Tuesday, 31 August 2021

வாழ்க்கையே போராட்டம்

 

வாழ்க்கையே போராட்டம்

வேண்டும் எனவும் போராட்டம்; வேண்டாம் எனவும் போராட்டம்

வாழ்க்கையில் பல போராட்டம்; வாழ்க்கையே ஏன் போராட்டம்?

எல்லாம் விதியின் செயலா? இதுவும் விதியின் செயலா?

எங்கும் இறைவன் அருளட்டும்; மானிட பாவங்கள் அகலட்டும்

அங்கு தள்ளு முள்ளு ஆகுது; இங்கு கடன் தள்ளுபடி ஆகுது 

ஒன்று பட்டால் வெற்றி உமதே; ஒன்று படாத தவறும் உமதே!

- தஞ்சை த இராமநாதன்

சிரித்து சிந்திக்க வைத்தவர்

 

சிரித்து சிந்திக்க வைத்தவர்

சிரிக்காதவரையும் சிரிக்க வைத்து விடலாம் கலகலப்பாகப் பேசினால்

சிரித்தவரையும் சிந்திக்க வைத்து விடலாம் கலைவாணராகப் பேசினால்!

கிடைத்தப் பணமும் அடித்தப் பணமும் எவரையும் பணக்காரன் ஆக்கலாம்

இல்லாத போதும் இல்லையெனக் கூறாமல் கொடுத்தால் கலைவாணர் ஆகலாம்!

திரைக் காட்சிக்காக வந்து ஆடி விட்டுப் போனாலே நட்சத்திர நடிகர் ஆகலாம்

திரைப் புரட்சிக்காக வந்து பாடி விட்டுப் போனாலே கலைவாணர் ஆகலாம்!

சாதிக்கோ வாக்கு வங்கிக்கோ சிலை வைத்தால் தலைவர் ஆகலாம்

காந்திக்கோ மன சாந்திக்கோ சிலை வைத்தால் கலைவாணர் ஆகலாம்!

அநியாயங்களை அகற்றி தர்மத்தைக் காக்க கிருஷ்ணர் பிறந்தார் முன்னொரு வருடத்தில் இன்று

கிருஷ்ணன் என்றப் பெயருடன் பிறந்து கலைவாணராய் இறந்தார் இவர் முன்னொரு வருடத்தில் இன்று! 

 (30/08/2021)

- தஞ்சை த இராமநாதன்

Monday, 30 August 2021

பூவும் பூவையரும்

 

பூவும் பூவையரும்

பூசைக்கும்-பூ ஆசைக்கும்-பூ; மணக்கும்-பூ மணக்கவும்-பூ

பூவைத் தேடும் தேனிக்கு இனிப்பு; பூவைக்கும் பூவைக்கு பூரிப்பு

பூவை விற்றப் பெண் பூக்காரி; பூவை பெற்றப் பெண் பணக்காரி

பூவால் பூவையர்க்கு சிறப்பு; பூவையரால் பூவுக்கும் சிறப்பு

பூத்துக் குலுங்கினால் பயனாகும்; பூவைக் குலுக்கினால் வீணாகும் 

பூவைத் தலையிலும் சூட்டலாம்;  பூவைக் காதிலும் சுற்றலாம்! 

- தஞ்சை த இராமநாதன்

தாயைப்போல பிள்ளை

 

தாயைப்போல பிள்ளை

என்னைவிட நீ அழகாக இருக்கிறாய் என் அன்பு மகளே!

உன்னைவிடவா அழகாக இருக்கிறேன் என் அம்மாச்சி மகளே?

சிரிக்கும்போது பூவாய் மணக்கிறாய் என் செல்ல மகளே!

சிரிக்காமலே சிறப்பாய் இருக்கிறாய் என் அம்மம்மா மகளே!

முடி வளர்ந்ததும் முடிந்து விடுகிறேன் என் அருமை மகளே!

முடியை வளர விட்டால் நானே முடிவேன் என் ஆத்தா மகளே!

படம் எடுத்தாச்சி எழுதிப் படிக்க புறப்படு என் சுட்டி மகளே!

முதலில் பட்டாடையை மடித்து வைத்திடு என் அம்மாயி மகளே!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 29 August 2021

கண் கண்ட கடவுள்

 

கண் கண்ட கடவுள்

ஆக்கிக் காக்க இரு கடவுள்; ஆக்கிக் காக்கும் இது கடவுள்

மற்றக் கடவுள் பலி வாங்கும்; பெற்றக் கடவுள் வலி தாங்கும்

பனி பிணி அயராமல் பணி; அணி மணி பாராமல் பணி

முதியோர் இல்லம் சாபக் கேடு; இதை அறியார் உள்ளம் சவக் கூடு

பந்தா வாழ்வில் முட்டாள் இனம்; ஆதியை மறக்கும் பாவ இனம்

அம்மா அப்பா முதல் சொந்தம்; உயிரோடு கலந்த அசல் சொந்தம்!

- தஞ்சை த இராமநாதன்

எல்லாமே இறைவனின் செயலா?

 

எல்லாமே இறைவனின் செயலா?

பகிரும் மனம் இல்லாதவருக்கு பெரும் பணத்தைக் கொடுத்துக் கெடுத்தாய்

உண்ண உணவு இல்லாதவருக்கு பசியை நிரந்தரமாய் ஏன் கொடுத்தாய்?

கண்ணீரெல்லாம் வழிந்து வலிமிக்கக் கண்ணில் ஒளி வருவது எப்போது?

அனைவருக்கும் உணவு என்ற சமநிலை உருவாக அருள் புரிவது எப்போது?

பணக்காரன் ஏழையென இயல்புடன் உலகில் இருப்பதில் அநியாயம் இல்லை

ஏழையின் வாழ்வில் ஏற்றமே இல்லை என இருப்பதில்தான் நியாயம் இல்லை

ஆடியும் கத்தி சக்தியைப் பாய்ச்சியும் நோயைத் தீர்ப்பதாய் கடவுளைக் காட்டி பிழைக்கும் ஆசாமிகளே!

பசி தீர்க்கும் யுக்தி கண்டு ஏழையின் பசியைத் தீர்க்கும் வழியைக் காட்டினால் நீங்களும் சாமிகளே!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 28 August 2021

ஆனந்தப் பயணம் ஆரம்பம்

 

ஆனந்தப் பயணம் ஆரம்பம் 

மதம் மறைந்து மனிதம் வரட்டும்; வேற்றுமை மறைந்து ஒற்றுமை வரட்டும்

சடங்கு போய் சங்கமம் வரட்டும்; பகைமைப் போய் பந்தம் வரட்டும்

எங்கும் இறைவனை நாம் காணலாம்; நன் மக்களிலும் அவனைக்  காணலாம்

இரத்த உறவிலும் நல் உறவுண்டு; மத்த உறவிலும் நல் உறவுண்டு

மதம் முடிய ஆன்மீகம் ஆரம்பம்; ஆன்மீகம் முடிய உண்மை ஆரம்பம்

உண்மை முடிய ஆனந்தம் ஆரம்பம்; ஆனந்தம் நோக்கியப் பயணம் இங்கே...

