Tuesday, 31 December 2024

எனது சின்ன அத்தை

எனது சின்ன அத்தை

சிறுவனாக ஓடி ஆடி உற்சாகத்துடன்      அதிகம் விளையாடியது என் வீட்டருகே
அதையடுத்து அதிகம் விளையாடியது        என் சின்ன அத்தை வீட்டின் அருகே

அதிகாலையில் மீசை மிடுக்குடன்                மாமா சுடுவார் சூடான தோசை
இவ்வேளையில் அப்படியொரு தோசை   கிடைத்துண்ண மேலான ஆசை

சீறிப்போன வெடி மருந்தைக் கொட்டி தீக்குச்சியை வைத்துப் பற்ற வைத்தேன்
சீறிப் பாய்ந்த ஒளிச்சூடு வலது கை விரல்களைச் சுட துடித்துக் கரைந்தேன்
சின்ன அத்தை கத்திக் கதறியபோது நேசத்தைக் கண்ணீரோடுக் கண்டேன்

பனை மரங்கள் நிறையக் கண்டது அங்கு
நான் மனம் நிறைய உண்டது நுங்கு
ஏரை ஓட்ட கத்துக் கொடுத்ததும் மாமா
செக்குமாடு பார்த்ததும் அங்கேதான் ஆமா

ஏம்பா ஏன்யா என அழைப்பார் அத்தை
அசைபோடுகிறேன் அத்தை பாசத்தை
தர்மராசா ராமதாசா என்பார் பண்போடு மஹாராசா ராஜராசா என்பார் அன்போடு

பாசத்திற்குக் குறைவில்லாத அத்தை
ரோசத்திற்கும் குறைவில்லாத அத்தை
அவர்தான் என் சின்ன அத்தை ஆயியம்மாள் முருகையன்!

தம்பதியர் வாழ்க பல்லாண்டு!!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 30 December 2024

எனது ஏட்டியம்மா

 

எனது ஏட்டியம்மா

செல்லக்கண்ணுவென பெயர் இருந்தாலும் ஏட்டியோடு அம்மா ஒன்றானதால் ஏட்டியம்மா
செல்லமா அப்படி அப்பாடியென இந்த ராமதாஸை அழைப்பவர்தான் ஏட்டியம்மா
கையைப் பிடித்து இளம் வயதில் கதைகள் பல சொல்லி மகிழ்வித்த ஏட்டியம்மா
மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி பாடலைப் பாடுவார் ஏட்டியம்மா
அன்பான பாசத்தை இளம் வயதில் அடி மனதில் பதித்தவர் ஏட்டியம்மா
உழைப்பின் வியர்வையால் உயர்வை அடைந்தவர் எனது ஏட்டியம்மா
வாக்கப்பட்டு சேனாபதி வீட்டுக்கு மருமகளாக சென்றார் ஏட்டியம்மா
இருளை மறந்து இரு குளக்கரை கடந்து நடந்து சென்றவனது பாசமிகு ஏட்டியம்மா
காலம் ஓடினாலும் வயது கூடினாலும்                உம் நினைவில் எழுதுகிறேன் ஏட்டியம்மா

நலமுடன் வாழ வாழ்த்துகள் ஏட்டியம்மா!

- தஞ்சை த.இராமநாதன்


Sunday, 15 December 2024

சிரித்தாலும் கண்ணீர் கரிக்கும்

 

சிரித்தாலும் கண்ணீர் கரிக்கும்

துயரம் தாங்காத கண்ணைத் தூங்க விடாது சோகம்
தூக்கம் தங்காத கண்ணில் தங்கித் தாக்கிடும் சோகம்
தூக்கக் குறைவால் சோர்ந்துபோன கண்ணில் சேர்ந்திடும் சோகம்

சோகம் நிறைந்த மனதால் கண்ணில் கண்ணீர் சுரந்திடும்
சுமையைச் சுமக்க முடியாத கண்ணில் கண்ணீர் இறங்கிடும்
கன்னம் நனைத்து நாவில் கலந்தால் கண்ணீர் கரித்திடும்

சிரித்தால் கண்ணை விட்டு அகலும் கண்ணீரோ கொஞ்சம்
சிரித்ததால் கொஞ்சமாக அகன்றாலும் உப்புக் கண்ணீரே கொஞ்சும்
அழுவதால் கண்ணை விட்டு அகலும் கண்ணீரே விஞ்சும்
அழுகையால் விஞ்சியபடி அகன்றதும் வறண்ட கண்ணே மிஞ்சும்!

