Sunday, 31 October 2021

மண்ணில் மனிதர்கள்

 

மண்ணில் மனிதர்கள்

மண்ணை ஆள மன்னர்கள் முயன்ற காலம் அன்று

மண்ணை ஆள மடையர்களும் முயலும் காலம் இன்று

மண்ணாக விற்றால் பெரிய பணம்தான் பூமி

மண்ணின் பொருளாக விற்றால் சிறு காசுதான் சாமி! 

- தஞ்சை த இராமநாதன்

Friday, 29 October 2021

குன்றுகள் கண்டு மகிழ்வது நன்று

 

குன்றுகள் கண்டு மகிழ்வது நன்று

மலையோ எனப் பார்த்தால் மலை குன்றி குன்று குன்றாகத் தோற்றம்

காடோ எனப் பார்த்தால் புல் புதர் கலந்த குறுங்காடாகத் தோற்றம்

செழித்து வளர்ந்து இளநீரைத் தர காத்து நிற்கும் தென்னை மரங்கள் அங்கே

தென்னைக்கும் நீர்க் கொடுத்து குலையோடு ஒத்தைப் பனையும் அங்கே

நன்மைதரும் மரங்களுடன் செடிகள் சூழ நன்செய் நிலம் போல ஒரு தோற்றம்

குன்றைச் சார்ந்த மேட்டுப் பகுதியான புன்செய் நிலம் போலவும் ஒரு தோற்றம்

குருவிகளும் சிறு பூச்சி புழுக்களும் உல்லாசமாய் உயிர் வாழும் அங்கே

குன்றின் மேலே தவழும் கார் முகில் குளிர்ந்து மாரியாய் மாறும் அங்கே!

- தஞ்சை த இராமநாதன்

கடுமையான சட்டம் தேவை

 

கடுமையான சட்டம் தேவை  

ஊரே சிரித்தது என்றால் ஊர் மக்களென்றுதானே பொருள்

நாட்டு மக்கள் அழுதால் நாட்டின் அவலமென்றுதானே பொருள்

சட்டத்தை மீறுகின்றார்கள் என்பது சட்டத்தில் உள்ள குறை

திட்டத்தை மறுக்கின்றார்கள் என்பதும் திட்டத்தில் உள்ள குறை

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கடுமை வேண்டும்

திட்டத்தைத் தீட்டி மெத்தனம் இல்லாத பெருமை வேண்டும்!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 28 October 2021

நன்றியுள்ள ஜீவன் நாயா? மனிதனா?

 

நன்றியுள்ள ஜீவன் நாயா? மனிதனா?

வெளியில் சென்று வந்தால் எப்போதும் துள்ளிக் குதித்து வரவேற்பது நாய்

வெளியூர் உறவினர் எப்போதாவது வந்தாலும் முகம் சுளிப்பவன் மனிதன்

உணவு எப்போதோ கிடைத்ததை நினைவில் நிறுத்தி கொண்டாடும் நாய்

 வாழ்வுக் கொடுத்தவர்களையே முதுகில் குத்துபவன் மனிதன்

எப்போதோ நடந்ததை நன்றியுடன் எப்போதும் நினைப்பது நாய்

எப்போது உதவி செய்தாலும் செய்ததை அப்போதே மறப்பவன் மனிதன்

வளர்ந்து வந்தப் பாதையை மறக்காமல் நன்றியுடன் வாழ்வது நாய்

வளர்ந்து வந்தப் பாதையை மறக்கும் நன்றி கெட்டப் பாவி மனிதன்

நன்றி மறக்காமல் மிச்சம் மீதியென கிடைத்ததை உண்டு வாழ்வது நாய்

நன்றி மறந்து மானம் இழந்து நாதியற்று அதிகமாக இறப்பவன் மனிதன்

பாப்பாவைக் கொஞ்சி தெருவில் திரிந்தாலும் வஞ்சகம் இல்லாதது நாய்

கெஞ்சிக் கொஞ்சி அயோக்கித் தனத்தால் கடத்திக் கொல்வதால் பாவியானாய்!

