Tuesday, 19 May 2026

பற்றற்ற சுடர்

 

தூய சக்தித் தீய சக்தியைப் பற்றியும்
தீய சக்தித் தூய சக்தியைப் பற்றியும்
பற்ற வைத்து எரிய வைத்தாலும்
பற்றற்ற மாய சக்தி பற்றி எரியாது!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 11 May 2026

உளமார உறுதிமொழி

 

உளமார உறுதிமொழி

எல்லோராலும் உளமாரவென உறுதிமொழி எடுக்க முடியுமா?
முடியும்...
ஏனெனில் கடவுளை நம்பாதவருக்கு
உளமாரத்தான் ஒரே துணை

எல்லோராலும் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்க முடியுமா?
முடியாது...
ஏனெனில் உள்ளத்தையே ஏமாற்றுவோருக்கு
கடவுளின் கருணை கிடைக்குமா?

உளமார உறுதி எடுத்தோருக்கு கடவுள் நல்வழி காட்டட்டும்
கடவுளின் பெயரில் எடுத்தோருக்கு உள்ளம் மெய்வழியில் போகட்டும்!

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 9 May 2026

அனைவரும் ஆட்சிக்கு வரத் துடிப்பதேன்?


அனைவரும் ஆட்சிக்கு வரத் துடிப்பதேன்?

பசி பட்டினியைப் போக்கி பஞ்சம் இல்லாத நிலையை உண்டாக்கவா?
கொலைக் கொள்ளையை அகற்றி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவா?

படித்தோருக்கு தகுதிக்கேற்ற வேலையை உருவாக்கிக் கொடுக்கவா?
நூறு நாள் வேலையை தவிர்த்து வாழ்நாள் முழுதும் வேலையைக் கொடுக்கவா?

சாலைகள் முழுவதும் நீ கண்டு களிக்கும் குப்பையை அகற்றவா?
கண்ட இடமெல்லாம் காணும் மலம் மற்றும் சாணத்தைத் தடுக்கவா?

குடித்துக் கும்மாளம் போடுவோரை வரையறுத்துக் கட்டுப்படுத்தவா?
நீதி நேர்மையைக் காப்பாற்றி தவறாது தண்டனையைத் தரவா?

பார்க்காததைப் பார்ப்போமா?

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 2 May 2026

ஆயிரத்தில் பேத்தியும் நானும்

 




ஆயிரத்தில் பேத்தியும் நானும்
ஆடிப் பெருக்கின் அடுத்த நாள் எனக்குப் பிறந்த நாள்
ஆயிரம் கவிதையைத் தரும் இந்தநாள் எனக்குச் சிறந்த நாள்

குளக்கரைக் களத்தில் அடித்த நெல் குவியலைக் கண்டவன் நான்
காசாங் குளத்தில் குதித்து நல் குளியலைக் கொண்டவன் நான்

ஆயிரக் கணக்கில் குலைகளை வெட்டியபின் தேங்காய்க் குவியல்
பல்லாயிரக் கணக்கில் காம்புகளைப் பறித்தபின் மாங்காய்க் குவியல்

வாராவாரம் சந்தைக்குச் செல்லும் கட்டப்பட்ட கத்தரிக்காய் மூட்டைகள்
தினந்தோறும் பந்திக்குச் செல்லும் வீட்டிலிட்ட நாட்டுக்கோழி முட்டைகள்

உடைக்க முடியாத செழிப்புடன் விளைந்திட்ட கொல்லைக் கடலை
விலை மிக்க கரும்பையும் விளைய வைக்காமல் கொல்லையை விடலை

பெரிய மரங்களின் கொம்புகளில் பூத்துக் குலுங்கும் புளியங்காய்
சிறிய பந்தலின் கம்புகளில்
காய்த்துத் தொங்கும் புடலங்காய்

நெட்டையான வேலியோரக் கரிய மரங்களில் சுவைமிகு பனம்பழங்கள்
குட்டையான அகலப் பெருத்த வீட்டுக் கொல்லை மரத்தில் பலாப்பழங்கள்

குருத்துத் தலையில் குஞ்சம் கொஞ்சத் தட்டையில் அமர்ந்தபடி சோளக் கதிர்
விரல்தன்னை மூடியதுபோல் கை தூக்கி ஓங்கியபடி கேப்பைக் கதிர்

படர்ந்த பசுங்கொடியால் விளைந்த சிவப்புச் சர்க்கரை வள்ளிக் கிழங்கு
வளர்ந்த மரக்குச்சியில் வளர்ந்திட்ட மாவுச்சத்து மரவள்ளிக் கிழங்கு

நான் பிறந்த ஊர் ஆம்பலாப்பட்டு எனும் வீரப்படை பெற்ற மண்                    பழங்கால சிவலிங்கம் அடியேனால் ஆதிசிவனெனப் பெயர் பெற்ற மண்


என்னைச் சிறப்புப் பண்ணிய பூமி
சிங்கப்பூரெனும் பணப்பல மண்
லீ குவான் இயூ எனும் மாமனிதர் அடித்தளமிட்ட பெருமைமிகு மண்

அம்மண்ணோ இம்மண்ணோ எம்மண்ணோ யாவும் நம்மண்ணே!
அகிலம் யாவும் வாழும் பல்லுயிர்கள் மகிழ்வோடு வாழிய வாழியவே!!

(எனது ஆயிரமாவது கவிதையை - என் மனைவி அன்பரசி, மூத்த மகன் மஹாராஜ் - மருமகள் Dr.வினோதினி, இளைய மகன் இராஜராஜ் மற்றும் என் முன்னிலையில் எனது 2 வயது பேத்தி வீரமங்கை ருத்ர யஷோதரா 2 May 2026 அன்று சிங்கப்பூரில் நிகழ்நிலை (Online) மூலமாக வெளியிட்டதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்).

- தஞ்சை த.இராமநாதன்