Tuesday, 31 March 2026

சத்தியத்தின் வேதனை

 

சத்தியத்தின் வேதனை

விவாதம் செய்யும் விதம் வாதம் செய்யும் வதையைப்போல் படுத்தி
கேட்போரையும் கேவலப்படுத்தி
கோரச் சொல்லைச் சொல்லுவதுண்டு

போட்டிப் போட்டு பேட்டிக் கொடுத்துப் பேச தெரியாதவன்கூட கொஞ்சம்
துட்டைக் கூட்டிக் கொடுத்து துண்டை உயர்த்திப் பிடித்து வெல்வதுண்டு

சாத்தியமானதைச் சாத்தியமாக்க சமத்துச் சாமர்த்தியம் இல்லையேல்
சத்திய சோதனையாக வேதனையில்
வெந்தும் நொந்தும் உழலுவதுண்டு!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 29 March 2026

எஃகென எண்ணுதலே பலம்

 

எஃகென எண்ணுதலே பலம்

தாளாத துன்பம் தயங்காது தாக்கினாலும்
தளராது தாங்கும் மனதைக் கொள்

கோடி கேடிகள் (திருடர்கள்) கூடி தொல்லை கொடுக்க நினைத்தாலும்
கூடிய பலத்தோடு தடுத்து நிறுத்திடும் திறன் கொள்

உருக உருக பேசி உருக்கி பொறுக்கி எடுத்தோட எண்ணினாலும்
பொறுக்கியைப் பொறுக்கவைக்கும் திடத்தோடு எதிர்கொள்

மத வெறியில் சுடுவோரை சுடவிடாது
சாதி வெறியில் வெட்டுவோரை வெட்டவிடாது
எஃகாக தடுத்து நில்!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 26 March 2026

ஔடதம் நீக்கி வாழ்

 

ஔடதம் நீக்கி வாழ்

விருந்தை மறந்து மனம் நிறைந்து வாழ்ந்தால்
மருந்தை மறந்து குணம் சிறந்து வாழலாம்

புகைப்பிடிப்பதைப் பிடிக்காது விட்டால்
கிடைத்த வாழ்வை பிடித்தபடி வாழலாம்

மது குடிப்பதை குடிக்காது விட்டால்
மனித வாழ்வை மனநிறைவுடன் வாழலாம்

ஔவையார் அறிவுரைப்படி அப்படியே வாழ்ந்தால்
ஔடதம் நீங்கி நாமெல்லாம் நல்லபடியே வாழலாம்!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 25 March 2026

மோசமானவனா மனிதன்?

 

மோசமானவனா மனிதன்?

அத்தியாவசியமென்பதை இலவசமாக்கியதால்
இலவசமென்பதையே அத்தியாவசியமாக்கினர்

அவசியமென்பதை அநாவசியமாக்கியதால் 
அநாவசியமென்பதையே அவசியமாக்கினர்

பணத்திற்காக பாசமென்றானதால்
பாசமென்பதையே பணமாக்கினர்

மனமென்பதை மோசமாக்கியதால்
மோசமான மனிதனாக மாறினர்!

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 24 March 2026

ஓயுதல் அகற்று

 

ஓயுதல் அகற்று

உழைத்து உயர வேண்டிய களத்தில் குந்தியே பிந்தி மடியாதே
உடல் ஓய்வெடுக்க விரும்பும் காலத்தில்
அயர்ந்து ஓய்வெடுக்க மறுக்காதே

ஆக்க முயற்சி திருவினை ஆக்கும் என்பதை மறந்து
சோம்பித் திரிந்து தீவினை ஆக்கி     தீர்ந்து விடாதே

பசுமை செழித்து விளைந்த வேளாண்மை
வெள்ளத்தில் அழிந்தாலும்
உள்ளத்தில் அழியாத மேலாண்மை
வளமாக்கிடும் மறவாதே!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 22 March 2026

கெட்டும் கீழுறேல்

 

கெட்டும் கீழுறேல்

கேடு கெட்டவர்களின் கெட்ட செயல்களால் கெடுதல் வந்தாலும்
கெட்டுப்போய் கீழே வீழ்ந்து விடாமல்
ஆண்டவன் அருளால் எழுந்திடுவாய் அருள் பெற்ற பிள்ளைகாள்

உற்றாரும் கற்றாரும் மட்டுமே ஓரிடத்தில் வாழ்வதும் இல்லை
ஏமாற்றுவாரும் தூற்றுவாரும் ஒரே இடத்தில் வாழாமலும் இல்லை

தீங்கு செய்து தீமை செய்து மாயை வாழ்க்கையில் மயங்கிடும் மானிடா
உதவி செய்து உள்ளம் மகிழ்ந்து
வாழ்ந்தால் கேடில்லை கேளடா!

