Monday, 31 January 2022

புரியாதப் புத்தகம்

 

புரியாதப் புத்தகம் 

திரும்பத் திரும்பப் படித்தாலும் படித்தது இவருக்கு ஒன்றும் புரியவில்லையோ? திருப்பித் திருப்பிப் படித்தாலும் படித்தப் பக்கம் எதுவென்று புரியவில்லையோ? 

யாரோடப் புத்தகம் என்று சுற்று முற்றும் பார்த்தாலும் யாரும் அங்கில்லையோ? புத்தகத்தை எழுதிய புதுமைக் கிறுக்கன் யாரெனத் தெரியவில்லையோ?

நகரப் பேருந்து வரும்வரை நகராமல் உட்கார்ந்ததில் அர்த்தமே இல்லையோ? புரியாதப் புத்தகத்தை அங்கேயே விட்டு மற்றவரும் ஏமாற விரும்பவில்லையோ?

- தஞ்சை த இராமநாதன் 

Sunday, 30 January 2022

ஆத்மா-மகாத்மா-பரமாத்மா

 

ஆத்மா-மகாத்மா-பரமாத்மா

தான் பிறந்த மதக் கொள்கைகளுடன் தரமானக் குடும்பத்தில் பிறந்த ஆத்மா  மதத்தை மறந்து மனிதத்தை இணைக்க முனைந்து உயிரைத் துறந்த மகாத்மா 

லண்டனில் உயர்வான சட்டம் பயின்று    ஆப்பிரிக்காவில் திட்டம் தீட்டிய ஆத்மா மிடுக்கான ஆடை அணிவதைத் துறந்து வேட்டி துண்டை அணிந்த மகாத்மா 

செய் அல்லது செத்து மடி முழக்கத்தை முழங்கி செத்து முடிந்த ஆத்மா          சுட்டவனை மன்னித்து விடச் சொல்லி          ராம் ராம் எனச் சொல்லி சரீரத்தை விட்ட மகாத்மா!

தஞ்சை த இராமநாதன் 





 


Saturday, 29 January 2022

எத்தனை முறைப் பார்த்தாலும்...

 

எத்தனை முறைப் பார்த்தாலும்...

இதை எத்தனை முறை எப்படிப் பார்த்தாலும் சலிப்பதில்லை                                                    இதை எத்தனை முறை எப்படி எழுதினாலும் நிறைவதில்லை 

வரப்பில் துண்டை விரித்துப் படுத்தால் தூக்கம் வராமல் போவதில்லை              வரப்பில் இளநீரோடு வழுக்கையை சுவைக்காமல் வரப் போவதில்லை!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 28 January 2022

நாணயத்தின் மதிப்பு

 

நாணயத்தின் மதிப்பு 

நாணயத்திற்கு இரு பக்கம் இருக்கு              ஒரு பக்கம் தலையாய் இருக்கு            நாணயத்திற்கு மறுப்பக்கம் இருக்கு மறுப்பக்கம் வாலாய் இருக்கு

எங்க நாணயத்திற்கு மரியாதை ஓரளவு அங்கும் இங்கும் இருக்கு                                          தங்க நாணயத்திற்கு மரியாதை பெருமளவு எங்கெங்கும் இருக்கு 

நாணம் உள்ளோரிடத்தில் இயற்கையான      நாணம் சேர்ந்தே இருக்கு                                        நாணயம் உள்ளோரிடத்தில் செயற்கையான நாணயம் சேராமலே இருக்கு! 

- தஞ்சை த இராமநாதன் 

Thursday, 27 January 2022

கடலூரில் கட்டிடம் தானாக இடிந்தது

 

கடலூரில் கட்டிடம் தானாக இடிந்தது

இடிய வேண்டும் என்பதற்காகவே கட்டிடம் கட்டம் வைத்து கட்டப்படுகின்றது
இடியும் எனத் தெரிந்தும் கட்டிடங்கள் இடிக்காமல் விடப்படுகின்றது

கட்டிடம் இடிந்து தலை உடைந்து உயிர் பிரிந்தால்தான் நிதி ஒதுக்கப்படுகின்றது
இடிந்தக் கட்டிடம் இருந்த இடத்தில் பேய் இருந்ததாய் ஒதுக்கி வைக்கப்படுகின்றது 

யாராவது இறந்தால்தான் இந்த ஆதாய அரசியலார் அரசியல் செய்ய முடிகின்றது
ஆபத்து பல நடந்தாலும் நடப்பவை நடந்தவையை மறக்க வைத்து விடுகின்றது!