- தஞ்சை த இராமநாதன்

இருப்பதும் இல்லாததும்

 


இருப்பதும் இல்லாததும்

இருப்பது போல் இருப்பது எல்லாம் கானல் நீர் போலானது

இருப்போம் என நினைப்பது எல்லாம் கொரோனா தயவினாலானது

நலிந்து மெலிந்தோரெல்லாம் சிறியவரும் அல்ல

பருத்து பெருத்தோரெல்லாம் பெரியவரும் அல்ல

இருந்தவரிடம் இருந்தது நிலையாய் இருந்ததும் இல்லை

இருப்பவரிடம் இருப்பது நிலையாய் இருக்கப் போவதும் இல்லை!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 27 October 2021

பாட்டி சுட்ட முறுக்கு இன்னும் ஞாபகம் இருக்கு

 

பாட்டி சுட்ட முறுக்கு இன்னும் ஞாபகம் இருக்கு

பாட்டி சுடும் முறுக்கை சுவைக்க சுத்தி சுத்தி வந்தாலும் கொடுக்காது பாட்டி

ஒளிந்து எடுக்க முயன்றாலும் சாமிக் குத்தமென கொடுக்காது பாட்டி

ஈரப்பதமான மாவைப் பிழிய வைத்து அனேகபேரை வேலை வாங்கிடும் பாட்டி

காயும் எண்ணெயில் சலசல சத்தம் வர முகத்தை திருப்பிக் கொள்ளும் பாட்டி

சாரணியை எடுத்து பக்குவமாக முறுக்கை திருப்பிப் போடும் பாட்டி

மிதக்கும் முறுக்கை நல்ல பதத்தோடு பக்குவாக எடுத்து பாதுகாக்கும் பாட்டி

பன்னாடை எடுத்துச் சொருகி எண்ணையின் சூட்டைக் கூட்டும் பாட்டி

கொள்ளிக் கட்டையை உருவி சூட்டைக் குறைக்கும் பாட்டி

பல் இல்லாததால் முறுக்கை பாக்கு உரலில் இடித்து சாப்பிடும் பாட்டி

இடித்த முறுக்கை எனக்கும் வெத்தலை வாசத்தோடு கொடுக்கும் என் பாட்டி

அப்படி முறுக்கை சுட மீண்டும் ஒரு தடவை வருவாயா பாட்டி?

வர மாட்டாய் என தெரிந்ததும் கண்களைக் கண்ணீர் நனைக்கிறது பாட்டி!

- தஞ்சை த இராமநாதன்

தாகம் தீர்க்கும் தண்ணீர்

 

தாகம் தீர்க்கும் தண்ணீர்

குடி தண்ணீருக்காக வீட்டருகே கிணறு வெட்டி வாளியில் நீரை இறைப்பர் சகடையோடு கயிறைக் கட்டி

பத்து பதினைந்து அடியில் சலசலவென தண்ணீர் ஊறும் வாளியின் தண்ணீரைக் குடிக்க மளமளவென தாகம் தீரும்

இப்போது நீர் மட்டம் பாதாளம் சென்று விட்டது கிணத்தடி நீர் கானல்-நீராகி காணாமல் போய் விட்டது

ஆழ்துளை கிணறு வந்தது தண்ணீர் தர மின்சாரம் உதவுது தண்ணீர் வெளியே வர

மின்சாரம் இல்லையேல் குடிக்க தண்ணீர் ஏது? பன்னீர் இருந்தாலும் குடிக்க தண்ணீர் ஏது?

கடல் நீரை குடிநீர் ஆக்கலாம் கழிவு நீரையும் குடிநீர் ஆக்கலாம்

குளிர்பானம் தாகம் தீர்க்கலாம் மதுபானம் மோகம் தீர்க்கலாம்

ஆனாலும்,

வீட்டின் கிணற்று நீருக்கு ஈடாகுமா?

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 26 October 2021

வரிவரியாய் வரிகளுடன் வரிக்குதிரை

 

வரிவரியாய் வரிகளுடன் வரிக்குதிரை

எல்லா நாட்டவரும் எல்லா மதத்தவரும் மதிக்கும் வழி வரிக்குதிரையின் வழி

கோடி ரூபாய் வாகனம் வந்தாலும் பாதசாரிக்கே உரிய வரிக்குதிரை வழி

பச்சை மஞ்சள் சிவப்பு விளக்கு வரிக்குதிரை வழிக்கு விதி விலக்கு இருக்கு

வெள்ளை கருப்பு வரிகள் இருக்கு வரிக்குதிரை பெயரிலேயே அது இருக்கு

வரிவரியாய் வரிகளை சுமந்தாலும் வரியாலேயே அழகுற்ற வரிக்குதிரை

வரிக்கு வரி வரிக்குதிரையென எழுத வைத்து எழுந்து நிற்கும் வரிக்குதிரை!

