Monday, 27 April 2026

எளிமை இனிமை முழுமை (999 - 1000)

 

எளிமை இனிமை முழுமை (999 - 1000)

மலர் விரிந்து மணம் தவழ்வதுபோல்
முகம் மலர்ந்து சுதந்திரமாக நகைத்தாலும்
மனம் திறந்து வெளிப்படையாக அழுது நமது கண்ணீரை உதிர்க்க முடியுமா?

எழுத்தாக சிரிப்பாக உள்ளுணர்வை வெளிப்படுத்த முடிந்த நமக்கு
ஆழ்மனதின் அமைதிக் குரலை எப்போதாவது ஒலிக்க முடியுமா?

எதிலும் எளிமை கண்டு
கண்மூடி மாபெரும் காட்சி கண்டு
ஆனந்தத்தில் திளைத்தால்
தித்திக்காதா நமக்கு?

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 26 April 2026

எதுவும் ஏதுவாகலாம்

 


எதுவும் ஏதுவாகலாம்

எதுவாக இருந்தாலும் ஏதுவாக இருந்தால்
ஏதுவாக இருப்பதை எதுவானாலும் வளைத்துப் போடுவோர் ஒருபுறம்

ஏதுவாக இருப்பது எதுவாக இருந்தாலும்
எதையும் எப்போதும் ஏதுவாக்கி வளைக்க முயலாதோர் மறுபுறம்

வாக்கைக் கொடுத்து வாக்கை எடுக்க
பணத்தைக் கொடுத்து பணத்தை எடுப்போர் ஒருபுறம்

பணம் கிடைத்து வாக்கைக் கொடுத்து
மானம் அழிந்து மதிகெட்டு வாழும் பாவப்பட்டோர் மறுபுறம்!

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 18 April 2026

துரோகியைத் துரத்து

 

துரோகியைத் துரத்து

இப்போது நடப்பது எப்போதோ நடந்தும் இருக்கலாம்

எப்போதோ நடந்தது இப்போது நடந்தும் இருக்கலாம்

அப்போதே நடந்தது எப்போதும் நடக்கவும் இருக்கலாம்

அப்போதோ இப்போதோ எப்போதோ துரோகத்தைத் துரத்தினால் தப்பலாம்!

- தஞ்சை த.இராமநாதன் 

Thursday, 9 April 2026

வாக்களித்தல்

 

வாக்களித்தல்

வாக்களிப்பில் வாக்களித்துத் தெளிவோடு தேர்ந்தெடுத்து
உரிமையை உறுதிப்படுத்து

படிப்போடு பண்பட்டவரை
நெறியோடு நேர்மையானவரை
வரவழைத்திடு கூடுமானவரை

உரிமையைக் காத்திடுவாருக்கு
உணர்வை மதித்திடுவாருக்கு
மதியுடையாருக்கு வாய்ப்புக் கொடு

வாக்கை செலவிற்காக அழிக்காது 
உம் செல்வாக்கிற்காக அளித்தால் வளத்தோடு வாழ்ந்திடும் தமிழ்நாடு!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 6 April 2026

ஈடுபாட்டோடு ஈடுபடு

 

ஈடுபாட்டோடு ஈடுபடு

எந்தச் செயலில் எவர் ஈடுபட்டாலும் அந்தச் செயலில் அவர் ஈடுபட அவருக்கு ஈடுபாடு வேண்டும்
நல்ல செயலில் எவர் ஈடுபட்டாலும்
அந்தச் செயலில் அவருக்கு நல்ல ஈடுபாடு வேண்டும்

எப்போதோ வளர்ந்த எம் தமிழை இப்போது உம்மால் வளரும் தமிழெனச் சொன்னால் அது ஈடுபாடா?

சிற்றரசன் கட்டபொம்மனைப் போற்றத் தெரிந்த உமக்கு
தமிழ்ப் பேரரசன் இராசராசனைப் போற்றாத உமக்கு
பேரரசன் இராசேந்திரன் தென்கிழக்காசியாவை ஆக்கிரமித்ததைப் பேசாத உமக்கு
தமிழின்மீது ஈடுபாடா?

தமிழ் பேசாத ஆளைத் தமிழன் எனச் சொல்லித் தலைமை ஏற்க வைத்து தலையாட்டும் உமக்குத்                                    தன்மானத்தோடும் தமிழனின் உணர்வோடும் ஈடுபட எப்படி வரும் ஈடுபாடு?

- தஞ்சை த.இராமநாதன்

காற்று வாக்கில் வாக்கைப் பற்றி

 

காற்று வாக்கில் வாக்கைப் பற்றி

வாக்கைப் போடப் போகிறவருக்கோ காசால் வெட்டி விடுகிறார்களாம்
வாக்கைப் போட்டு முடித்தவருக்கோ மையால் குத்தி விடுகிறார்களாம்

கத்திச் சுத்தாத புத்தி இல்லாதவர்
துண்டைக் காட்டி வெல்கிறாராம்
சுத்திக் கத்தும் யுக்தியே இல்லாதவர் தொண்டையும் கட்டி தோற்கிறாராம்

சின்னத்தைப் பார்ப்பவர்கள் வேட்பாளர் எண்ணத்தைப் பார்த்து வாக்களிப்பதே இல்லையாம்
சன்மானத்தைப் பார்ப்பவர்கள் தமிழனின் தன்மானத்தைப் பார்த்து வாக்களித்ததே இல்லையாம்!

உண்மையா?

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 4 April 2026

உயிர்வாழ உண்ணுக

 

உயிர்வாழ உண்ணுக

அசைவ உணவை உண்ண உயிரைக் கொல் என்ற வெறி உணர்வு போதும்
சைவ உணவை உண்ண உணவைக் கொள் என்ற நெறி உணர்வு போதும் 

அசைவம் உண்போர் எல்லோரும் கொல்லும் வெறியோடும் இல்லை
சைவம் உண்போர் எல்லோரும் கொள்கை நெறியோடும் இல்லை

உயிர்வாழ மட்டும் உணவை உண்டு வாழ்வோர் நாமமறிந்த நன்மக்கள்
உணவை உண்பதற்கே உயிர் வாழ்வோர் நாமறிந்த நம்மக்கள்!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 3 April 2026

சொல்லுமுன் தெளிந்து சொல்

 

சொல்லுமுன் தெளிந்து சொல்

சொல்லும் சொல்லைச் சொல்லுமுன் தெளிந்து தெரிந்து தெளிந்தபின் சொன்னால் சொன்னது சொல்லாகும்

பேச்சுக்காக பேசியப் பேச்சையெல்லாம்
பேச்சைக் கேட்போரும் கேட்பதில்லை
பேச்சைப் பேசியவரும் கேட்பதில்லை

பொய்யை மெய்யைப் போல் பேசி பொய்யைப் பேசப்பேச மெய்யையே பொய்யாக்கிடுவோர் மெய்யான பொய்யர்கள்!

- தஞ்சை த.இராமநாதன்