- தஞ்சை த இராமநாதன்


Wednesday, 26 January 2022

மறுத்து மறைப்பது நியாயமா?

 

மறுத்து மறைப்பது நியாயமா? 

பண்டையத் தமிழர்களின் பங்களிப்பை மறப்பது நியாயமா?                        விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகளை மறைப்பதும் நியாயமா?

அருள்மொழித் தேவன் இராஜராஜ சோழன் பெருமையைத் தவிர்க்க முடியுமா?                      வாகை சூடிய இராஜேந்திர சோழனின் மகிமையைத் தகர்க்க முடியுமா?

தெய்வப் புலவர் திருவள்ளுவரின் புகழை யாராலும் மறைக்க முடியுமா?                    யாதும் ஊரே என்றக் குன்றனாரின் புகழை யாராலும் குறைக்க முடியுமா?

அரசியல் அசிங்கங்கள் அரங்கேறுவதை அரசியல்வாதியால் மறுக்க முடியுமா?                ஆதாயத்திற்காக ஆற்றை இறைப்பதை இறைப்பவரால் மறைக்க முடியுமா?

கடவுள் உண்டென நம்பும் தமிழர்களே அதிகம் என்பதை மறுக்க முடியுமா?                கடவுளைத் திட்டினால் காசுக்காக கை தட்டாமல் அவர்களால்  இருக்க முடியுமா?

தமிழ்க் கடவுள் முருகன்தான் என்பதை பரம்பரைத் தமிழனால் மறுக்க முடியுமா?பாட்டில் கிடைத்தால் முருகனை மறந்து காவடித் தூக்காமல் இருக்க முடியுமா?

- தஞ்சை த இராமநாதன் 

Tuesday, 25 January 2022

ஆமைகளும் வாழட்டும்

 

ஆமைகளும் வாழட்டும்

முட்டையிட இடம்தேடி குழிதோண்டி முட்டையிட்டு குழியை மூடிடும் ஆமைகள் மூடிய முட்டையைத் தோண்டி எடுத்து முட்டையைத் தின்றிடும் நாட்டாமைகள் 

ஆயிரம் ஆமைகளில் ஒன்று தப்பினால்        150 வயதுவரை வாழ முடியும் ஆமையால் ஆயிரத்தில் தொள்ளாயிரம் ஆமைகள் பிழைத்திடும் ஊன் உண்ணாமையால் 

கறியோடு ஓடுக்காக அழிக்கப்பட்டாலும் விவேகத்துடன் பிழைக்கின்றது ஆமை      ஓடிப் பிழைத்து மண்ணில் வாழ்ந்து              தன் இனத்தைக் காக்கின்றது ஆமை!

ஞ்சை த இராமநாதன் 

Monday, 24 January 2022

கொட்டும் அருவியில் சக்தி

 

கொட்டும் அருவியில் சக்தி 

கொட்டோ கொட்டெனக் கொட்டும் அருவியே

கொட்டெனக் கொட்டி இசைபாடும் அருவியே 

கொட்டத்தை அடக்க கொதித்து விடாதே அருவியே

கொட்டம் அடங்க கொந்தளித்து விடாதே அருவியே! 

- தஞ்சை த இராமநாதன் 

Sunday, 23 January 2022

குருவிப் பாட்டு

 

குருவிப் பாட்டு 

உழைப்பை மட்டுமே நம்பி எம்போல் மனிதரும் உயிர்வாழ வேண்டும்                            இன்று இரை கிடைத்ததைப் போன்றே என்றும் கிடைக்க உழைக்க வேண்டும் 

பச்சிளங் குஞ்சுகளை காப்பதைப் போல் பள்ளி மாணவிகளைக் காக்க வேண்டும்      மதம் பார்த்து உயிர்களை மதிக்கும்  மனநிலை முற்றிலும் மாற வேண்டும் 

பத்து மூட்டை விளைந்த நிலத்தில்                    20 விளையும் நிலை தொடர வேண்டும்      கூட்டில் வாழும் யாம் பெற்ற வாழ்வை    வீட்டில் வாழும் யாவரும் பெற வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 22 January 2022

என்னவரே மன்னவரே...