- தஞ்சை த இராமநாதன்

அற்புதமான ஆண்கள்

 

அற்புதமான ஆண்கள்

பெண்கள் சமநிலை கேட்ட போதும் தடுக்காத ஆண்கள்

முன்னிலை கேட்கும் போதும் தடுக்காத ஆண்கள்

பெண்கள் தலைக்கனத்தை தாங்குபவர் ஆண்கள்

நடந்ததை மறந்து நடப்பதை ஏற்பவர் ஆண்கள்

உணவகத்தில் அதிகளவில் சமைப்பவர் ஆண்கள்

கப்பல் பட்டறையில் படாத பாடு படுபவர் ஆண்கள்

கட்டுமான வேலையில் வியர்வை சிந்துபவர் ஆண்கள்

மலக் குழியில் இறங்கி வேலை செய்பவர் ஆண்கள்

கனரக வாகனத்தை ஓட்டுபவர் என்றென்றும் ஆண்கள்

மூட்டைத் தூக்கி முதுகு வளைபவர் ஆண்கள்

போரில் போரிட்டு உயிரைத் துறப்பவர் ஆண்கள்

பாடை தூக்கி நல்லடக்கம் செய்பவர் ஆண்கள்

அர்ச்சனை திருமுழுக்கு சேவை செய்பவர் ஆண்கள்

எல்லா இசைக் கருவிகளையும் இசைப்பவர் ஆண்கள்

அயல்நாடு சென்று அயராது உழைப்பவர் ஆண்கள்

நாடு வீடு என தியாகம் பல செய்பவர் ஆண்கள்!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 25 October 2021

பறை எங்கே?

 

பறை எங்கே?

ஒற்றைப் பறையென்பது செய்தியைப் பரப்ப தெருவில் அடிக்கப்பட்டப் பறை

கூட்டுப் பறையென்பது குழுவாகச் சேர்ந்து சேவைக்காக அடிக்கப்பட்டப் பறை

எப்பறையென்றாலும் அப்பறைக்கு அக்கறைத் தேவை சிறப்பாக அடிக்க

அக்கறையே இல்லாமல் போனதால் தேவையேயில்லை இப்பறையை அடிக்க

வைக்கோலைக் கொளுத்தி சுற்றி நின்று காய வைப்பர் பறையை

மார்கழிக் குளிரை மறந்து ஆட்டம் ஆட அடித்து வெளுத்து வாங்குவர் பறையை

பரம்பரைப் பண்பாட்டில் கிராமமெங்கும் அன்று அடித்து ஒலிக்கப்பட்டப் பறை

பரிணாம சீர்கேட்டில் கிராமமெங்கும் இன்று அழித்து ஒழிக்கப்பட்டப் பறை!

- தஞ்சை த இராமநாதன்

உழைப்பே துணை

 

உழைப்பே துணை

உழைத்துக் கொண்டே இருக்கும் வரம் வேண்டும் உழைத்துக் கொண்டே இறக்கும் வரமும் வேண்டும்

உழைப்பின் களைப்பில் உடல் இளைப்பாற வேண்டும் உழைப்பின் நினைப்பில் மனம் களைப்பாறவும் வேண்டும்

உழைப்பவர் கையில் காசு புரள வேண்டும் உழைப்பவர் வாழ கடவுள் அருளவும் வேண்டும்

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் வேண்டும் உழைத்தப் பணத்தை சேமிக்க கச்சிதமும் வேண்டும்

உழைத்து சேர்த்த பாட்டன் சொத்தை காக்க வேண்டும் உழைத்து சேர்த்த அப்பன் சொத்தையும் காக்க வேண்டும்

உழைத்து வாழ்பவர் உறுதியாக எங்கும் வாழ்வர் உழைக்காமல் ஏய்த்து  வாழ்பவர் இறுதியாக எங்கும் வீழ்வர்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 24 October 2021

உண்மை அறிந்தால்...

