Wednesday, 15 March 2023

என் மனைவியின் அம்மா ஞானமணி

 

என் மனைவியின் அம்மா ஞானமணி 

செல்வமிகு முன்சீப் குடும்பத்தின் அய்யாவு கண்டியர்-தையலம்மாள் பெற்றெடுத்த செல்ல மகள்

இருபத்தாறு வயதுக்குள் அருமையான ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்து
அம்மாடி அப்பாடியென அன்போடும் எழிலோடும் கண்ணான கண்ணாவென பிள்ளைகளைக் கொஞ்சி வளர்த்து
உற்றார் உறவினரிடத்தில் பெருமையோடு பொறாமையையும் சம்பாதித்து           
பரிசுத்தமான ஆன்மாவுடன் முப்பத்தாறு வயதினிலே மரணம் அடைந்தார்
சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு பேரதிர்ச்சி கொடுத்து

முப்பத்தொன்பதில் ஞானம் பெற்று விவேகானந்தரின் உயிர் பிரிந்தது; பெயரிலேயே ஞானம் பெற்றவரின் உயிரோ முப்பத்தாறிலேயே பிரிந்தது

ஊரார் அழுதனர் உறவினர் அழுதனர் 
கணவர் கதறினார் கண்டியர் தெருவினர் கலங்கினர்
கண்ணெதிரே கண்ட நானும் கண்ணீர் கரையும்வரை கரைந்தேன்

46 வருடங்கள் ஓடிவிட்டாலும்,
உங்களை நினைக்கும் போதெல்லாம் கண்கள் நனைவதை யாரும் பார்க்காதபடி
உள்ளத்தின் உள்ளே உருகி உங்களின் ஆன்மா இறைவனிடம் இளைப்பாறும் பயணம் தொடர்ந்து மேலோங்க தியானம் செய்து வேண்டுகின்றோம்!

- தஞ்சை த இராமநாதன் 
  15 March 2026 (மறு பதிவு)

Saturday, 4 March 2023

வேலை-வேளை-கவலை

 

வேலை-வேளை-கவலை

தொடர் வேலைக்கிடையே ஒருவேளை ஓய்வு கிடைத்தால் அது இடைவேளை
தொடர் வேலைக்கிடையே வேறொரு வேலை கிடைத்தால் அது இடைவேலை

கூடை கடை வைத்து வியாபார வேலை  செய்தால் அதுகூட கூடைகடை வேலை
சடை கடை வைத்து வியாபார வேலை செய்தால் அதுகூட சடைகடை வேலை

வேலைக்காக அலைந்து ஒருவேலை கூட கிடைக்காத வேளை தரும் கவலை
கிடைத்த வேலை முடிந்து ஓய்வு பெறும்  வேளை மனம் பெறும் பெரும் கவலை!

- தஞ்சை த.இராமநாதன் 


Friday, 3 March 2023

பூத்துக் குலுங்கும் வேம்பின் போத்து

 

பூத்துக் குலுங்கும் வேம்பின் போத்து

போத்து வைத்து வளர்ந்த மரங்களைப் பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி

போத்து வைத்தே வளர்ந்த தோப்பையும் பார்த்து ரசித்ததில் மகிழ்ச்சி

முருங்கை உதி பூவரசுப் போத்துகள் மரமாகிப் பூத்ததில் மகிழ்ச்சி

என் மனையாள் அன்பரசி வைத்த வேம்புப் போத்துப் பூத்ததில் மகிழ்ச்சி!

- தஞ்சை த.இராமநாதன்


Thursday, 2 March 2023

சகுனிகள்

 

சகுனிகள்

உள்ளொன்று வைத்து  புறமொன்று        பேசித் திரியும் மானிடரே கேளீர்

எங்கே எப்படி பொய்யைப் பேசினாலும்      உம் கண் காட்டிவிடும் என்பதைப் பாரீர்

தனக்குக் கிடைக்காதது மற்றவருக்கும் கிடைக்கக் கூடாதெனக் கெடுக்கப் போரீர்

இருக்கும்போது இல்லாததைப் பேசி இறக்கும்போது இல்லாமல் போவீர்!

- தஞ்சை த.இராமநாதன்