- தஞ்சை த இராமநாதன்

யார் மனிதன்?

 

யார் மனிதன்?

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் பொய்யாக வாழ்பவன் மனிதனல்ல

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மெய்யாக வாழ்பவர்தான் மனிதன்!

தனது மனைவி மட்டும் கண்ணகியாக வாழ வேண்டும் என்பவன் மனிதனல்ல

என்றென்றும் கேவலமான கோவலன் வாழ்வை வாழாதவர்தான் மனிதன்!

நன்றி மறந்து நாயைவிட மோசமான வாழ்வை வாழ்பவன் மனிதனல்ல

உயிரே போனாலும் உறவுக்காக நன்றி உணர்வோடு வாழ்பவர்தான் மனிதன்!

துரோகத்தை மறைக்க கோயில் உண்டியலை நிறைப்பவன் மனிதனல்ல

தெரியாத மனிதருக்கும் முடிந்த அளவு உதவி செய்பவர்தான் மனிதன்!

வெளியில் வேடமிட்டு பக்திமானாக நடிப்பவன் தரமான மனிதனல்ல

உள் மனதின் சுத்தத்தோடு சக்திமானாக வாழ்பவர்தான் தங்கமான மனிதன்!

கிடைத்த வாய்ப்பில் சுய நலத்துக்காக மட்டும் பணம் சேர்ப்பவன் மனிதனல்ல

கிடைத்த வாய்ப்பில் உயிர்கள் பொது நலத்திற்காக வாழ்பவர்தான் மனிதன்!

ஏமாற்றி மாளிகை வாகனமென மாயை வாழ்வை வாழ்பவன் மனிதனல்ல

நேர்வழியில் உழைத்து சிறு குடிசையில் வாழ்ந்தாலும் அவர்தான் மனிதன்!

ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரையாக வாழ்பவன் மனிதனல்ல

எல்லாம் இருக்கும் ஊரில் இனிக்கும் கரும்பாக வாழ்பவர்தான் மனிதன்!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 27 August 2021

தப்பு அடித்தல்

 

தப்பு அடித்தல்

தப்பை அடித்தால் தவிலாக மாறாமல் தப்பு தப்பு என்றுதான் சத்தம் வரும்

தப்பை தப்பாக அடித்தாலும் சரியாக அடித்தாலும் தப்பாகத்தான் சத்தம் வரும்

ஆண்கள் தப்பைத் தட்டி அடிக்கும்போது தப்பின் அடி தப்பாமல் தப்பாகவே இருக்கும்

பெண்கள் தப்பைத் தட்டி அடிக்கும்போது அடி தப்பினாலும் தப்பு தப்பாகவே இருக்கும்

செய்தியை தெருவில் தட்டிச் சொல்ல தண்டோராவின் தட்டுச் சத்தம்

சாவு வீட்டில் செத்துப் போயிட்டார் தூக்கு தூக்கு என்ற மெட்டுச் சத்தம்

தப்பை அடிப்பவர் தப்பை அடித்து தப்பாக இருப்பதும் தப்பு

தப்பை அடிக்காதவர் தப்பை அடிக்காது தப்பாக இருப்பதும் தப்பு!

- தஞ்சை த இராமநாதன்

வித்தையை விரும்புவது விந்தை

 

வித்தையை விரும்புவது விந்தை

முகத்தை மூடி நடிப்பது வித்தை; மழலையின் முகத்தை மூதுவதும் விந்தை

முகத்தைக் காட்டி நடிப்பது வித்தை; மழலை சிரிப்பில் ஏது விந்தை?

மழலை நகையை மாற்ற வேண்டாம்; காரிய நகை வேண்டவே வேண்டாம்

எங்கும் அழகு குழந்தை சிரிப்பில்; இங்கும் அழகு அதே சிரிப்பில்!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 26 August 2021

உதையும் வதையும்

 

உதையும் வதையும்

வரிக்குதிரை வரிகள் வழியாகக் கடக்க வழி இல்லையே என்றப் பயமா?

வரிக்கு மேல் வரி சாலையில் நடந்தாலே வந்து விடுமோ என்றப் பயமா?

கழுதையைக் கடத்த மனிதனின் சதியென செய்தி வந்திடுமோ என்றப் பயமா?

மனிதனைக் கடிக்க கழுதை முயற்சி என தலைப்புச் செய்தியாக வருமோ என்றப் பயமா?

கழுதை நடந்து கடந்து வந்த வதையை மனிதன் உட்கார்ந்து உணரும் நேரம் இது 

மனிதன் நடந்து நொந்து வந்து உதைப்படப் போவதை கழுதை நின்று  உணரும் நேரம் இது!

- தஞ்சை த இராமநாதன்

அண்ணாவைப் பற்றியப் பாடம்

 

அண்ணாவைப் பற்றியப் பாடம்

விளங்க வைத்து விளக்கியப் பாடம்; படம் பார்த்து பகுத்தறியப் பாடம்

எதுகை மோனை உணர்வுப் பாடம்; மேடை அதிர்ந்த உவமைப் பாடம்

தமிழின் பெயரில் ஒரு நாடு; தமிழை மானத்தோட நாட தமிழ்நாடு

புலி பெரிதா? நாய் பெரிதா? தரம் பெரிது! தமிழ் பெரிது!

துரையைத் துறந்த அறிஞர் அண்ணா; அண்ணன் இல்லார்க்கும் அண்ணா

தரையைத் துறந்த தம்பிகள் உண்டா? தம்பிகள் அண்ணா ஆனதும் உண்டா?

 - தஞ்சை த இராமநாதன்

Wednesday, 25 August 2021

குழந்தையின் குறும்பு

 

குழந்தையின் குறும்பு

அள்ளியும் வீசியும் ஆடிடும் குறும்பு; துள்ளியும் பாடியும் குதித்திடும் குறும்பு

தூவியும் பூசியும் நகைத்திடும் குறும்பு; தாவியும் ஓடியும் திளைத்திடும் குறும்பு

பார்க்காதபோது அமைதியுடன் குறும்பு; பார்க்கும்போது ஆரவாரக் குறும்பு

பாப்பா விரும்பும் அடக்கமானக் குறும்பு; பையன் விரும்பும் அடாவடிக் குறும்பு

எல்லோரிடத்திலும் காட்டிடும் குறும்பு; தாத்தா பாட்டியிடம் கூட்டிடும் குறும்பு

செல்லமாய் சிரித்து ஏய்த்திடும் குறும்பு; கோபமாய் அழுது சாதித்திடும் குறும்பு!