 

உண்மை அறிந்தால்...

நம் ஆற்றலை உணர அறிவு இல்லையெனில் நம்மால் போராட முடியுமா?

அயலார் பொருட்களை எப்படி குறைந்த விலைக்கு விற்கிறார்கள் என்பதை அறிய முடியுமா?

இருக்கும் வளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தாதது யார் தவறு?

இருக்கும் வளத்தை பலமாக்காமல் பலவீனமாக்குவது யார் தவறு?

வந்தாரையும் வாழ வைத்த சமூகம் மறைந்தது எப்படி?

இருப்போரையும் ஏங்க வைத்து இறக்க வைக்கும் சமுதாயம் வந்தது எப்படி?

கட்டுப்பாடற்ற ஜனநாயகம்தான் தாழ்விற்குக் காரணம் என்பதை உணரத் தயாரா?

குற்றவாளியானவர் அரசியல்வாதியோ ஆண்டியோ சட்டப்படி தூக்கிலிடத் தயாரா?

முடியுமா? முடியுமா??

முடிந்தவர்கள் முந்துகிறார்கள்!

- தஞ்சை த இராமநாதன்

கடவுளும் மனிதனும்

 

கடவுளும் மனிதனும்

கல்லைச் சிலையாக்கியதும் மனிதன்    சிலையைக் கடவுளாக்கியதும் மனிதன் 

கடவுளுக்கு மானிட உருவம் கொடுத்ததும் மனிதன்                                                                        மானிட உருவத்தை வணங்க வைத்ததும் மனிதன் 

கடவுளுக்கு வேட்டி சேலை உடுத்தியதும் மனிதன்                                                        கடவுளுக்குப் பொட்டோடு பூ சூட்டியதும் மனிதன் 

ஏழை சாமி பணக்கார சாமி எனக் கடவுளைப் பிரிப்பதும் மனிதன்                            உண்டியலை வைத்து பணத்தைப் பறிப்பதும் மனிதன் 

அத்தனை ஆற்றலையும் உள்ளகத்தே கொண்டவன்தான் மனிதன்                                    கட உள் எனக் கடந்துப் பார்த்தால் கடவுளை உள்ளேயே உணர்ந்திடுவான் மனிதன்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 23 October 2021

நல்ல தலைமை நாடு காக்கும்

 

நல்ல தலைமை நாடு காக்கும்

கூரையோடு குப்பை கூளங்களோடு சாலையோரம் பல்லாயிரம் வீடு

கண்டும் காணாதது போல் கடந்து செல்லும் தலைவர்களுக்கு மானக்கேடு

நெருப்பு கெடுக்கும் வெள்ளம் கெடுக்கும் பாம்பும் கடிக்கும் பூச்சியும் கடிக்கும்

பசியும் கொல்லும் பிணியும் கொல்லும் குளிரும் கொல்லும் சூடும் கொல்லும்

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி நொந்தக் குடி

வெட்டியாக கத்திப் பேசி சண்டை வளர்த்து சாதி வளர்க்கும் ஏமாந்தக் குடி

வருமுன் காத்தால் அது ஆட்சியாளரின் அறிவான ஆளுமைக்கு அழகு 

வந்தபின் கை கொடுத்து பின் வராமல் தடுத்தால் அறிவுக் கூர்மைக்கு அழகு 

உள்ளதைக் கொண்டு நல்லதை செய்ய முடியும் ஆறாவது அறிவு இருந்தால்

குடிசைகளையும் மாற்ற முடியும் லீ குவான் இயூ போன்ற தலைவன் இருந்தால்!

