயதில் வாடுவோரைப் பாரு!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 18 August 2025

பட்டதைப் படும்முன் பாடும் பாடல்

மனதில் பட்டதைப் பட்டெனச் சொல்லாது
மனனம் செய்து படபடவென சொல்வது
மாணவர்கள் செய்வது மட்டுமல்லாது  மணமானவர்கள் செய்வதுவும் அதுவே

Magnetன் பொருள் காந்தமானாலும் 
பொருள் ஈட்டுவோரை Magnet  என்பதும்
Magnat என்பதை Magnet என்றாக்கி      பணமே காந்தமாகிக் கவர்வது போதும்

நூல்களைப் படிக்க நூலகம் தேவை
நூலைத் தைக்கக் குத்தூசியும் தேவை
கருத்தைக் கோர்க்க நூல்கள் தேவை 
நூலைத் தரிக்கப் பருத்தி வெடிப்பும் தேவை

முடிக்காக மண்டையில் துளையிட்டு
துளையிட்ட மண்டையில் பதியமிட்டு
பதியவைத்த முடியை வளர விட்டு        முடியால் மூடிய மூளைக்கு முடி சூடல்!

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 9 August 2025

வியக்க வைக்கும் சிங்கப்பூர்

 

என்ன செய்வோமென தவித்த
நிலை 1965ல்
எதையும் செய்வோமென நிரூபித்த நிலை 2025ல்

எப்படி வாழ்வீர்களென கர்வத்தோடுப் பார்த்தார்கள் 1965ல்
இப்படி வாழ்வதைக்  கௌரவத்தோடுப் பார்க்கிறார்கள் 2025ல்

எல்லா இனமும் சோர்ந்த நிலையிலிருந்தது 1965ல்
எல்லா இனமும் சேர்ந்த நிலையில் இருப்பது 2025ல்

நல்ல பிரதமர்களைக் கண்டு நல்லாட்சி நடக்கிறது 2025ல்
நல்ல பிரதமர்களைக் கொண்டு நல்லாட்சியே நடக்கும் 3025ல்!

- தஞ்சை த.இராமநாதன் 


Sunday, 3 August 2025

ஆடிப் பெருக்கே கூட்டிப் பெருக்கே

ஆடிப் பெருக்கெடுப்பில் கூடிக் களித்து கதையைக் கதைக்கலாம்
கூடிக் களித்தபின் தேடிப் பிடித்து விதையை விதைக்கலாம்

வெடித்த பொருக்கையெல்லாம் ஆடிப் பெருக்கில் மூழ்கடித்து மகிழலாம்
தொடுத்த போரையெல்லாம் ஆடிப் பெருக்கில் முறியடித்து முடிக்கலாம்

பொறாமை உணர்வை ஆடிப் பெருக்கில் அடியோடு அடித்துப்போக வேண்டலாம்
பொறுமை உணர்வின் முடிவோடு ஆடிப் பெருக்கில் அடியெடுத்துப்போகத் தூண்டலாம்

பிரிந்தோரால் விரிந்த பிளவைச் சேர்த்து ஆடிப் பெருக்கில் குறுக்கலாம்
புரிந்தோரால் மலர்ந்த உறவைச் சிதைக்காது கூட்டிப் பெருக்கலாம்!

- தஞ்சை த.இராமநாதன்