- தஞ்சை த இராமநாதன்

மரமேறிய காலம்

 

மரமேறிய காலம் 

மரமேறி குதித்தக் காலம் வருமா? மல்லுக் கட்டிய காலமும் வருமா?

பல் தெரிய சிரித்தாக் காலம் வருமா? பகட்டு இல்லாது சிரித்தக் காலம் வருமா?

பணத்தால் பாகுபாடு இங்கில்லை; மனத்தால் வேறுபாடும் இங்கில்லை

வாடா போடா டேய் என்னடா உறவு; வாங்க போங்க சொல்லாத நல்லுறவு

காலம் ஓடும் வாழ்க்கையும் ஓடும்; மரத்தைப் பார்த்ததும் எண்ணமும் ஓடும்

ஓட்டம் ஓடினால் உடலும் வளரும்; வயது வளர்ந்தால் உடலும் தளரும்!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 24 August 2021

பழைய சோறு

 

பழைய சோறு

இரவு சாப்பாட்டோடு சேர்த்து வடித்து இரவு முழுதும் நீரினுள் மூழ்கிய சோறு

காலைப் பொழுதில் மண் குண்டான் கஞ்சிக் கலயம் சேரும் சோறு

புளியால் பளிச்சிடும் வெண்கலக் கும்பாவில் நீரோடு நிறைந்த சோறு

சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்து தாத்தாக்கள் ருசித்து சாப்பிட்ட சோறு

நீர் மோரோடு ஒரு முறடு குடிக்க சேர்த்து ஒரு பிடி உள்ளே சென்ற சோறு

பச்சை மிளகாயோடு கல் உப்பைக் கடித்ததோடு வேகமாக செல்லும் சோறு

சின்ன வெங்காயக் கடியின் தனிச்சுவை விரைவாகக் கேட்டிடும் மேலும் சோறு

குளிரும் காரசார நாவோடு கண்ணில் நீர் வர பலம் கொடுத்த பழைய சோறு!

- தஞ்சை த இராமநாதன்

படமும் காட்சியும்

 

படமும் காட்சியும்

படம் பிடித்து படம் காட்டுவார்கள்; படம் காட்டி படம் பிடிப்பார்கள்

படம் காட்டும் பறவையா இது? படம் பார்க்கும் பறவையா இது?

கண்டக் கண்ட படம் எடுக்கின்றார்; படத்தையே படம் எடுக்கின்றார்

கண்டக் காட்சிக்கு பல சாட்சி; காணாத காட்சிக்கு ஏது சாட்சி?

குருவிக் காட்சி அருவிக் காட்சி; சாலைக் காட்சி சோலைக் காட்சி

கண்ணோடு வராது கண்டக் காட்சி; காணாமல் காட்டும் கடவுள் காட்சி!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 23 August 2021

தாத்தா பேரன் பாசம்

 

தாத்தா பேரன் பாசம்

விடாப்பிடியுடன் சீக்கிரம் திரும்பி வரும்படி பேரனின் கோரிக்கை

வலைப் பிடியோடு திரும்பி வரும்வரை அமரும்படி தாத்தாவின் கோரிக்கை

மீன் பிடியோடு தரையடி உடனே வந்து சேரும்படி பேரனின் கோரிக்கை

மீன் பிடியில் கிடைக்கும் வரும்படியில் கூட்டித் தரும்படி தாத்தாவின் கோரிக்கை

சும்மா பேசியபடி நிற்காமல் போகும்படி பாட்டி சொன்னபடி நடந்தார் தாத்தா

தாத்தா சொன்னபடி செடியின் நிழலடியை நோக்கியபடி நடந்தான் பேரன்!

- தஞ்சை த இராமநாதன்

உழைப்பவரும் யோகியே!

 

உழைப்பவரும் யோகியே!

உழைக்கத் தெரிந்த உழைப்பாளி; உழைக்கத் தயங்கா உழைப்பாளி

காலணி இல்லா காலுடன் நடை; மேனிக்கு இல்லை மேல் உடை

உயரமாக அடுக்கத் தெரிந்தவர்; அயராமல் இழுக்கத் தெரிந்தவர்

விரைவில் வருமா வாழ்வில் மாற்றம்? நல்வாழ்வாகவே வருமா அம்மாற்றம்?

யோகியின் அகவாழ்வில் ஆனந்தம்; உழைப்பவர் வாழ்விலும் அவ்வானந்தம்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 22 August 2021

சீர்மிகு சிங்கார சென்னை

 

சீர்மிகு சிங்கார சென்னை

சென்னைப் பட்டினம் என அன்றிருந்த சென்னை

மதராசு பட்டினம் எனவும் அன்றிருந்த சென்னை

மெட்ராஸ் என அழகாக அழைக்கப்பட்ட சென்னை

இரு மாமாங்கமாய் சென்னையான சென்னை

திருப்பதியைக் கொடுத்து தலைநகரான சென்னை

மெரீனாவின் கரையால் உலகப் புகழில் சென்னை

மயிலை கபாலீஸ்வரரால் காக்கப்படும் சென்னை

பழைய செந்நிற கட்டிடங்களுடன் சிங்கார சென்னை

மணலி சுத்திகரிப்பு ஆலைகளோடு சென்னை

குரோம்பேட்டை தோல் ஆலைகளோடு சென்னை

மாமல்லபுரத்தை புறத்தில் கொண்ட சென்னை

மீனம்பாக்கம் விமான நிலையத்தோடு சென்னை

பல இன மக்கள் சுறுசுறுப்பில் சீர்மிகு சென்னை

அலாதி அடையாள உச்சரிப்பில் சிறப்புமிகு சென்னை

ஆங்கிலேயருக்கு விற்றவரின் பெயரால் உண்டான சென்னை

Sennai என இருக்க வேண்டியது Chennai என ஆகிவிட்ட சென்னை!

- தஞ்சை த இராமநாதன்

மகிழ்வில் காளை

 

மகிழ்வில் காளை

பூவோடும் பூரிப்போடும் காளை

பொறுமையுடன் நிற்கும்  காளை!

காளைக் காதோரம் காலையில் கை வைத்தாரே

காளையை அடங்கச் சொல்லி கை வைத்தாரோ?