- தஞ்சை த இராமநாதன்

பொது ஒலியிலிருந்து புது மொழி

 

பொது ஒலியிலிருந்து புது மொழி

பூரா மழலைகளின் ஒரே ஒலி பொது ஒலி 

தனிமொழி சாரா ஒரே ஒலி பொது ஒலி

பொது ஒலி புது ஒலியாக மாறி தாய் மொழியானது 

ஒரு புது ஒலி தாய் மொழியாகி தமிழ் மொழியானது!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 22 October 2021

நானறிந்தக் கோட்டைகள்

 

நானறிந்தக் கோட்டைகள்

பட்டுக்கோட்டை என்றோர் ஊருண்டு பரக்கலக்கோட்டை என்றும் ஊருண்டு

 பரவாக்கோட்டை என்றோர் ஊருண்டு சூரக்கோட்டை என்றும் ஊருண்டு

பெரியக்கோட்டை என்றோர் ஊருண்டு அருமலைக்கோட்டை என்றும் ஊருண்டு

உள்ளிக்கோட்டை என்றோர் ஊருண்டு தளிக்கோட்டை என்றும் ஊருண்டு

பொன்னவராயன்கோட்டை என்றோர் ஊருண்டு                                                                      நெடுவாக்கோட்டை என்றும் ஊருண்டு

பனையக்கோட்டை என்றோர் ஊருண்டு ஈச்சங்கோட்டை என்றும் ஊருண்டு

தம்பிக்கோட்டை என்றோர் ஊருண்டு தாமரங்கோட்டை என்றும் ஊருண்டு

திருமக்கோட்டை என்றோர் ஊருண்டு திருமங்கலக்கோட்டை என்றும் ஊருண்டு

வடக்குக் கோட்டை என்றோர் ஊருண்டு தெற்குக் கோட்டை என்றும் ஊருண்டு

இத்தனைக் கோட்டைகள் சூழ அருமையான ஆம்பலாப்பட்டு என்ற ஊரும் அங்குண்டு!

- தஞ்சை த இராமநாதன்

வீடே நாடு

 

வீடே நாடு 

வீடு நலமுடன் இருந்தால் சமுதாயம் நலமாக இருக்கும்

சமுதாயம் நலமுடன் இருந்தால் நாடு நலமாக இருக்கும்

நாடு நலமுடன் இருந்தால் உலகம் நலமாக இருக்கும்

வீடு நலமுடன் இல்லாததால் சமுதாயமும் நலமாக இல்லை

நாடு நலமுடன் இல்லாததால் உலகமும் நலமாக இல்லை!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 21 October 2021

சிங்கம் சிங்கம்தான்

 

சிங்கம் சிங்கம்தான்

நிமிர்ந்த பார்வையும் மிரள வைக்கும் கம்பீரமும் இருந்தால்தான் சிங்கம்

திருட்டுப் பார்வையும் காரியவாத போக்கும் இருந்தால் அது அசிங்கம்

நேருக்கு நேராய் மோதத் தயங்காத நெஞ்சுரம் இருந்தால்தான் சிங்கம்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித் திரிந்தால் அது அசிங்கம்

தலையே போனாலும் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து நின்றால்தான் சிங்கம்

தன்மானம் போய் தலை குனிந்து தரங்கெட்டு வாழ்ந்தால் அது அசிங்கம்

காட்டுக்கு ராஜா ராஜ நடைபோட்டு நடந்து சென்றால்தான் சிங்கம்

நாட்டுக்கு ராஜா எனக் கூவி ரவுடி நடை நடந்தால் அது அசிங்கம்!

- தஞ்சை த இராமநாதன்

குறியும் குறிக்கோளும்

 

குறியும் குறிக்கோளும்

ஒரு கண்ணின் குறி இரு கைகளோடு தப்ப விடாது

ஒருகால் குறி தப்பினாலும் மறுகல் தப்ப விடாது

குறி தப்பிப் போனாலும் குறிக்கோள் தப்பக் கூடாது!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 20 October 2021

துள்ளியோட தயாராகும் புள்ளி மான்

 

துள்ளியோட தயாராகும் புள்ளி மான்

துணிவான மான் படு துடிப்பான புள்ளி மான்

ஆடுபோல் காணப்படும் மான் ஆடாமல் காணும் மான்

கொம்பு இல்லாத மான் வம்பு எதுவும் செய்யாத மான்

கூட்டமாக நிற்கும் மான் ஓட்டமாக ஓட பார்க்கும் மான்

உயிருக்காக போராடும் இம் மான் பயந்தால் பாய்ந்தோடும் இம் மான்

சேர்ந்து வாழும் கலை மான் இம் மான் அழகான சிவப்பு மான்!