 

என்னவரே மன்னவரே...

இருந்தவர் இருந்த இருக்கை அன்று இறந்தவர் இருந்த இருக்கை இன்று இருந்தவர் அமர்ந்ததால் சிறந்தது அன்று இறந்தவர் அமர்ந்ததால் சிறக்குது இன்று 

ஏங்றேன் என்பார் என்னை அன்று    ஏங்குறேன் அதை நினைத்து இன்று சாப்பிட்டியாங்றேன் என்பார் அன்று    சாப்பிடமாட்டேங்கிறேன் நான் இன்று 

கன்னத்தில் கை வைக்கப் பிடிக்காது அன்று கன்னத்தில் கை வைக்கப் பிடிக்குது இன்று நான் அழுததாக ஞாபகமில்லை அன்று        நான் அழுவதே ஞாபகமில்லை இன்று!

- தஞ்சை த இராமநாதன் 


எது நட்பு? எங்கே நட்பு?

 

 எது நட்பு? எங்கே நட்பு?

பள்ளிப் பருவ நண்பர்களைப் பற்றி நினைத்தால் -  பார்க்க முடியாதோ என்ற நினைப்பு 

கல்லூரிப் பருவ நண்பர்களைப் பற்றி நினைத்தால் - பார்க்க முடியுமா என்ற நினைப்பு 

பார்க்காதுப் பழகிய நட்பு நிலைத்ததை நினைத்தால் - பார்க்காததுதான் சரி என்ற நினைப்பு 

பார்த்துப் பழகிய நட்பு நிலைக்காததை நினைத்தால் - பார்த்ததுதான் தவறு என்ற நினைப்பு

இறுதியாக-உறுதியாக: எந்த நட்பையும்விட கணவன்-மனைவி நட்பே நிலையான நட்பு!

தஞ்சை த இராமநாதன் 


Friday, 21 January 2022

உயர்ந்த உயரமானக் கோபுரங்கள்

 

உயர்ந்த உயரமானக் கோபுரங்கள் 

கீழிருந்து மேலே அன்னாந்துப் பார்க்க வைத்தக் கோபுரமும் உண்டு          மேலிருந்துக் கீழே வியந்துப் பார்க்க வைக்கும் கோபுரமும் உண்டு

கல்லால் கோபுரம் கட்டி ஆண்டப் பரம்பரை உலகில் சில உண்டு                                              சொல்லால் கோபம் காட்டி சுருண்டப் பரம்பரை உலகில் பல உண்டு 

கட்டியக் கோபுரங்கள் ஆண்டுகள் கடந்து நிலைத்து நிற்பதும் உண்டு              அடுக்கியக் கட்டிடங்கள் நீரால் சூழ்ந்து நிலைத் தடுமாறுவதும் உண்டு!

- தஞ்சை த இராமநாதன் 

Wednesday, 19 January 2022

கதவோடு கதவாக நின்றாள் 

 

கதவோடு கதவாக நின்றாள் 

கதைவத் திறந்து கதவோடு நின்றாள் 

கதவைத் திறக்காது கதவாகவே நின்றாள் 

கதவைத் திறந்து வரவேற்பு என்றால் 

கதவைத் திறக்காது வரவேற்று நின்றாள் 

- தஞ்சை த இராமநாதன் 

Tuesday, 18 January 2022

பங்குனியில் உத்திரம்

 

முருகா என்றதும் முதலில் தோன்றுவது சுப்ரமணியரான முள்ளூர் முருகன்

பக்தர்களின் பகுத்தறிவுப் பக்திக்கு அருளை வழங்கும் பட்டுக்கோட்டை முருகன் 

மலையில்லாத ஊரையே மலையாக்கிய தஞ்சை பூமியில் சுவாமிமலை முருகன் 

ஆண்டியானாலும் ஆண்டாண்டாக இனிக்கும் பஞ்சாமிர்தம் வழங்கும் பழநி முருகன் 

கடலோரத்தில் வீற்று அருளாட்சியை ஆளும் கருணைமிகு திருசெந்தூர் முருகன் 

தேவயானை தெய்வீக உறவின் உறுதியுடன் முதல்படையில் திருப்பரங்குன்றம் முருகன் 

தணிய வேண்டிய கோபத்தைத் தணித்து தரணி காக்கும் திருத்தணி முருகன் 

சைவ வைணவத்தை ஒன்றுப்படுத்தி நாம் என்ற நாமத்தின் பழமுதிர்ச்சோலை முருகன்

பலயின பக்தர்களைக் கவர்ந்து ஈர்த்து தங்க கோலத்தின் பத்துமலை முருகன் (மலேசியா)