இங்கே அடங்காக் காளை அடங்கியதா?

அல்லது அடங்கியக் காளை அகப்பட்டதா?

காளையால் களைக் கட்டிவிடும் பொங்கல்

காளையைக் காட்டினால் கலகலப்பாகும் பொங்கல்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 21 August 2021

மவுன சோகங்கள்



மவுன சோகங்கள்

மனைவியை இழந்த முதியவர்; ஆனால் நடக்க முடிந்த முடி நரைத்த முதியவர்

ஒரே மகனைப் பெற்ற முதியவர்; பேரப் பிள்ளைகளோடு வாழ்ந்தப் பெரியவர்

முதியோர் இல்லம் சேர்ந்த முதியவர்; மகனால் அங்கே சேர்க்கப்பட்ட முதியவர்

சாப்பாட்டுக்கு குறையில்லை அவருக்கு; சகாக்களுக்கும் குறைவில்லை அவருக்கு

அகத்தின் தாக்கம் முகத்தில் அவருக்கு; சுகம் இருந்தும் தீராத சோகம் அவருக்கு

மகனோடு வாழ விருப்பம் அவருக்கு; மகனிடத்தில் சொல்ல மனமில்லை அவருக்கு

இதை என்னிடத்தில் சொன்னபோது கண் கலங்கினார் அவர்

நானும் கலங்கினேன் - ஆனாலும், கண் துடைத்து கண் விழித்தார் அவர்

அவர் மகனைப் பார்த்து இது நியாயமா என கேட்க நினைத்தேன் நான்

என் மகன் நல்லவன் இந்த சமுதாயம்தான் சரியில்லை என்றார் அவர்

பெரியவரைப் பார்த்து அதிர்ந்துப் போனேன் நான்

எதுவும் நடக்காததைப் போல் நடந்து சென்றார் பெரியவர்

தியாகம் பல செய்து சோகத்தில் வாழும் எம் பெரியோரே!

உம் சோகத்தை உணர்ந்து என் கண்ணீரை காணிக்கை ஆக்குகிறேன் பெரியோரே!

தெரிந்தும் தெரியாததைப் போல் நடிக்கும் சிறியோரே!

மூத்தோரை உன்னோடு சேர்ந்து வாழ அனுமதி சிறியோரே!

- தஞ்சை த இராமநாதன்

இனிக்கும் தமிழ்

 

இனிக்கும் தமிழ்

தமிழின் சுவை தனிச் சுவை

முக்கனி போல் முத்தமிழ்ச் சுவை!

தெவிட்டாமல் சுவைக்க வைக்கும்

பொங்கல் போல் பொங்க வைக்கும்!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 20 August 2021

மதத்தில் தவறு இல்லை

 

மதத்தில் தவறு இல்லை

மதக் கொள்கைகளில் தவறு இல்லை; மதக் கல்விகளில் தவறு உள்ளது

மதத் தத்துவங்களில் தவறு இல்லை; மதத் தாவல்களில் தவறு உள்ளது

மத அடிப்படையில் தவறு இல்லை; மதக் கூலிப்படையில் தவறு உள்ளது

மதத்தை போற்றுவதில் தவறு இல்லை; மதத்தால் பிதற்றுவதில் தவறு உள்ளது

மதத்தை மதிப்பதில் தவறு இல்லை; மதத்தால் கொதிப்பதில் தவறு உள்ளது

மதம் பற்றிய அறிவில் தவறு இல்லை; மதம் பற்றிய வெறியில் தவறு உள்ளது

மதம் பிடித்த யானையில் தவறு இல்லை; மதம் பிடித்த மனிதனில் தவறு உள்ளது

மதத்தில் பிறந்தால் தவறு இல்லை; மதத்தால் இறந்தால் தவறு உள்ளது

மத இணக்கம் உள்ளளவில் தவறு இல்லை; மத இணக்கம் உதட்டளவில் தவறு உள்ளது!

- தஞ்சை த இராமநாதன்

செய்நன்றி அறிதல் (101 - 110)

 

செய்நன்றி அறிதல் (101 - 110)

உதவி செய்யாமையும் நல்லதல்ல; உதவி நினையாமையும் நல்லதல்ல

தருணத்தில் தாகம் தீர்த்தார் நல்லார்; தரணியில் தலை சிறந்த நல்லார்

அறியார்க்கு உதவியோர் உயரியோர்; அளவில்லா அன்பினை உடையோர்

சிறு உதவி செய்து பிதற்றுவோர் - பேருதவி யாதென அறியா கீழோர்

திரும்ப உதவுவோர் உதவி பெரிது; முன்பே உதவியோர் உதவி மிகப் பெரிது

குற்றமற்றார் உறவை போற்றி வாழ்; துயரை நீக்கியவரை வணங்கி வாழ்

பல பிறவியேனும் எடு துணிந்து; துன்பம் துடைத்தாரை நினைந்து

நன்றியை என்றும் நீ மறக்காதே; தீமையை மறக்க நீ மறக்காதே

ஒருவர் கொடும் செயலை மறந்திடு; அவர் உதவி எண்ணி வாழ்ந்திடு

பல பாவமாயினும் நீ தப்பிக்கலாம்; நன்றி மறந்தால் தப்பவே முடியாது!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 19 August 2021

மனித நேயமும் அநியாயமும்

 

மனித நேயமும் அநியாயமும்

அனைவருக்கும் உணவு வேண்டுமென நினைத்தால் அது மனிதநேயம்

தனக்கு மட்டும் இருந்தால் போதுமென நினைத்தால் அது அநியாயம்

பசியோடு இருப்போர்க்கு பசியாறக் கொடுத்தால் அது மனிதநேயம்

பசியால் வாடுவோரை பரிதவிக்க விட்டு பசியாமலே புசிப்பது அநியாயம்

போராடுபவரை அழைத்துப் பேசி பிரச்சினையைத் தீர்த்தால் மனிதநேயம்

வருந்தி சாகும்வரை போராட விட்டு வஞ்சனை செய்தால் அது அநியாயம்

அடுத்த நாட்டில் அபாயமென்றால் முன் சென்று உதவுவது மனிதநேயம்

அனாதையாகி இறக்கும் போது இங்கே அகதியாக வா என்பது அநியாயம்

முடியும்போது முடிந்ததை செய்து சார்ந்தோரைக் காப்பது மனிதநேயம்

உதவியவர்க்கு நன்றியோடு இல்லாது நயவஞ்சகம் செய்வது அநியாயம்

கன்று நட்டு நீர்ப் பாய்ச்சி மரமாக்கி சந்ததியைக் காப்பது மனிதநேயம்

நட்டவனை கெட்டவன் மொட்டை அடித்து காசை தனக்காக்குவது அநியாயம்

அன்பால் அரவணைத்து மனிதரைக் காத்தால் அது மனிதநேயம்

ஆசையின் போதையில் சூழலுக்கேற்ப ஆட்டம் போட்டால் அது அநியாயம்!