- தஞ்சை த இராமநாதன்

கொரோனாவும் ஊரடங்கும்

 

கொரோனாவும் ஊரடங்கும்

ஊரார் அடங்கினால் ஊரடங்கு தேவையில்லை

கொரோனா அடங்கினால் ஊரடங்க தேவையில்லை

ஊரார் அடங்கியதாக எப்போதும் வரலாறில்லை

கொரோனா அடங்குவதாக இப்போதும் தெரியவில்லை

தேர்தல் நேரத்தில் இந்த கொரோனாவுக்கு மதிப்பில்லை

தேர்தல் முடிந்ததும் சொந்த மக்களுக்கும் மதிப்பில்லை

கூடி வாழ்ந்தால் கோடிக் கணக்கில் நன்மை அன்று

கூடி நின்றாலே கோடிக் கணக்கில் தீமை இன்று

மருந்துகள் பல வந்தன கொரோனாவைத் தடுக்க

பிறழ்வாய் வந்தது கொரோனா அந்த மருந்தைத் தடுக்க

கட்டுப்பாடு வேண்டாம் என்பார் வாழ்வைக் கெடுக்க

கட்டுப்பாடு வேண்டும் என்போம் பேரழிவைத் தடுக்க!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 19 October 2021

வண்டியைத் தொடரும் மழை

 


வண்டியைத் தொடரும் மழை

வெயில் படர்ந்து வண்டியின் முன்னே ஒளியாய்த் தெரியுது

மழைத் தொடர்ந்து வண்டியின் பின்னே சாரளாய்த் தெரியுது

சீவிய கொம்புகள் காளைகளுக்கு சிறப்பைக் கொடுக்குது

பூசிய வண்ணங்கள் கொம்புகளுக்கு பொலிவைக் கொடுக்குது

மழைபட்ட மண்ணில் மண்ணின் வாசனை பெருகுது

மழைபடாத மண் மணம்பெற மழையின் வரவினை நோக்குது 

லாடம் கட்டிய ஓசை காளையின் காலில் டக் டக்கெனக் கேட்குது

நனைய ஆசை இருந்தாலும் ஓட்டுநரின் இதயம் படக் படக்கென அடிக்குது!

- தஞ்சை த இராமநாதன்

இயேசு மகான்

 

இயேசு மகான்

மனிதனாகப் பிறந்த மகான்; மகத்துவம் புரிந்த மகான்

துன்பப்பட்ட அற்புத மகான்; துயரப்பட்ட அபூர்வ மகான்

மதத்தைப் பரப்பாத மகான்; மனிதத்தைப் பரப்பிய மகான்

சோதனைகள் சூழ்ந்த மகான்; வேதனையில் வாழ்ந்த மகான்

சக துரோகத்தை அனுபவித்த மகான்; சுக போகத்தை அனுபவிக்காத மகான்

அப்போது கொல்லப்பட்ட மகான்; இப்போது கொண்டாடப்படும் மகான்!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 18 October 2021

மனித உருவத்தில் மிருகங்கள்

 

மனித உருவத்தில் மிருகங்கள்

ஆட்டைக் கொன்று மாட்டைக் கொன்று சிங்கத்தையும் கொல்பவன் யார்?

யானையோடு பூனையையும் கொன்று புலியையும் கொல்பவன் யார்?

முயலைத் தின்று குயிலைத் தின்றுநண்டையும் தின்பவன் யார்?

புறாவைத் தின்று சுறாவைத் தின்று கோழியையும் தின்பவன் யார்?

மானைத் தின்று மீனைத் தின்று ஒட்டகத்தையும் தின்பவன் யார்?

பாம்பைத் தின்று உடும்பைத் தின்று பன்றியையும் தின்பவன் யார்?

கொன்றால் பாவம் தின்றால் போச்சு எனக் கூவி பாவியானவன் யார்?

தெரிந்த உயிரைக் கொன்று தெரியாத உயிரியால் இறப்பவன் யார்?

கணவனை மனைவி கள்ளக் காதலால் கொன்றால் அவள் யார்?

மனைவியை கணவன் காரணமின்றியே கொன்றால் அவன் யார்?

சமீபத்தில் ஓடும் இரயிலில் பலபேர் பார்க்கும்போதே கற்பழித்தவன் யார்?

பகலிலே சாலையிலே விரட்டி வெட்டிக் கொலை செய்பவன் யார்?