அறுபடை வீடுகளைத் தூண்களில் கொண்ட tank சாலை சக்திமிகு முருகன் (சிங்கப்பூர்)

எம்குடியிருப்புக்கு அருகிலேயே உம் குடியாம்  Bukit Panjang முருகன் (சிங்கப்பூர்)

எல்லோரும் நல்வழியில் என்றும் இன்புற்று    துன்பம் அற்று வாழ வழி காட்டும் முருகன்!

- தஞ்சை த இராமநாதன் 

Monday, 17 January 2022

தன் நிலையும் தன் நிழலும்

 

தன் நிலையும் தன் நிழலும் 

நிழலே நிழலே நிலையான நிழலை நிலையாக நின்று தராததேன்?
நிழலே நிழலே நிலையற்ற மனிதரை விடாது நடந்து தொடர்வதேன்?

நிழலே நிழலே நிழலின் நிறத்தை மனிதருக்கு மனிதர் மாற்றாததேன்?
நிழலே நிழலே நிழலின் நீளத்தைக் கூட்டிக் குறைத்துக் காட்டுவதேன்?

நிழலே நிழலே நிலவினால் நிழலானால் குளிரைத் தாங்க போர்த்தாததேன்?
நிழலே நிழலே சூரியனால் நிழலானால்
சூட்டைத் தாங்க குடைப் பிடிக்காததேன்?

நிழலே நிழலே சிறுவனின் நிழலை பெரியவராய்க் காட்டி நிற்பதேன்?
நிழலே நிழலே சிறுவனின் நிழலில் நீதி அரசரின் நிழலைக் காண்பிப்பதேன்?

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 16 January 2022

காண்பதே காணும் பொங்கல்

 



காண்பதே காணும் பொங்கல் 

முறைப் பெண் முறைத்துப் பார்த்தாலும் முறைப்படி பார்க்கிறேன் முறைக்காதே என ஜாடையில் சொல்லி பவ்வியமாய்ப் பம்மும் பையனுக்கும் காணும் பொங்கல் 

முரட்டுப் பார்வையுடன் முறைப் பையன் பார்த்தாலும் அடக்கிவிடுவேன் உன்னை என அடக்கத்துடன் பார்க்கும் அழகுப் பெண்ணுக்கும் காணும் பொங்கல்

தாலி கட்டியக் கணவனைத் திட்டித் தீர்த்தாலும் வேட்டிக் கட்டிய வீரனெனப் புகழ்ந்து பொங்கலைப் பரிமாறும் மனையாளுக்கும் காணும் பொங்கல்

குடும்பத்தைக் கட்டிக் காக்கும் மனைவி        தன் உயிரைக் காக்கும் துணைவி என போற்றிப் புகழாவிட்டாலும் அப்படி நினைக்கும் கணவனுக்கும் காணும் பொங்கல் 

இளையோர்க்கு ஆசீர்வாதம் வழங்கும் பெரியோர்க்கும் காணும் பொங்கல்      வயதில் மூத்தோரைக் கண்டு வணங்கும் இளையோர்க்கும் காணும் பொங்கல்

பொங்கலை இனிதாக முடித்து வைத்து சிறப்படைவது காணும் பொங்கல்                  காண முடியாததைக் கண்டு கொள்ள                வழி வகுப்பதும் காணும் பொங்கல்!

- தஞ்சை த இராமநாதன் 

Saturday, 15 January 2022

சோமன்தெருவில் கூட்டு மாட்டுப் பொங்கல்

 

சோமன்தெருவில் கூட்டு மாட்டுப் பொங்கல் 

ஒரேயொரு எருமையைக் காட்டிய விதம் பெருமையே!

பால்தரும் பசுக்களைக் கட்டிய விதமும் அருமையே!