- தஞ்சை த இராமநாதன்

வீடு மாடு நாடு

 

வீடு மாடு நாடு

மாட்டை வைத்தே மாட்டுப் பொங்கல்; மாடே இல்லாமல் வீட்டுப் பொங்கல்

உழுத மாட்டை ஓட்டி விட்டோம்; உழாத மாட்டை ஓட விட்டோம்

இல்லாதது இருப்பதும் மடமை; இருந்ததை மறந்ததும் மடமை 

கலையை துறந்ததும் மடமை; காளையை மறந்ததும் மடமை 

மாட்டைக் கட்டி மாட்டுப் பொங்கல்; மாட்டைக் காட்டி நமக்குப் பொங்கல்

வீட்டோடு மாடு வருவது எக்காலம்? திருஷ்டி சட்டி தூக்குவது எக்காலம்?

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 18 August 2021

வாழ்க்கைப் பயணம்

 

வாழ்க்கைப் பயணம்

பாயை எல்லாம் சுருட்டி எடுத்து

நாற்காலியை எல்லாம் அடுக்கி எடுத்து

சுருட்டியப் பாயை மடியில் வைத்து

அடுக்கிய நாற்காலியை தொங்க வைத்து

சுருட்டியப் பாயில் உட்கார வைத்து

மனையாள் சுமையை சுகமென நினைத்து

சுயத் தொழிலை மேலும் தொடர நினைத்து

பாதுகாப்பற்ற பயணத்தில் அர்த்தமற்ற கெத்து!

- தஞ்சை த இராமநாதன்

பழமை சார்ந்த புதுமை வேண்டும்

 

பழமை சார்ந்த புதுமை வேண்டும்

வேண்டாதவை வேண்டாம் விடுக; வேண்டியவை வேண்டும் வருக

வேண்டியாவது வேண்டாதவை விடுக; வேண்டியே வேண்டியவைப் பெறுக

புற அழுக்கை தீயோடு அகற்று; அக அழுக்கை ஒளியோடு அகற்று

அழுக்கை சேர்ப்பது மிக எளிது; சேர்க்காமல் இருப்பது மிக அரிது

தீமை எல்லாம் தீயோடு போகட்டும்; தீரா துன்பம் தீர்ந்து போகட்டும்

உலகெல்லாம் தூய்மை ஆகட்டும்; உளமெல்லாம் மென்மை ஆகட்டும்!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 17 August 2021

நீராவிக் கப்பல்

 

நீராவிக் கப்பல்

நீர் ஆவியின் ஆற்றல் கப்பலை இயக்க வைக்கும்

நீரை ஆவியாக்க நிலக்கரி நெருப்பைக் கக்கும்

நீர் எரிந்து கடலின் மேல் பயணக் கப்பல் மிதக்கும்

ஆணவம் எரிந்தால் நம் ஊழ்வினையை அழிக்கும்!

- தஞ்சை த இராமநாதன்

வெற்றிப் பாதை (படி தாவும் வாத்துக் குஞ்சுகள்)


 வெற்றிப் பாதை (படி தாவும் வாத்துக் குஞ்சுகள்)

இயலாது என முயலாது விடவில்லை; எட்டுவதை எட்டாமல் விடவில்லை

கிட்டுவது கிட்டாமல் போவதில்லை; தட்டுவது தட்டாமல் போனதில்லை

முடிந்ததை முடித்து வாழணும்; முடிந்ததை மறந்தும் வாழணும்

தான்தான் தாவணும் இரை தேட; தான்தான் சாகணும் இறை தேட

உந்துவதால் பந்து உயர்வானது; உந்தியதால் பந்தம் நிலையானது 

இவ்வழி தாய்வழி அவ்வழி நல்வழி; இவ்வழி நல்வழி அவ்வழி தாய்வழி!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 16 August 2021

மணக்கும் மல்லிகை

 

மணக்கும் மல்லிகை  

மொட்டாகப் பறித்து சரம் கட்டிய பின் நாரோடு வாடிப் போகாமல் மலரும்

மொட்டின் இயல்புடன் மலர்ந்து சட்டென விரிந்து நாரோடு சேர்ந்து நாரும் நாறும்

மல்லிப் பூ வாசம் மல்லிகை வாசமாகி பூவை வைக்கும் பூவையர் வசமாகும்

பூ வைத்த பூவையர் நாரைப் போல் மாறி மண மணப்பதால் மனம் மகிழ்வாகும்

பூவை வைத்தவள் பூவையர் ஆனதால் பூவை வைத்தவன் பூவையன் ஆவனோ?

பூவை வைத்து பெற்ற சுகம் கவிபாடும் பூவை வைத்து விட்ட சுகமும் கவிபாடும்!

- தஞ்சை த இராமநாதன்

நீராடல்

 

நீராடல்

உள்ளங் கையில் உள்ள எண்ணெய்; உச்சந் தலையில் நல்ல எண்ணெய்

உள்ளங் காலும் மிதமாகக் குளிரும்; உள்ளமோ நல் இதமாகக் குளிரும்

நீராடும் போது காற்றாடும் நேரம்; நீராடிய பின்னே அரப்போடும் நேரம்

அம்மா முந்தானையே துண்டாகும்; துவட்டினால் பொலிவு உண்டாகும்

சுடச்சுட சுவையான சாப்பாடு - அது; அன்பு அம்மா சமைத்த சாப்பாடு

இன்னும் கொஞ்சம் என செல்லம்; கொஞ்சம் கூடவே உணவு செல்லும்

அசதி கலந்த வசதியான தூக்கம்; வசதி உடையார் பார்க்காத தூக்கம்

குருமி எடுத்து காது சுத்தம் பெறும்; கிருமி தடுத்து வாழ்வு நலம் பெறும்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 15 August 2021

முதுகெலும்பு முக்கியம்

 

முதுகெலும்பு முக்கியம்

ஒரு புறம் பண்டிகைக் கொண்டாட்டம்; மறு புறம் குளிரில் திண்டாட்டம்

ஒரு புறம் போதையில் உளறல்; மறு புறம் பாதையில் குமுறல்

போராடுவோர் நியாயத்தைக் கேளீர்; போராடுபவரும் நமது கேளிர்

போராடும் நிலை வந்ததே சோகம்; போராட்டம் தொடர்வதும் சோகம்

இலவசத்தைப் பெறுகிறார் இங்கே; பல சுகத்தை இழக்கிறார் அங்கே

விவசாயி நலத்திற்கு வேண்டுவோம்; விவசாயி நிலத்திற்கும் வேண்டுவோம்!

