Tuesday, 14 October 2025

பா விருத்தம்

 

பழமை பெருமையை இழப்பதால் அது பழசு என்றாகி மவுசு குறைந்து விடுகிறது      புதுமை பெருமையாக இருப்பதால் அது புதுசு என்றாகி பழசு மறைந்து விடுகிறது

முதுமை முடியாமை நிறைந்து வாடுவதால்
பெருசு என்றாகி ஆட்டம் முடிவாகி விடுகிறது
இளமை இறையாமை மறந்து ஆடுவதால்
இளசு என்றாகி ஆட்டம் அதிகமாகி விடுகிறது

தீ பிடித்து எரிந்து காற்றும் விரைந்தால்          தீமை உண்டாகி விடுகிறது
பா வடித்து வற்றாத விருத்தமும் இருந்தால்
புலமை உண்டாகி விடுகிறது!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 12 October 2025

அவன்-அவள்; அவர்-அவர்கள்

 

அவளைப் பார்த்த அவன் அவளை எங்கோப் பார்த்ததைப்போல் பார்க்கின்றான்
அவனைப் பார்த்த அவளோ அவனை இப்போதுதான் பார்ப்பதைப்போல் பார்க்கின்றாள்

அரசுப் பணியின் மதிப்புமிகு பதவியில் இருக்கும் அவளை அவன் அவர்களென அழைக்கின்றான்
ஆளும் அரசின் மாண்புமிகு பதவியில் இருக்கும் அவனை அவளும் அவர்களே என அழைக்கின்றாள்

ஒருமையில் ஒருவரை வரவேற்றாலும் அவர்களே  என அழைக்கின்றோம்
பன்மையில் பலரை வரவேற்றாலும் அவர்களே எனத்தான் அழைக்கின்றோம்

அவனும் அவளும் அவர்களென ஆனது அவனாலும் அவளாலும் ஆனது
அவர்கள் யாவரும் அவர்களெனவே ஆனது அவர்கள் அனைவராலுமே ஆனது!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 9 October 2025

என் உறவினர் வை.ரெங்கசாமி கண்டியர்

 

பாசமான பக்கத்து வீட்டுக்காரர்
பக்குவமான அக்கத்து வீட்டுக்காரர்
கண்டிப்பான கபடமில்லாக் குணமுடையார்
கண்டியரெனும் கள்ளமிலா மனமுடையார்

உணவை உண்பதிலும் கட்டுப்பாடு
உடலைக் காப்பதிலும் கடப்பாடு
கடமையுடன் மதித்துப் பேசுவது கண்டியரின் சிறப்பு
கண்ணியத்துடன் சிந்தித்துப் பேசுவதும் கண்டியரின் சிறப்பு

நூறு வயதாகும் உயர்வான பெரியவர்
ஊர் போற்றும் உன்னதமான பெரியவர்

வணங்கிப் போற்றுகிறேன் கண்டியரே
வாழ்த்தி ஆசீர்வதியுங்கள் கண்டியரே!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 5 October 2025

என் இனிய நண்பன் இம்ரான்

 

கனிமையான நண்பன் இம்ரான்
இனிமையான நண்பன் இம்ரான்
வலிமையான தோழன் இம்ரான்
எளிமையான தோழன் இம்ரான்

பனை மரம் ஏறுவதில் வல்லவனிவன்
பனை நுங்குத் தருவதில் வள்ளலிவன்
நல்ல மரம் பார்த்துக் காத்திடுவான்
தலை சீவி நுங்கின் கண் திறந்திடுவான்

நுங்கைக் குடி குடியென வெட்டி வெட்டி கொடுத்துக் குடித்திடச் செய்வான்
கை கட்டை விரலால் அழுத்தி உயர்த்தி காற்றை விட்டு உறிஞ்சிடச் சொல்வான்

நாற்பதாண்டுகளைக் கடந்து விட்டது இம்ரான் நுங்கைச் சீவிக் கொடுத்து
நாற்பதாண்டுகளைத் தாண்டி விட்டது
இம்ரானோடு குளத்தில் தாவிக் குளித்து!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 3 October 2025

மாரியின் மகிமை

 

மழை பொழிந்தால் மனம் செல்கிறது மகிழ்வான எல்லைக்கு
மழை தொடர்ந்தால் மனம் செல்கிறது மகிழ்வற்ற தொல்லைக்கு

காலையில் மழை பொழிந்தால் கடமைக்குக் கட்டுப்பாடு போடுகின்றது
மாலையில் மழை பொழிந்தால் உழைப்புக்கு ஓய்வுக் கொடுக்கின்றது

வெயிலின் கொடுமை மழையால் நீராடப்பட்டு குளிரூட்டப் படுகின்றது
மழையின் கொடுமை வெயிலால்
சூடாக்கப்பட்டு ஒளியூட்டப் படுகின்றது!

- தஞ்சை த.இராமநாதன்