- தஞ்சை த இராமநாதன் 

திருவள்ளுவர் தினச் செய்திகள்

 

திருவள்ளுவர் தினச் செய்திகள் 

ஆண்டின் ஒவ்வொரு தினத்திலும் வருகிறது பலவிதமான செய்தி

திருவள்ளுவர் தினமாம் இன்று சிலை நோக்கி சிலர் சென்றதாகவும் செய்தி

பாலமேடு ஜல்லிக்கட்டு தினமாம் இன்று கூட்டம் அலைமோதியதாகச் செய்தி

சூரியூர் ஐல்லிக்கட்டில் இன்று காளை வளர்த்தவரைக் கொன்றதாகவும் செய்தி 

வழக்கமான கிராமத்து மாட்டுப் பொங்கல் இன்று நடைபெறுவதாக வரவில்லை செய்தி 

நாள் முழுதும் சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா நடத்தும் வள்ளுவரை வணங்குவோம் நிகழ்ச்சிதான் இன்றைய சிறப்புச் செய்தி!

- தஞ்சை த இராமநாதன்

மாடு இல்லாத வீட்டுப் பொங்கல்

 

மாடு இல்லாத வீட்டுப் பொங்கல் 

மாடு கட்டி வாழ்ந்தபோது மாட்டுக்கென            ஒரு பொங்கல் அது உற்சாகப் பொங்கல்              மாடி கட்டி வாழும்போது மாட்டைக்காணா          ஒரு பொங்கல் இது உல்லாசப் பொங்கல் 

பலவித மாமிச வகைகளைச் சேர்த்துத் தின்ன  மாட்டின் பெயரில் ஒரு பேதைப் பொங்கல்            குடித்துக் கூத்தாடி வெட்டிச் சண்டைபோட      மாட்டின் பெயரில் ஒரு போதைப் பொங்கல்

உழவு மாடு கிராமத்தை விட்டே ஓடி விட்டது  கறவை மாடு நகரச் சாலையிலே கூடி விட்டது  மாட்டோடு வாழ்வதைத் தொடராது விட்டோம்  மாடு பிடிப்பதை மட்டும் தொடர்ந்து விட்டோம் 

மரபை மறந்து மாட்டுப் பொங்கலையும் மறந்ததால் மறத் தமிழராக முடிமா?                மாண்பை மறந்து வீட்டுப் பொங்கலையும் மாற்றியதால் வீரத் தமிழராக முடிமா!

- தஞ்சை த.இராமநாதன் 

Friday, 14 January 2022

பொங்கலுக்குப் பொங்கல் பொங்கும் பொங்கல்




பொங்கலுக்குப் பொங்கல் பொங்கும் பொங்கல்

தமிழ்நாட்டு மண்ணை எடுத்துக் குழைத்து

பானையைக் கட்சிதமாய் வடிவமைத்து

மண்ணில் விளைந்த கதிரை உதிர்த்து  

புதுநெல்லின் அரிசியைப் புடைத்து எடுத்து

காய வைத்த விறகை வைத்து எரித்து  

உலைப் பொங்கி வருவதைப் பார்த்து

பச்சரிசி சர்க்கரை முந்திரியைக் கலந்து

திராட்சை ஏலக்காயோடு நெய்யைச் சேர்த்து 

மஞ்சள் கொத்தை பானையில் அணிந்து 

வாழை இலையில் வைத்துப் படைத்து

சர்க்கரைப் பொங்கல் இயல்புடன் இனித்து

பெரும் பொங்கலைச் சாம்பாரோடு சேர்த்து 

பொங்கலைச் சாப்பிடுவோம் மனம் மகிழ்ந்து!

தஞ்சை த இராமநாதன் 


Thursday, 13 January 2022

போக்கிப் போகட்டும் போகி

 

போக்கிப் போகட்டும் போகி

பயனில்லாப் பழையத் துணிகளைக் கொளுத்தி அழுக்கை அகற்றுவோம் பயனுள்ளப் பழையத் துணிகளை    வெளுத்து அழுக்கற்றுக் கட்டுவோம் 

இல்லத்தில் சிறுகச் சிறுகச் சேர்ந்த அழுக்கைப் பெருக்கி அகற்றுவோம் உள்ளத்தில் சிறுகச் சிறுகச் சேர்ந்த அழுக்கைக் கழித்து அகற்றுவோம் 

வேண்டாதப் பாரங்கள் அகல வேண்டி கொண்டாடப்படும் பண்டிகை போகி வேண்டாதப் பிணிகள் அகல வேண்டி கொண்டாடுவோம் கொரோனாவைப் போக்கி!