- தஞ்சை த.இராமநாதன் 

Friday, 20 March 2026

காற்றைப் போற்றுவோம்

 

காற்றைப் போற்று

நல்லவனோ கெட்டவனோ நல்லவளோ கெட்டவளோ
அயோக்கியனோ அட்டூழியக்காரனோ
அயோக்கியச்சியோ அட்டூழியக்காரியோ
உலகைக் காக்கும் உயிர்க் காற்றே உம்மையும் எம்மையும் காப்பதால் காற்றைப் போற்றுவோம்

ஏழைக்கும் அதே காற்று
பணக்காரனுக்கும் அதே காற்று
பண்ணையாருக்கும் அதே காற்று
பண்ணையாளுக்கும் அதே காற்று
எல்லோரையும் ஒன்றாக்கிடும்
காற்றைப் போற்றுவோம்

காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்த கதையையும் போற்றுவோம்
கவிதை எழுதப் போய் காற்றையே எழுத நேர்ந்த கதையையும் போற்றுவோம்!

- தஞ்சை த.இராமநாதன் 

Thursday, 19 March 2026

குணநலன் போற்று

 

குணநலன் போற்று

பண வளத்தோடு இருப்போரைத் தூற்றி இகழ்ந்தோர் குறைவு
குண நலத்தோடு இருப்போரை
போற்றிப் புகழ்ந்தோரும் குறைவு

நல்லவனாக வாழ்வோரை போற்றி வாழ்வோர் குறைவு
வில்லனாக வாழ்வோரை போற்றாமல் வாழ்வோர் குறைவு

குணநலன் இல்லாதவன் தலைவனாகாத நிலை வர வேண்டும்
குணநலன் இல்லாதவனைத் தலைவன் ஆக்காத நிலையும் வர வேண்டும்!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 18 March 2026

கூனுதல் அகற்று

 

கூனுதல் அகற்று
கூனிக் குறுகி கூழைக் கும்பிடு போடுவோரைப்
பக்கத்தில் அண்ட விடாது நாயைப் போல் விரட்டி விடாததால்
சுற்றி வந்து காலை வாரி விட்டு மாலை போட காத்திருப்போர்தான் கூனி நிமிரும் சகுனிகள்

பணத்திற்காகவும் பதவிக்காகவும் தன்மானத்தை இழந்து
தமிழினத்தின் தனிக் குணத்தையும் இழப்போர்
கேடு கெட்ட பிறவியில் பிறந்து மரபணுவில் மாற்றம் பெற்றவர்கள்
ஆனால்,
மூப்படைந்து முதுகு வளைந்த முதியோரின் காலைத் தொட்டு வணங்குவோம்!
- தஞ்சை த.இராமநாதன்  

Tuesday, 17 March 2026

கிழவர் சொல் கேடில

 
கிழவர் சொல் கேடில

அனுபவப்படாத பாட்டிச் சொல்லைத் தட்டினாலும் அனுபவப்பட்ட பாட்டன் சொல்லைத் தட்டாதே
அப்படித் தட்டினால் தடமும் மாறித் தடுமாற்றமும் தப்பாது

அதிகார ஆளுமை மிக்க ஆளிடம் அர்த்தமற்ற கூக்குரலை எழுப்பி ஆடம்பர அராஜக அடியாட்களால் அடிபட்டு அழிவைத் தேடாதே

பழுத்த கிழவர்களில் பக்குவப்பட்ட
Cleverகளும் உண்டு அவர்கள் பண்பட்ட கருத்துகளைச் சொல்வதுமுண்டு!

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 14 March 2026

கீழ்மதி சேரேல்

 

கீழ்மதி சேரேல்

கூடிப் பழகி துரோகம் செய்யும் கீழ்மதி கொண்ட அங்காளியிடம் சேரேல்
கூடவே இருந்து துரோகம் செய்யும்
கீழ்மதி கொண்ட பங்காளியிடமும் சேரேல்

சாதிப் போர்வையைப் போர்த்தி சதி வேலையைச் செய்யும் வெறியனுடன் சேரேல்
சமயப் போர்வையைப் போர்த்தி சமயம் பார்த்து ரோதனைச் செய்யும் நரியனுடனும் சேரேல்