அக்கிரம காட்டுமிராண்டிகள் நாட்டில் திரிந்தாலும் அவனெல்லாம் யார்?

குனிய வைத்து கையை ஊன வைத்து நடக்க வைத்தால் எப்படி இருக்கும் பார்!

- தஞ்சை த இராமநாதன் 

இது முட்டாள்களின் உலகமா?

 

இது முட்டாள்களின் உலகமா?

முட்டாள்கள் தினமும் அதே மாதம் அறிவாளிகள் தினமும் அதே மாதம்

முட்டாள்களுக்கும் அதே நாள் அறிவாளிகளுக்கும் அதே நாள்

ஏமாற்றினால் அறிவாளி ஏமாந்தால் முட்டாள்

ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருப்பர்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 17 October 2021

வீணான கோபம் ஒரு சாபம்

 

வீணான கோபம் ஒரு சாபம்

எப்போதும் கோபமேபடாதவர் மனிதருமில்லை

எப்போதுமே கோபப்படுபவர் மனிதருமில்லை

வீணான கோபத்தில் மனிதாபிமானம் இல்லை 

கோபத்தின் வார்த்தைகளில் நியாயமும் இல்லை 

கோபத்தின் பின்னணியில் அகங்காரம் உண்டு 

கோபத்தின் பின்னணியில் ஆணவமும் உண்டு 

எறிந்த அம்பைப் போல எறிந்த வார்த்தையால் காயப்படும் 

சுட்ட வடு அன்பெனும் மருந்து கொண்டு ஆற்றுவதற்குப் பயன்படும் 

மாற்றம் காண்போம் உறுதியான உண்மையுடன்

குற்றம் மறந்து சுற்றம் வளர்ப்போம் உறுதியுடன்!

- தஞ்சை த இராமநாதன்

உயிரும் வாழ்க்கையும்

உயிரும் வாழ்க்கையும்

உயிரோடு வாழ்பவர் எல்லாம் வாழ்பவருமல்ல
உயிர்போய் இறந்தவர் எல்லாம் இறந்தவருமல்ல
வாழும் வரை மனிதர்களாக வாழ்வோம்
இறந்த பின்னும் மனிதர் மனங்களில் வாழ்வோம்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 16 October 2021

ஏறுதழுவல் (ஜல்லிக் கட்டு)

 

ஏறுதழுவல் (ஜல்லிக் கட்டு)

தன்னால் பிடிக்க முடியாது என்று தெரிந்தும் பிடிக்க விரட்டும் காளையர்கள்

தன்னை பிடிக்க முடியாது என்று தெரிந்தும் பிடித்தபடி ஓடும் காளைகள்

ஓரமாய் ஒளிந்து நின்று கூட்டமாய் பாய்வார்கள் முரட்டுக் காளையர்கள்

ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்று கூட்டமாய் பாய்ந்தோடும் விரட்டுக் காளைகள்

முட்டப்பட்டு மோதப்பட்டு மிதிப்பட்டு தூக்கி எறியப்படுவர் காளையர்கள்

முடிந்து வைக்கப்பட்ட பண முடிச்சோடு எகிறித் தப்பியோடும் காளைகள்

காளையை வளர்த்து பண முடிப்போடு களத்தைக் கட்டுப்படுத்துவோர் யார்?

சொற்பப் பணத்திற்காக மாட்டை விரட்டி உயிரை விடவும் துணிந்தோர் யார்?

மாட்டை மடக்கிய மாவீரன்தான் அந்த ஊரின் கிராம பஞ்சாயத்துத் தலைவரா?

மஞ்சு விரட்டு வீரன்தான் ஒன்றியக் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றவரா?

பண்ணை வீட்டார் மாடுபிடி களத்தில் இறங்கி மாட்டைப் பிடிக்காதது ஏன்?

அரசியல்வாதி குடும்பத்தினருக்கு மாட்டை மடக்கிப் பிடிக்கப் பிடிக்காதது ஏன்? 

உணர்வோடு தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறக்காமல் காப்போம்!                              அறிவோடு தன்மான ஏழைத் தமிழர் தன்னுயிரைத் துறக்காமல் காப்போம்!