- தஞ்சை த இராமநாதன்

தாவரம் தா வரம்

 

தாவரம் தா வரம்

மேகம் மரங்களைப் பார்க்குது; மரம் மேகங்களைப் பார்க்குது

மழை இரண்டையும் சேர்க்குது; பூமி வளத்தால் சிறக்குது

பச்சையம் சூரியனைப் பார்க்குது; சூரியன் ஒளி கொடுத்து காக்குது

பூக்கள் காற்றால் அசையுது; காற்று பூக்களை இணைக்குது

பூக்களுக்காக இலைகள் உதிருது; பூத்ததும் இலைகள் துளிருது

நிழலால் மரத்தடி குளிருது; இயற்கையால் வாழ்வு மிளிருது!

- தஞ்சை த இராமநாதன்

மண்ணை மீட்ட மாவீரர்கள்

 

மண்ணை மீட்ட மாவீரர்கள்

அடிமைத்தன அவமானத்தை அக்கிரம அவலத்தை அகற்றிய அற்புத வீரர்கள்

ஆண்டோரின் ஆணவ ஆட்சியின் ஆட்டத்தை ஆட்டி ஆடவைத்தத் தீரர்கள்

இந்தியாவின் இறையாண்மையை இன்னுயிர்க்கு இணையாக்கிய வீரர்கள்

உரிமை உணர்வோடு உடமையின் உரிமையோடு உறுதிமிகு தீரர்கள்

ஊர் ஊராய் ஊராரை ஊக்கப்படுத்தி ஊருக்கு ஊர் ஊடகமான வீரர்கள்

எங்கு எப்போது எப்படி எவ்வாறு என எண்ணி எழுச்சியை எழுப்பிய தீரர்கள்

ஏமாற்றி ஏமாளியாக்கி ஏழையாக்கிய ஏதிலாரை ஏதுமில்லாராக்கிய வீரர்கள்

ஒருமித்த ஒருமைப்பாட்டின் ஒரேயொரு ஒலியோசையில் ஒலித்தத் தீரர்கள்

ஓய்வின்றி ஓடோடி ஓங்கிய ஓங்கார ஓசையால் ஓடவிட்ட ஓரணி வீரர்கள்

அந்நியர் ஆளா இலட்சியம் ஈடேற உற்சாகத்தின் ஊற்றான தீரர்கள்

எல்லோரும் ஏற்கும்படி ஐயமிலா ஒற்றுமை ஓங்க ஔடதமான வீரர்கள்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 14 August 2021

கூடி வாழும் யானை இனம்

 

கூடி வாழும் யானை இனம்

உருவத்தில் பெரியது யானையினம்; ஒன்றுபட்டு வாழுமினம் யானையினம்

ஒதுங்கி வாழுமினம் யானையினம்; சீண்டினால் சீறுமினம் யானையினம்

மாமிசம் உண்ணாத பலமான இனம்; தாவரம் உண்ணும் வலுவான இனம்

கொன்று குவிக்க அலையா இனம்; ஒளித்து வைக்க எண்ணா இனம்

பிள்ளையாராக மதிக்கப்படும் இனம்; பிள்ளைகளாலும் துதிக்கப்படும் இனம்

காடு அழிவதால் அழிக்கப்படும் இனம்; காட்டைக் காக்கணும் மனித இனம்!

- தஞ்சை த இராமநாதன்

எங்கள் தமிழ்

 

எங்கள் தமிழ்

பழந்தமிழ் நூல்களைப் புரட்டுவோம்; பைந்தமிழ் தகவலைத் திரட்டுவோம்

பனை ஓலையிலும் தமிழ் சிறப்பு; வலை தளத்திலும் தமிழ் சிறப்பு

அமிழ்தத்தை எவரும் அறியார்; படித்தபின் அதை இதாக அறிவார்

அரைகுறை அறிவு முழுமைப் பெறும்; தமிழால் அறிவு கூர்மைப் பெறும்

இயல் இயல்பாகவே இருக்கும்; இசையோ தேனாகவே இனிக்கும்

நாடகத்தில் உணர்வு கிட்டும்; முத்தமிழே என முரசு கொட்டும்!

- தஞ்சை த இராமநாதன்

படும் பாட்டின் படம்

 

படும் பாட்டின் படம் 

உழைப்பவர் அடைகிறார் கஷ்டம்                        அதை ரசிப்பதில் பலருக்கு இஷ்டம்

விவசாயத்தை ஒழிப்பது திட்டம்                          உழைப்பைத் தடுப்பதும் திட்டம்

பரம்பரைத் தொழிலை துரத்துகிறாய்                பக்குவமாய்க் காயை நகர்த்துகிறாய்

பாட்டாளியை நீ ஏமாற்றுகிறாய்                          படக் காட்சியை நீ மாற்றுகிறாய்

படம் பிடித்தவர் ஒரு விவசாயியா?                      நாற்றுப் பறிக்க நீ போவியா?

சிறுமைப்படுத்த படம் எடுத்தியா? பெருமைப்படுத்த படம் எடுத்தியா?

இளைஞர் எல்லாம் ஒதுங்கினர்                          இழிவு என நினைத்துப் பதுங்கினர்

வருங்காலம் உழவை விரும்பாதோ?                  கார்பரேட் குறி நிச்சயம் தப்பாதோ?

- தஞ்சை த இராமநாதன்

Friday, 13 August 2021

கியூபாவின் காஸ்ட்ரோ

 

கியூபாவின் காஸ்ட்ரோ

மருத்துவ வசதியில் உலகத் தரம்                        மகப்பேறு மருத்துவத்தில் மகத்தானத் தரம்      படிக்க வைத்ததில் உலகச் சாதனை                    அதிகப் படிப்பறிவிலும் உலகச் சாதனை

சுயநலம் நோக்கும் மானிடம் பொய்                    சுயநல திருட்டு வாழ்வும் பொய்                          பொதுநலம் நோக்கும் மானிடம் மெய்                  பொதுநலம் காத்த காஸ்ட்ரோவும் மெய்

போலிகளின் சொத்தப் புத்தியால்                        வந்தப் புரட்சி செத்தப் புரட்சி                                  காஸ்ட்ரோவின் சொந்தப் புத்தியால்                    வந்த யுத்தப் புரட்சி சுத்தப் புரட்சி!