பதவி பார்க்க பாதகம் செய்யும் கீழ்மதி பாவிகளுடன் சேரேல்
பணம் பார்க்க சாதகம் செய்யும் கீழ்மதி சாமிகளுடனும் சேரேல்!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 11 March 2026

கனவை நனவு செய்

 

கனவை நனவு செய்

பாறையின் கல்மலை உச்சியில் பீறிட்டு உருண்டு புரண்டோடி
சாரலோடு அருவியாய்க் கொட்டும்  வெண் நீரைக் கனவில் கண்டால் நனவிலும் நனைந்து குளிக்கலாம்

சிங்காரச் சென்னையிலே மயிலைச் சாலையிலே பழங் குளக்கரையிலே ஈஸ்வரனைக் கனவில் கண்டால் நனவிலும் கபாலீஸ்வரனைக் காணலாம்

விதையை விதைத்து களையைப் பறித்து பயிரை வளர்த்து அறுவடை பண்ணும் முன்னே வெள்ளம் அடித்து கொண்டு செல்வதாக கனவில் கண்டால் நனவிலும் காணலாம்

ஊழலற்ற அரசியல்வாதி உருவாகி விட்டதாய் கனவில் கண்டாலும் நனவில் காண முடியுமா?

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 8 March 2026

ஒழுக்கப் பண்பு கொள்

 

ஒழுக்கப் பண்பு கொள்

அன்போடு பேசி ஆறுதல் சொல்லி இயல்பான ஈகைப் பண்பைக் கொள்

உண்மையைப் பேசி ஊக்கத்துடன் வாழ எளிமையை ஏற்கும் பண்பைக் கொள்

ஒரே குலத்தில் ஓரணி உலகத்தில் சகோதர நல்லிணக்கத்தைக் கொள்

பெரியோரைத் துதித்து வயதில் பெரியாரை மதித்து அமைதி கொள்

இரக்கக் குணத்தோடு இல்லார்க்குக் கொடுக்கும் குணத்தையும் கொள்

பொறாமைப்படுவதை விரட்டி விட்டு போட்டி போட கற்றுக் கொள்

தேவையற்ற கோபத்தைத் தவிர்த்து
தேவையான கோபத்தைக் கொள்

தன்னிகரில்லாத தமிழை வளர்க்க கவிதை எழுத ஆர்வம் கொள்!

- தஞ்சை த.இராமநாதன்

Saturday, 7 March 2026

ஐம்பூதம் போற்றிடு


ஐம்பூதம் போற்றிடு

கரையான் புற்றின் நிலத்தடியில்
வானம் பொழிந்த நீர் இருக்குமென
அங்கே கிணறு வெட்ட புறப்பட்டு
சாம்புராணி புகையோடு வழிபட்டு
மண்ணை வெட்ட மண்வெட்டி எடுத்து
சுற்றளவினுள் குழியைத் தோண்டி
பாறையை உடைக்க கடப்பாரை எடுத்து
தீப்பொறி பறக்க பாறையை அகற்றி
அதன்பின் குறுமணலை அள்ளினால்
சலசலவெனும் ஓசையோடு நீர் ஊறும்
ஊறிய நீர் தெளிந்த பின் மேலிருந்து
பார்த்தால் கிணற்றினுள் ஆகாயம் தெரியும்
ஆகாயம் மட்டுமா? நாம் போற்றுகின்ற ஐம்பூத ஐக்கியமும் தெரியும்!

- தஞ்சை த.இராமநாதன் 


Friday, 6 March 2026

ஏணியாய் வாழ்ந்திடு

ஏணியாய் வாழ்ந்திடு

ஏறிச் செல்வோர் மிதித்து உதைத்துச் சென்றாலும் ஏணியாகவே எப்படி நிற்கிறாய் ஏணியே?
ஏறிச் சென்றோர் இறங்க நேர்ந்தாலும் இறங்குவோர் இறங்கவும் இரங்கியே நிற்கிறாயே ஏணியே?

ஏணிப்படியே ஏன் இப்படி ஏணியோடு ஏணியாக இணைந்தாய் நகராத படியே? நகர்த்தி நகரத்திற்கு கொண்டு சென்றாலும் நகர்ந்த நகரப்படி மாறாமல் நகராத படியாக இருப்பதெப்படி நல்ல படியே?

