Wednesday, 22 July 2026

எந்நாளும் நன்னாளே

 


பல்லில்லாது பரிதவிப்போரிடம் பல்லைக் காட்டிச் சிரிப்பதைவிட
பல்லில்லார்க்கு பல்லைக் கட்டிப் பாசத்துடன் ரசித்தலே சிறப்பு

வயதானோர் வாய்ப் பேச்சைத் தொல்லைப் பேச்சென ஆக்காது
கைத் தொலைபேசியைக் கொடுத்து
அழைத்துப் பேச வைத்தலே சிறப்பு

இன்றைய நாளை நேற்றைய நாளே நிர்ணயித்தால் நாளைய நாளில் இன்றைய நாள் எந்நாளாகும்?
நேற்றும் இன்றும் நாளையும் நன்னாளாலாதே சிறப்பு!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 19 July 2026

வளரும் வாழை

 


உழைத்தோர் உழைத்துச் சளைத்து இளைத்தாலும் வாழையைப் பாரீர்
வாழ்ந்தோர் வாழ்ந்து வீழ்ந்து தாழ்ந்தாலும் வாழையைப் பாரீர்

வெட்டினாலும் வெட்டியதை மறந்து
துளிர்த்து வளரும் வாழையைப் பாரீர்
அறுத்தாலும் அறுத்ததைத் தவிர்த்து அறுவடையிலும் அறுபடும் வாழையைப் பாரீர்

வாழைக்கன்றாக ஒன்றை எடுத்து மண்ணில் நன்றாக ஊன்றிப் பாரீர்
வாழையடி வாழையாக வம்சம் வாழ வாழைப் பாடலைப் பாடிப் பாரீர்!

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 11 July 2026

தன் அப்பாவைக் காப்பாற்றிய ஒரு சிறுவன்

 


நோயுற்று அப்பா சென்னை வந்ததும் அனைவரையும் போகச் சொல்ல
வந்தவர் யாவரும் தன்னை மட்டும் விட்டுவிட்டு வீட்டுக்குச் செல்ல

நள்ளிரவில் மாமரத்தடி நோக்கிச் சென்றதோ ஓய்வு கொள்ள
நடு இரவில் காவலர் எழுப்பி O+ இரத்தம் ஏற்பாடு செய்யச் சொல்ல

19 வயதில் சென்னைக்குப் புதியவன் மனதில் பயம் ஒட்டிக் கொள்ள                        கைலியோடும் வெறுங்காலோடும்
மலர் மருத்துவமனைக்குச் செல்ல

குருதி இல்லையெனச் சொன்னதும் சென்ற வழியிலேயே நடந்துச் செல்ல
வடமொழி பேசிய IIT மாணவர் மூலம் இரத்தம் அப்பாவின் உடலில் செல்ல

பின் இரண்டு வருடம் தனது அப்பா வாழ்ந்ததைச் சொல்லச் சொல்ல
கேட்டவர் கண்களில் கண்ணீர் சொட்டு சொட்டாக வந்தது மெல்ல மெல்ல!

(நண்பர் ஒருவர் தனது அப்பாவைப் பற்றிச் சொன்னதைக் கவிதையாக்கினேன்)

- தஞ்சை த.இராமநாதன்