தஞ்சை த இராமநாதன் 

Wednesday, 12 January 2022

உலகை உலாவரும் திருக்குறள்

 

உலகை உலாவரும் திருக்குறள்

தெரியாது என்பதால் மொழிப் பெயர்ப்பு செய்து தெரிந்து கொள்வது சிறப்பு      புரியாது என்பதால் மொழி ஆக்கம் செய்து புரிந்து கொள்வதும் சிறப்பு 

அதிகம் பேசுவது ஆபத்து என்பதை கதிர் கலாம் முஷ்கில் என்பர் அரபு மொழியில்  ஆதலால் அதிகம் பேசாத திருக்குறளை அங்கீகரித்துள்ளனர் அரபு மொழியில்

கொஞ்சம் கொஞ்சம் பேசுவது நலம் என்பதை சோய சோய கலாம் கொயிஸ் என்பர் அரபு மொழியில்                                          ஆதலால் கொஞ்சம் பேசி நெஞ்சம் நிறைய வைக்கும் திருக்குறளை அறிய முனைந்துள்ளனர் அரபு மொழியில் 

அரபையறிந்தத் தமிழன் தமிழைக்              கடல் கடந்துப் பரப்பும் விதம் பிரம்மாதம்      மதத்தால் சிதறினாலும் குறளுக்குக் குரல் கொடுக்கும் விதம் பிரம்மாதம்! 

- தஞ்சை த இராமநாதன் 

Tuesday, 11 January 2022

மாடும் ஆடும் காட்டும் பாடம்

 

மாடும் ஆடும் காட்டும் பாடம் 

சுகமான சுமையென ஆட்டைக் காத்து அசைபோடும் பாச மாடு அங்கே          சுயநலமே சுகமென நாட்டைக் கெடுத்து வேஷமிடும் நாசக் கேடு இங்கே

மிதித்து நடந்தாலும் மேனி வலியைத் தாங்கித் தூங்கும் மாடு அங்கே              துடித்துக் கிடந்தாலும் மனித வலியைத்  துச்சமென நினைக்கும் நாடு இங்கே 

பெறாத மாட்டைத் தாயாக நினைத்து      மகிழும் கருப்பழகு ஆடு அங்கே                  பெற்று வளர்த்தோரை சுமையாக நினைத்து அழியும் பேரிழிவில் வீடு இங்கே!

தஞ்சை த இராமநாதன் 

Monday, 10 January 2022

ஐந்தும் ஆறும்

 

ஐந்தும் ஆறும் 

உணர்வு மிகுதியோடு வாழ்ந்தாலும்        அறிவு நிறைவோடு வாழுது ஐந்தறிவு                அறிவு மிகுதியோடு வாழ்ந்தாலும்        உணர்வுக் குறைவோடு வாழுது ஆறறிவு 

உயிரைப் பணயம் வைத்து உயிரைக்      காத்து நன்றியோடு வாழுது ஐந்தறிவு                பணம் பார்க்க உயிரைப் பலி கொடுத்து ஏய்த்துப் பிழைப்பை ஓட்டுவது ஆறறிவு 

எதிர்ப் பார்க்காமல் முடிந்த உதவியைச் செய்து எளிய வாழ்வில் ஐந்தறிவு            எதிர்ப் பார்த்து முடிந்தப் பதவியைப் பெற்று ஆடம்பர வாழ்வில் ஆறறிவு!

தஞ்சை த இராமநாதன் 

Sunday, 9 January 2022

உழவுத் தொண்டு

 

உழவுத் தொண்டு 

தண்ணீரைத் தேக்க வரப்பு உண்டு              எங்க வீட்டு வயல் புளியடிக் குண்டு        பசியைப் போக்கும் உழவுத் தொண்டு மட்டில்லா மகிழ்ச்சி பசுமையைக் கண்டு 

- தஞ்சை த இராமநாதன்

எங்கிருந்து எங்கே?

 

எங்கிருந்து எங்கே?

வெளி நாட்டிலிருந்து விமானம் மூலம்          உள் நாட்டிற்கு இறக்குமதியா?                              உள் நாட்டிலிருந்து விமானம் மூலம்          வெளி நாட்டிற்கு ஏற்றுமதியா?