மனிதன் ஏணியாக வாழ முயன்றிடலாம் ஏணியாகவே வாழ்ந்து முடிந்துவிடலாகாது!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 5 March 2026

எளிமை கண்டு இகழேல்

 

எளிமை கண்டு இகழேல்

உடலின் மாய அழகை அங்கம் அங்கமாய்ப் போற்றிப் புகழாதீர்
உள்ளத்தின் தூய அழகை எங்கும் எப்போதுமே தூற்றி இகழாதீர்

அர்த்தமற்ற நாத்திகத்தை ஆட்டம் போட்டு ஆளைக் கூட்டிப் புகழாதீர்
அர்த்தமுள்ள ஆத்திகத்தை கூட்டம் போட்டுக் கொடியைத் தூக்கி இகழாதீர்

உழைக்காத உணவைத் திமிரோடு அமர்ந்து தின்னுவதைப் புகழாதீர்
உழைத்த உணவை ஆற அமர்ந்து குடும்பத்தோடு உண்ணுவதை இகழாதீர்

நடன நாட்டியத்தில் கவர்ச்சியாக நடித்தவரை உயர்த்திப் புகழாதீர்
உடையிலும் நடையிலும் எளிமையாக நடப்பவரைத் தாழ்த்தி இகழாதீர்!

- தஞ்சை த.இராமநாதன் 

Wednesday, 4 March 2026

ஊழ்வினை எதிர்த்து வெல்

ஊழ்வினை எதிர்த்து வெல்

உடல் மனம் ஆன்மா மூன்றையும் தன்னுள் அடக்கி ஆள்வது ஊழ்வினை 

உடலழகில் மயங்கும் மனம் ஆன்மாவை மறந்து வீழ்வதும் ஊழ்வினை 

கோவலன் கேவலமாக மனம் ஓடியபடி ஆடி வாடி இறந்தது ஊழ்வினை

பிரிந்தோடிய கணவனுக்காக ஓடோடி மதுரையை எரித்ததும் ஊழ்வினை 

தட்டுத் தடுமாறி ஆண்டவர்களை ஆண்டவனை விட துதிப்பது ஊழ்வினை 

ராஜராஜனின் தனிச்சிறப்பை மறைத்து நரிபோல் ஊழையிடுவதும் ஊழ்வினை

ஊழ்வினையை எதிர்த்து வெல்வது ஊழ்வினையினுள் உள்ள ஊழ்வினை 

ஊழ்வினையைத் தவிர்த்து வாழ்ந்திட பெற்றிடு ஆன்மிக குருவின் அருளினை!

- தஞ்சை த.இராமநாதன் 

Monday, 2 March 2026

உண்ணும் முன் உழவைப் போற்று

 

உண்ணும் முன் உழவைப் போற்று

உழுதவரெல்லாம் உழுததையும் விட்டு உழுத ஊரையும் விட்டுவிட்டு மற்ற ஊருக்கு ஓடுகிறார்கள்

உழுபவரெல்லாம் மாட்டையும் விட்டு உழுத கலப்பையையும் விட்டுவிட்டு உழவூர்தியை நாடுகிறார்கள்

உழுதவரே உழவை நினைக்க விரும்பாத உலகில் உண்பவரா நினைப்பார்? உடனடி உணவை உண்டு பெருத்த உலகினரா உழவைப் போற்றுவார்?

உண்மையாக உழைத்தவனை வதைத்து உழவனின் ஊதியத்தைக் குறைத்து உழவின் பெருமையை மறைத்தாலும் உண்ணும் முன் உழவைப் போற்றாதோர் உண்ட பின் உணர்வோடு போற்றுக!

- தஞ்சை த.இராமநாதன்
  சிங்கப்பூர்

Sunday, 1 March 2026

ஈதலில் உயர்வு கொள்

ஈதலில் உயர்வு கொள்

கொடுத்த ஈதலில் உயர்வு கொண்டார் தரணியில் குறைவிலும் குறைவே
கொடுத்துக் கொடுத்து நொடித்தோர் தரணியில் கூடுதலிலும் கூடுதலே

வீட்டைக் கோட்டை விட்டு நாடு நாடென ஓடியோர் வறுமையில் வாடுவர்
வாங்கி வாங்கி வறுமையைக் கடந்தோர் கொடுத்தவரை ஒருமையில் சாடுவர்

கொடுக்கும் உள்ளம் உள்ளாரிடம் கொடுக்க செல்வம் சேருவதுமில்லை
கொடுக்காத உள்ளம் உள்ளாரிடம் கோடிச் செல்வம் சேராமலுமில்லை

அளவோடு பொருளைக் கொடுத்து வாழ்ந்தால் ஈதலால் உயர்வே
உள்ளதை எல்லாம் சுரண்டிக் கொடுத்து வீழ்ந்தால் ஈதலால் தாழ்வே

- தஞ்சை த.இராமநாதன்
   சிங்கப்பூர்