Saturday, 29 November 2025

குரைக்கும் நாயும் கொழுத்த வாயும்

 

நாய் குரைத்தால் அடிபட வாய்ப்புண்டு; வாய் கொழுத்தால் மிதிபட வாய்ப்புண்டு.

ஆணின் ஆணவம் அழிவைத் தர வாய்ப்புண்டு;
பெண்ணின் ஆணவம் பேரழிவைத் தர வாய்ப்புண்டு.

மதி மயங்கினால் கண்டோரை எல்லாம் பேசிட வாய்ப்புண்டு;
கதி கலங்கினால் காண்பவர் எல்லாம் பேசிட வாய்ப்புண்டு.

உழைத்துப் பிழைத்தால் ஓரளவிற்கு வாழ்ந்திட வாய்ப்புண்டு;
ஏய்த்துப் பிழைத்தால் பெயரளவிற்கு வாழ்ந்திட வாய்ப்புண்டு.

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 23 November 2025

எட்டி உதைக்க எண்ணமா?

 

எட்டும் தூரமாயின் எட்டியாவது முகத்தில் உதைக்கத் தோன்றுகிறதா?
எட்டாத தூரமாயின் எப்படியாவது முகத்தில் உதைக்கத் தோன்றுகிறதா?

துப்பும் தூரமாயின் காரியாவது முகத்தில் துப்பிடத் தோன்றுகிறதா?
தப்பும் தூரமாயின் கரியையாவது முகத்தில் அப்பிடத் தோன்றுகிறதா?

துரத்தித் தூரமாக அடித்து விரட்டாது எட்டாத தூரத்தில் இருத்தலே நலம்
காரவும் தேவையற்று கரியைப் பூசவும் தேவையற்று வாழ்தலே வளம்

துப்பாது துப்பி துரத்தாது துரத்தி உதைக்காது உதைத்தலே தலை!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 21 November 2025

இருப்பவர்க்கு இருப்பதே இருப்பு

 

இருக்கும்வரை இருப்பதே இருக்குமென
இங்கே இருந்தால் இருப்பதும் இல்லாததாகலாம்
இறக்கும்வரை இழந்ததை இருப்பதாக இங்கே இருந்தால் இருந்ததும் இல்லாததாகலாம்

இல்லாதது இருப்பதாக இல்வாழ்வில் இருந்தால் இருப்பதும் இல்லாமல் இருக்கலாம்
இருந்ததை இல்லாததாக இல்வாழ்வில் இழந்தால் இருந்ததை இழந்ததாகவும் இருக்கலாம்

இருந்தவர் இல்லாதவராக இருந்தால் இல்லாதவர் இவ்வாழ்வில் இருப்பவராகவே இருக்கலாம்
இருப்பவர் இருப்பதையும் இழந்தால் இருந்தவரும் இவ்வாழ்வில் இல்லாதவராகவே இறக்கலாம்!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 17 November 2025

உயிரைப் பறித்த இடியே

 


 

மேலிருந்து விழுந்து இறந்த செய்தி இடித்த இடியாய்ப் பரவியது போன வாரம்
மேலிருந்து விழுந்த இடியால் இறந்த செய்தி அடிமேல் அடியாய்ப் பரவியது இந்த வாரம்

பிழைப்புத் தேடி வந்த இடம் தந்து விடுவதுண்டு எதிர்பாராதச் சிறப்பை
அந்தப் பிழைப்பே தந்து விட்டது இன்று இந்த எதிர்பாராத இறப்பை

இடித்தவுடன் இறக்கப் போவதை எண்ணி மனம் துடியாய்த் துடித்திருக்குமே...
இறக்கும்முன் பிறந்த பிறப்பை எண்ணி இதயம் இடிந்துத் துடித்திருக்குமே...

கண்ணீரால் நனைகின்றோம்...

- தஞ்சை த.இராமநாதன் 

Sunday, 16 November 2025

உயர்வான தொழில்

 

அம்மியும் அரைப்பார் கும்மியும் அடிப்பார் பெண்கள்
குடுமியும் வளர்ப்பார் உருமியும் அடிப்பார் ஆண்கள்

நடவும் நடுவார் களையும் பறிப்பார் பெண்கள் 
விதையும் விதைப்பார் நாற்றையும் பறிப்பார் ஆண்கள்

சாணமும் தெளிப்பார் கோலமும் இடுவார் பெண்கள்
மேழியும் பிடிப்பார் கோலியும் இடுவார் ஆண்கள்

தொன்னையிலும் உண்ணுவார் தின்னையிலும் உண்ணுவார்
அவர்கள்தான் உயர் தொழிலை செய்யும் கிராமத்து விவசாயிகள்!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 9 November 2025

ஏணி

ஏணியில் ஏறுவது எப்படியெனச் சொல்லியும் கொடுக்கலாம்
அப்படி ஏணியில் ஏறுவோர்க்குக்  கைப்பிடியாகவும் இருக்கலாம்

படியற்ற ஏணி பலனற்றும் போகலாம்
ஏறி வந்த ஏணி பயனற்றும் போகலாம்

ஏறி வந்த ஏணியை ஏறியபின் எட்டியும் உதைக்கலாம்
உதைத்தபின் வாழ்வு உருப்படாமலும் போகலாம்

ஏணியின் பணியில் ஏணிப் படியை நீ புகழலாம்
ஏணிப் பணியை அப்படி இப்படி எப்படி நீ இகழலாம்?

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 8 November 2025

மெளனம்

 

அன்பற்ற அறிவற்றோரைக் கண்டால் பக்குவத்தோடு இருக்க வேண்டும் மௌனம்

​ஆணவத்தோடு ஆர்ப்பரிப்போரைக் கண்டால் காணாததைப் போல் இருக்க வேண்டும் மௌனம்

​இறுமாப்போடு இரைச்சல் செய்வோரைக் கண்டால் கேட்காததைப் போல் இருக்க வேண்டும் மௌனம்

​உருப்படாமல் ஊதாரியாகத் திரிவோரைக் கண்டால் உதறித் தள்ள வேண்டும் மௌனம்

​எடுத்தெறிந்துப் பேசும் எடுபட்டோரைக் கண்டால் எதிர்த்துப் பேசாமல் இருக்க வேண்டும் மௌனம்

​ஏளனம் செய்து ஒடுக்க நினைப்போரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருக்க வேண்டும் மௌனம்

​மௌனமே மதித்துப் போற்றும் வகையில் அமைதியாய் இருக்க வேண்டும் மௌனம்!

- தஞ்சை த.இராமநாதன்