வருவோரிடம் வதியாக ஒட்டிக் கொண்டு நாடு விட்டு நாடு வந்து விடுகிறது                          வந்த இடத்தில் ஏழை எளியோரையும் விட்டு விடாமல் ஒட்டிக் கொள்கிறது 

அங்கிருந்து இங்கு வந்ததா அல்லது இங்கிருந்து அங்கு சென்றதா தெரியாது 

பரவும் வரை பரவும் விதம் அது யாருக்கும் தெரியாது!                                                        யாதும் ஊரே யாவரும் கேளிர் அது தமிழருக்கும் தெரியாதா?

- தஞ்சை த இராமநாதன் 


Saturday, 8 January 2022

படுக்கையால் படுத்துவிடக் கூடாது

 

படுக்கையால் படுத்துவிடக் கூடாது 

இரண்டு மீட்டர் இடைவெளி எங்கே?இரண்டுங்கெட்டான் நிலை இங்கே! ஒருவொருக்கு ஒருவர் தடுப்பு எங்கே?ஒருவரும் தப்ப முடியாத நிலை இங்கே!

கொரோனாவைப் பரவ விடாமல் தடுத்து ஓட வைக்க இந்த ஏற்பாடா?                            மக்களை உலவ விடாமல் தடுத்துப் படுக்க வைக்க இந்த ஏற்பாடா?

படுத்துக் குணமாகி வீடு திரும்பினால் படுக்கைக் கொடுத்தோர்க்குப் புகழ்!    படுத்துப் பிணமாகி காடு திரும்பினால்  பாடைத் தூக்குவோர்க்குப் புகழ்!

தஞ்சை த இராமநாதன் 






Friday, 7 January 2022

அம்மானைப் பாருங்கள்

 

அம்மானைப் பாருங்கள்

பசிக்காகப் புல்லை மேய வந்த மான்                  புசித்தபின் ஓய்வெடுக்குது இந்த மான்              தெம்போடுப் படுத்திருக்கு கொம்பு மான்          கொம்போடும் படுத்திருக்கு ஆண் மான்

கொம்பில்லா அழகுடன் பெண் மான்                  துள்ளிக் குதித்து ஓடுவதுப் புள்ளி மான்            மிருதுவாகத் தோன்றுவது சருகு மான்                மானத்தோடு வாழுவது கவரி மான்

மாயத்திற்காக வந்தால் அது மாய மான்            இராமாயாணத்திற்காக வந்ததும் மாய மான் கனியைக் கொடுத்து சிறந்தவர் அதியமான்    கனிவைக் கொடுத்து சிறப்பவர் அம்மான்!

தஞ்சை த இராமநாதன் 

Thursday, 6 January 2022

படிப்பது செய்தி பிடிப்பது பிரமை

 

படிப்பது செய்தி பிடிப்பது பிரமை 

கொலை கொள்ளை மோசடி நோயைப் பற்றியேப் படித்தால் மனம் என்னவாகும்?    கலாச்சார சீரழிவு பண்பாடு பேரழிவுப் பற்றியேப் படித்தால் மனம் என்னவாகும்?

கடையடைப்பு கற்பழிப்பு கல்வீச்சுப் பற்றியேப் படித்தால் மனம் என்னவாகும்?விவாவகரத்து போக்குவரத்து தொடர் ரத்துப்  பற்றியேப் படித்தால் மனம் என்னவாகும்?

விலைவாசியில் ஏற்றம் தொலைபேசியில் ஆள் மாறாட்டமென செய்தித் தொடர்ந்தால் பிரமைப் பிடிக்காதா?                                                அறிவுப் பசிக்கு ஏமாற்றம் உணவுப் பசிக்குத் தடுமாற்றமென செய்தித் தொடர்ந்தால் பிரமைப் பிடிக்காதா?

- தஞ்சை த இராமநாதன் 


Wednesday, 5 January 2022

அப்பாதான் சாமியே

 

கருவறையில் பத்துத் திங்கள் சுமந்து பெற்றெடுத்தது தாயாக இருந்தாலும் மணவறையில் அமர்ந்து வாழ்வில் உயர்ந்து தலை நிமிரும்வரை நம்மீது அக்கறையோடு இருந்து முதிர்ந்து ஓய்ந்தவர் அப்பா

அக்கம் பக்கமென ஆயிரம் பேர் ஆறுதல் பேசி பேச்சுக்காக கட்டிக் கதறி அணைத்தாலும்  உம் உதிரம் காய்ந்து சாயுமாறு இருந்தாலும் உழைத்துக் கடமையைச் செய்ததை மறந்து இறந்தாலும் உணர்வோடு கலந்தவர் அப்பா

கண்டித்துக் கறாராக இருந்து தண்டித்து பிள்ளைகள் நலனைப் பேணிக் காத்து பிறவிப் பயனை அடைந்தோமென தூக்கி வளர வைத்த அப்பாதான் அப்போதும் இப்போதும் எப்போதும் சாமி!             