- தஞ்சை த இராமநாதன்

நல்ல தை நல்லதை செய்யட்டும்

 நல்ல தை நல்லதை செய்யட்டும்

ஐந்து ஐநூறு இருபத்தைந்து நூறு                        இதை வைத்து பொங்கல் கூறுவதா கூறு?

ஆடியில் தண்ணி திறந்தும் பஞ்சமா?                அணை நிரம்பினாலும் அதே பஞ்சமா?

கொடுத்து ஏழை ஆக்குகின்றாரா?                      பெறுவதால் ஏழை ஆகின்றாரா?

அன்று பொன் விளைந்த பூமி                                இன்று வளம் இழந்த பூமியா?

இல்லாருக்கு இருப்போர் கொடுப்பர்                  பொங்கலைப் பொங்கித் திளைப்பர்

அரசு கொடுப்பாராக இருப்பது பொது நலம்      மருத்துவம் இலவசமானால் புது நலம்

எல்லோரும் பெறட்டும் அடிப்படை வளம்            வறுமையைப் போக்கட்டும் வளமான நிலம்

தை பிறந்ததும் நல்ல வழி பிறக்கட்டும் இல்லாமை இனி இல்லாமல் போகட்டும்!

- தஞ்சை த இராமநாதன்

வீரத்தாய்

 

வீரத்தாய்

சிவகங்கை தந்த வீரமான மங்கை                        மறத் தமிழரின் தன்மான நங்கை

வேல் ஏந்தினார் வேலு நாச்சியார்                        கதி கலங்கினார் அந்நிய ஆட்சியார்

உருது சகோதரர் ஆதரவும் பெற்றார்                  மருது சகோதரர் ஆதரவும் பெற்றார்

நாச்சியாரோடு மங்கையர் படை வாளும் ஏந்தினர்                                                                      போர்க் களத்திலே மங்கையரும் உயிரை நீத்தனர்

தன்னுயிர் நீத்து தரணியைக் காத்தனர் மானத்தோடு மண்ணைக் காத்தனர்

தற்காப்புப் படையில் மானமிகு மங்கையர் பலருண்டு                                              தற்கொலைப் படையிலும் மடிந்தவர் பலருண்டு

முறம் கொண்டு புலியை அடித்தவரும் பலருண்டு                                                                    படை கொண்டு பலியைத் தீர்த்தவரும் பலருண்டு!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 12 August 2021

தேக்கமும் தேக்கமும்

 

தேக்கமும் தேக்கமும்

மழை நீர் இயற்கைத் தந்த மாவரம்                      மழை நீரைத் தருவதும் இயற்கைத் தந்த தாவரம்

வெள்ள நீரைத் தேக்க தேவை தேக்கம்              தேக்கத்தை ஆக்கும் கொள்கையில் தேவையில்லை தேக்கம்

காசை தண்ணீரைப் போல் செலவழிக்க வேண்டவே வேண்டாம்                            தண்ணீரை காசைப் போல் தேக்கி வைக்கவும் வேண்டவே வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

வீரமான கட்டபொம்மன்




வீரமான கட்டபொம்மன்

சிவாஜி கணேசன் மூலம் கண்டோம்                    கட்டபொம்மனை நாம் கண்டோம்

பாஞ்சாலங்குறிச்சியிலே ஒரு புரட்சி                  பயமறியாக் காளையர்களின் புரட்சி

தனக்கு சிங்கமான இரு தம்பிகள்                      அண்ணனுக்கு ஈடான இரு தம்பிகள்

ஒரு சிங்கம் ஊமத்துரையானார்                          மறு சிங்கம் துரை சிங்கமானார்

கற்றுக் கொடுப்பவர் நாம் என்றார்          கற்பிக்க நீ முயலாதே என்றார்

வெற்றி வேல் வீர வேல் முழக்கம்                          பரங்கியரை பயமுறுத்திய முழக்கம்

உயிருக்குப் பயப்படாத வீர வேந்தன்                மானத்தோடு மறைந்த வீர வேந்தன்

வரைந்த மீசையுடன் பள்ளி மேடையிலே            நிறைந்த ஞாபகம் என் நெஞ்சினிலே!

- தஞ்சை த இராமநாதன்

பொலிவுடன் புதுமை வருக

 பொலிவுடன் புதுமை வருக 

இன்று இல்லாது ஒன்றும் இல்லை                    அன்று இல்லாது இன்றும் இல்லை

நாற்று இல்லாது நடவும் இல்லை                          காற்று இல்லாது கடலும் இல்லை

கற்றதின் மூலம் பெற்றதும் அதிகம்                    பெற்றதின் மூலம் கற்றதும் அதிகம்

கண்டதை விட காண்பதும் அதிகம்                      உண்டதை விட உண்பதும் அதிகம்

வயதும் மாறும் வருடமும் மாறும்                        உடலும் மாறும் உருவமும் மாறும்

மொட்டு மாறி பூவும் மாறும்                                      மெட்டு மாறி பாட்டும் மாறும்

ஏழ்மை அகன்று ஏற்றம் வருக                  அகந்தை அகன்று ஆனந்தம் வருக

நோயற்ற வாழ்வே வருக வருக                              வறுமையற்ற உலகே வருக வருக!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 11 August 2021

சிங்கமும் அசிங்கமும்

 

சிங்கமும் அசிங்கமும்

அரசப் பார்வை உள்ளோர் தம்மை சிங்கமென சொல்லார்                                                                  அசிங்கப் பார்வை உள்ளோர் தம்மை அரசனெனவே சொல்வார்

வயதான ஆண் சிங்கம் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டே அழிவை நோக்கித் திரியும்                                                        ஆணெனும் ஆணவத்தால் சிங்கமென பிதற்றுவோரின் முடிவும் நமக்கு நன்குப் புரியும்

தேவைக்கேற்ப வேட்டையாடி விவேக வாழ்வை வாழ்வது பெண் சிங்கம்                        உட்கார்ந்தே உடம்பை வளர்க்கும்                          கேவல வாழ்வு ஆணுக்கு அசிங்கம்!

- தஞ்சை த இராமநாதன்

2020-ல் ஆரம்பித்தப் பிணியே போ போ

 

2020-ல் ஆரம்பித்தப் பிணியே போ போ

நல்ல வருடம் என்றார் ஜோசியர்; எதற்கு நல்லது என கூவவில்லை

நடந்ததை என்றும் நாம் மறப்போம்; நடந்ததை இன்றும் நாம் மறப்போம்

அங்கும் இங்கும் எங்கும் மரணம்; முன்பேதும் இல்லாத சமூக மரணம்

தனிமை வாழ்வை கொடுத்த வருடம்; மனிதாபிமானம் வளர்த்த வருடம்

மானிடராய் புவியில் பிறத்தல் அரிது; பிறந்து நல்லவராய் இறத்தல் அரிது

கெட்டவரோடு நல்லவரும் இறந்தார் ; இருப்பவரோ நிம்மதியை இழந்தார்

பறந்த பலதேச பயணமும் நின்றது; பல கூத்தும் கும்மாளமும் நின்றது

பொருள் ஆதாரம் பறி போனது; பொருளே இல்லாதார் என்னாவது?