- தஞ்சை த.இராமநாதன் 

Saturday, 14 December 2024

தண்ணீருள் குடியிருக்கும் மேகம்

 

தண்ணீருள் குடியிருக்கும் மேகம்

குளிராத மேகத்தைப் பிடித்தது போல் ஒன்றாகச் சுழன்று திரிந்ததும் நீரே
குளிர்ந்த மேகத்தைப் பிடிக்காதது போல்
இரண்டாகக் கழன்று பிரிந்ததும் நீரே

குளிராத மேகம்தனில் நீர் நீராகவும்      இல்லை நீர் நீராவியாகவும் இல்லை
குளிர்ந்த மேகம்தனில் நீர் நீராகவும் நீர் நீரரவியாகவும் இல்லாமல் இல்லை 

மேகத்துள் முகம் மறைத்து மேகத்தின் முகத்தோடு வான்மீது பறந்து திரிந்த நீர்
மேகத்தின் முகம் நிறைத்து வானத்தின் முகத்தோடு மண்மீது பரந்து விரிந்த நீரே!

- தஞ்சை த.இராமநாதன்

Thursday, 12 December 2024

கண்ணும் கருத்தும்

 

கண்ணும் கருத்தும்

கண்ணால் கண்டதும் உறுத்தினால் கண்டதைக் கருத்தாக்காது திருந்தலாம்
கண்டபடி கண்டதைப் பார்த்து ஓடினால் கண்டதைக் காணாதபடி திரும்பலாம்

கண்டும் காணாததுபோல் குருடானால் கேட்டும் கேளாததுபோல் செவிடாகலாம்
கண்டபடிப் பேசியதால் ஊமையானால் பேசியதைப் பேசாமல் அமைதியாகலாம்

அண்ணல் நோக்கிய நோக்கலில் சீதையும் நோக்கினள் 
நோக்கிய நோக்கல் நக்கலில் முடியாமல் மணந்தனள் 
கண்ணோடு கலந்து மலர்ந்தது மணமான வாழ்வானது
கருத்தோடு பிளந்து உதிர்ந்தது இனமான தாழ்வானது!

- தஞ்சை த.இராமநாதன்

Tuesday, 10 December 2024

இல்லாள்

 

இல்லாள்

கள்ளம் கபடமில்லா இல்லாள்
பொன்னும் பொருளுமில்லா இல்லாள்
தன்னலம் தன்னிகரில்லா இல்லாள்
ஆடம்பரம் ஆர்ப்பரிப்பில்லா இல்லாள்

கடமையோடு கண்ணியமிகு இல்லாள்
பண்போடு பாசமிகு இல்லாள்
உண்மையோடு ஊக்கமிகு இல்லாள்
எளிமையோடு ஏற்றமிகு இல்லாள்

சுடும் சொல்லைச் சொல்லாள் இல்லாள்            கடும்  செயலைச் செய்யாள் இல்லாள்
நலம் நாட்டிட நல்லாள் இல்லாள்
குலம் காத்திட உள்ளாள் இல்லாள்!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 8 December 2024

எவ்வேளையும் நல்வேளையே!

 

எவ்வேளையும் நல்வேளையே!

எவ்வேளையில் எவ்வேலையைச் செய்ய வேண்டுமோ அவ்வேலையை அவ்வேளையில் செய்யத் தவறியதால்
இவ்வேளையில் இவ்வேலையைச் செய்ய வேண்டிய நிலை வந்ததோ?

எவ்வேலையை  எவ்வேளையில் செய்ய முயன்றாலும் அவ்வேலையை எவ்வேளையிலும் செய்ய இயலாததால் இவ்வேளையில் எவ்வேலையையும் செய்ய முயலாத நிலை வந்ததோ?

இவ்வேளையில் அவ்வேலையோ அவ்வேளையில் இவ்வேலையோ
எவ்வேளையிலும் எவ்வேலையையும் செய்து முடிக்க இவ்வேளையில் சபதம்
எடுக்க எவ்வேளையும் நல்வேளையே!

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 1 December 2024

வறுத்துக் கடித்தல்

 

வறுத்துக் கடித்தல்

கிறுக்கி கிறுக்கிக் கொண்டே இருந்து கிறுக்கியோள் கிறுக்கியாகி இருந்தால்
கிறுக்கிக் கிறுக்கிக் கொண்டே இருந்து
கிறுக்கியோன் கிறுக்கனாகி இருப்பான்

பொறுக்கிப் பொறுக்கிப் பார்த்தாலும்
பொறுக்கியரே பொறுக்கியர் கூட்டத்தில் காத்திருப்பர்
நறுக்கி நறுக்கியதைப் பார்த்தாலும் நறுக்காததையும் நறுக்கவே திட்டத்தில் வைத்திருப்பர்

வறுத்து வறுத்து வறுத்ததை அடுத்து    வாயில் எடுத்துப் பல்லால் கடிப்பர்
வெறுத்து வெறுத்து வெறுத்ததை அடுத்து கையில் எடுத்துச் சொல்லால் அடிப்பர்!

- தஞ்சை த.இராமநாதன்