- தஞ்சை த இராமநாதன் 

Tuesday, 4 January 2022

சைனாவிலும் மைனா

 

சைனாவிலும் மைனா 

ஒன்றாகச் சேர்ந்து தன் சமூகத்துடன்            பறந்துத் திரிந்து மகிழ்கிறது மைனா ஒன்றாகச் சேர்ந்து சுமூகத்துடன் அமர்ந்து மகிழ்ந்து மனதாரப் பேசுகிறது மைனா

கூடிப்பேசி நல்ல முடிவெடுக்குது மைனா நைனாக்களுக்கு பாடம் புகட்டுது மைனா கவிக்காக கொய்னாவுடன் சேருது மைனா சைனாவிலும் இருக்குது இந்த மைனா!

தஞ்சை த இராமநாதன் 

Monday, 3 January 2022

வறுமையும் கொடுமையும்

 

வறுமையும் கொடுமையும் 

வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் வீட்டிலேயே வைத்துக் கொல்லுது வாட்டி வதைக்கும் வறுமையின் பசிக் கொடுமை 

வீட்டை விட்டு வெளியே வந்தாலோ வெளியிலேயே வைத்துக் கொல்லுது கொடூரக் கொரோனாவின் கொடுமை

பணம் இல்லாது பணிவோடு நாம் உதவி செய்து வாழ்ந்தபோது தெரியவில்லை அந்தக்கால வறுமையின் கொடுமை 

பணம் விரிந்து நம் கர்வத்தோடு நாம் வாழும்போது தெளிவாகத் தெரிகின்றது இந்தக்கால கொரோனாவின் கொடுமை

கொரோனாக் கொடுமையைவிட கடும் வறுமையின் கொடுமை மோசமென கொடுமையைப் பிரிப்பதுக் கொடுமை 

அக்கொடுமையோ இக்கொடுமையோ எக்கொடுமைத் தொடர்ந்தாலும் அது நம் சமுதாயத்திற்கு கொடுமையிலும் கொடுமை!

- தஞ்சை த இராமநாதன் 



Sunday, 2 January 2022

மணிமகுடமும் பதவியும்

 

மணிமகுடமும் பதவியும் 

பதவிக்கு வந்தபின் மணிமகுடத்தைச் சூட்டினால் அந்தப் பதவிக்குக் கௌரவம் மணிமகுடத்தைச் சூடுவதற்காகவே பதவிக்கு வந்தால் அந்தப் பதவிக்குக் கேவலம்

பொன்னோ ரத்தினக் கல்லோ இல்லாது எதைச் சூடினும் நல்லார்க்கு மணிமகுடமே      பண்பாலும் நாவிற்கினிய சொல்லாலும் நல்லார் என்றென்றும் குல மாணிக்கமே

பொன்னாலும் பொருளாலும் பெற்றப் பதவி தூக்கி நிறுத்தினாலும் நிலைத்து நிற்காது    சொன்னாலும் சொல்வதைத் தடுத்தாலும்  பொய்ச்சாயம் வெளுக்காமல் போகாது!

- தஞ்சை த இராமநாதன் 

Saturday, 1 January 2022

இந்தாண்டுக்கு அடுத்தாண்டு புத்தாண்டு

 

இந்தாண்டுக்கு அடுத்தாண்டு புத்தாண்டு 

போன ஆண்டில் இன்றே புத்தாண்டு          இந்த ஆண்டிலும் இன்றே புத்தாண்டு

வந்து போன ஆண்டுகள் பல உண்டு    நொந்து போன நிகழ்வுகளும் பல உண்டு 

கடந்த இரு ஆண்டுகள் துயர ஆண்டுகள் உயிர்களைப் பலி வாங்கிய ஆண்டுகள் 

அந்தத் துயரங்கள் தொடர்ந்திடக் கூடாது கொரோனாவின் கோரத்தை மறந்திடக் கூடாது!

தஞ்சை த இராமநாதன்