பட்ட துன்பம் போதும் இறைவா; பிணியை தீர்த்து வை எம் இறைவா!

- தஞ்சை த இராமநாதன்

நம்மாழ்வாரின் வழியே நல்வழி

 

நம்மாழ்வாரின் வழியே நல்வழி

இயற்கையாய் இருந்தது விவசாயம் செயற்கைக்கு மாறியது சமுதாயம்

செயற்கைக்கு மாறியது விவசாயம் இயற்கையை இழந்தது சமுதாயம்

முல்லை-மருதம் சேர்ந்து இருந்தது இயற்கை முல்லையைப் பிரித்து அழித்தது செயற்கை

மாளிகையான வயல்காடும் செயற்கை            மாளிகையில் வாழ்வோரிடமும் செயற்கை

மாட்டோடு இருந்த விவசாயம் இயற்கை          மாடே இல்லாத விவசாயமோ செயற்கை

அளவோடு விளைந்து வந்தது இயற்கை            விலைக்காக விளைய வைப்பதோ செயற்கை

அரிசி வாங்கி வாழும் விவசாயி மாறணும்        அரிசியால் வாழும் அரசியலை தூக்கி எறியணும்

வளத்தோடு மண்ணைக் காக்கணும்                  மானத்தோடு மண்ணை ஆளணும்

நம்மாழ்வார் வழியில் செல்லணும்                      நல்வழியில் விவசாயம் செய்யணும்!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 10 August 2021

தாய்க்கு தனயனின் வாழ்த்து

 

தாய்க்கு தனயனின் வாழ்த்து

குடும்ப வளர்ச்சிக்கு பெரும் பங்களித்து            இல்லார்க்கு இருப்பதை பகிர்ந்தளித்து                                                                                      
உறவினரிடத்தில் நல்லுறவை வளர்த்து            உற்றாரிடத்தில் இணக்கத்தை வளர்த்து                                                                                  
சண்டை சச்சரவை முற்றிலும் தவிர்த்து            அன்பால் எல்லோரையும் அரவணைத்து                                   
பொறுமையுடன் பெருமையைச் சேர்த்த            சிவக்கோழுந்தான தன் தாயைப் பார்த்து                                                                         
தனயன் தந்தேன் தமிழ்த்தாய் வாழ்த்து!

- தஞ்சை த இராமநாதன்

கொரோனா தந்தப் பாடம்

 

கொரோனா தந்தப் பாடம்

மனிதனின் பேராசையும் குறையவில்லை காமக் கொடூரமும் குறையவில்லை

குறுக்கு வழியில் பணத்தைக் குவித்தான் பாவத்தையும் சேர்த்துக் குவித்தான் 

நல்லோரால் எல்லோரும் பெறுவது மழை பொல்லாரால் நல்லாரும் சாகுவது நிலை

இயற்கையை வென்றாரும் இங்கில்லை எவரும் இதற்கு விதி விலக்கில்லை

வாயோடு மூக்கையும் மூட வைத்தார்                  யாவரும் சமமென ஓட வைத்தார்

தங்கத்தில் கழிவறை கட்டியவன் உண்டு தங்கத்தில் முகக் கவசம் சூட்டியவன்  உண்டா?

அதிபர் இறந்ததும் ஆங்காங்கே          அனாதை இறந்ததும் ஆங்காங்கே

எங்கும் இருப்பவன் இறைவனென்றால் கொரோனாவில் இருந்தது யார்?

- தஞ்சை த இராமநாதன்

வாழ வேண்டும்

 

வாழ வேண்டும்

கை தூக்கி வாழ வேண்டும்                              கை ஏந்தி சாக வேண்டாம்  

வந்தாரை வாழ வைத்தப் பூமி          இருப்போரை வாழ வைத்திடு சாமி!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 9 August 2021

மனித இனம் தோன்றிய முதல்

 

மனித இனம் தோன்றிய முதல்

பரிணாமத்தின் பரிமாணத்தை அறிய பழங்குடியினரின் வாழ்வைப் பாரீர்

கிடைத்ததை உண்டு கிடைத்திடும் என்ற நம்பிக்கையின் வாழ்வைப் பாரீர்

அரைகுறை உடையோடு இரு பாலரின் ஒன்றுபட்ட அன்பைப் பாரீர்

அடைபட்ட அறை வாழ்வைவிட விடுபட்ட நிறை வாழ்வைப் பாரீர்

எங்கிருந்தாலும் அங்கிருந்து வந்த நம் எளிய வாழ்வியலைப் பாரீர்

மூத்தக்குடியாம் தமிழ்க்குடி மரபின் பழங்குடி வாழ்வியலைப் பாரீர்!

- தஞ்சை த இராமநாதன்

அல்லல் படுத்தும் ஆசை

 

அல்லல் படுத்தும் ஆசை

உள்ளத்தின் உள்ளலால் தேடுவது இன்பம்; உடலால் துள்ளி ஆடுவது  இன்பமா?

தேடிய இன்பம் நிலைத்தது இல்லை; தேடியும் அது கிடைத்தது இல்லை

உடல் தேடும் இன்பம் பல வகை; உள்ளத்தின் பேரின்பம் ஒரே வகை

உள்ளம் திட தெளிவினால் ஆன்மா ஆனந்தம் பெறும் திடமாக  

ஆசையாலே தேடுவர் இன்பமதை; ஆசையாலே பெறுவர் துன்பமதை

பாசக் கயிறும் அறுபட வேண்டும்; வேஷக் கயிறும் அறுபட வேண்டும்

வெளியில் கிடைப்பது கானல் சுகம்; உள்ளே இருப்பது தெய்வீக சுகம்

புத்தருக்கு சிலை யாருடைய ஆசை? கண்ணீரோடு சிலை விபரீத ஆசை

புத்தன் இறந்ததும் அவருக்கு மதம்; ஒவ்வொரு மகானுக்கும் ஒரு மதம்

மதத்தால் மகான்களைப் பிரிப்பதேன்? புனித ஆத்மாவை அழ வைப்பதேன்?

- தஞ்சை த இராமநாதன்