- தஞ்சை த இராமநாதன்

வாக்குக்கு வாங்கும் போக்கு

 

வாக்குக்கு வாங்கும் போக்கு 

இருப்பவர்கள் இல்லாத நாடுமில்லை இல்லாதவர்கள் இல்லாத நாடுமில்லை ஒருவருக்கொருவர் உதவாமல் வாழ்வது வாழ்வே இல்லை 

கொடுத்து வாங்குவதில் சிறுமையில்லை வாக்குக்காக கொடுத்து வாக்கை வாங்குவதில் சிறுமை இல்லாமல் இல்லை!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 15 October 2021

விளக்கால் விலகிடும் இருள்

 

விளக்கால் விலகிடும் இருள்

நீராடி உடல் தூய்மையுடன் விளக்கேற்ற வீட்டில் விளக்கொளி நிறையும்

விளக்கொளி வெளிச்சத்தால் வீட்டில் இருந்த இருள் மறையும்

வீட்டில் இருந்த இருள் மறைந்து அருள் நிறைவது மனதில் தெரியும்

எண்ணெய் நெய்யோடு கலந்த வாசம் நறுமணத்துடன் எரியும் 

இதுபோல் ஆன்மாவும் மகிழ தியானம் செய்தால்தான் முடியும்!

- தஞ்சை த இராமநாதன்

அன்றைய தமிழ் இனம்
















அன்றைய தமிழ் இனம்

கல்லிலே கலை வளர்த்த இனம்
சொல்லிலே மொழி வளர்த்த இனம்
செயலிலே அறம் வளர்த்த இனம்
வீரத்திலே மானம் காத்த இனம்!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 14 October 2021

அர்த்தமுள்ள ஆயுத பூஜை

 

அர்த்தமுள்ள ஆயுத பூஜை

அறிவுக்கு ஆயுதம் அதுதான் கல்வி அதைக் கற்றுத் தருவதுதான் பள்ளிக் கூடம்

பள்ளியில் பயில்வது அறிவுப் பாடம் அறிவைத் தருவதுதான் கல்விக் கூடம்

பணத்திற்காகப் பலபேர் பக்தியோடு கத்தியோ கத்தாமலோ வணங்கலாம்

ஞானத்தைப் பெற நம்மினத்தார் நல்ல புத்தகத்தை வணங்குவதைப் புகழலாம்

காய்கறி வெட்டும் கத்தியை வணங்கி வேண்டுவோரும் நம்மில் உண்டு

மாட்டை வெட்டும் கத்தியை வணங்கி வேண்டுவோரும் நம்மில் உண்டு

செய்யும் தொழிலை தெய்வமாக வணங்கி வழிபடுதலில் தவறே இல்லை

திருட்டுத் தொழில் வளர வழிபட்டு வணங்கலில் தவறு இல்லாமல் இல்லை

அறிவியல் ஆயுதங்கள் தாராளமாய் இங்கு வந்து தரணியைக் காக்கட்டும்

ஆயுதங்களால் அழிவு உண்டாகாமல் வளமான வாழ்வு உண்டாகட்டும்!

- தஞ்சை த இராமநாதன்

எங்கும் எதிலும் உயர்ந்தீர்

 

எங்கும் எதிலும் உயர்ந்தீர் 

பொறுமை குணத்தில் உயர்ந்து தியாகக் குணத்திலும் உயர்ந்தீர்

சோகத்தை எல்லாம் தாங்கி சுகத்தை எல்லாம் துறந்தீர்

கல்விக் கற்பதில் உயர்ந்து கல்விக் கற்பிப்பதிலும் உயர்ந்தீர்

செய்ய முடியாததையும் செய்து கம்பத்தின் உச்சியையும் அடைந்தீர்!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 13 October 2021

பகலோனின் பகலொளி

 

பகலோனின் பகலொளி

பானுவின் கதிரால் இடருறும் காலமும் இருக்கும் 

பானுவின் கதிரில்லாது இருளான காலமும் இருக்கும் 

காலைக் கதிரவன் பிரகாச ஒளியைக் கொடுக்கும்

கிழக்குக் கதிரவன் மரத்தின் நிழலை மேற்கில் கொடுக்கும்

சூரியனின் கதிரால் ஒளிச்சேர்க்கை உருவாகும்

ஒளிச்சேர்க்கையால் பிராணவாயு உருவாகும்

ஆதவன் உதித்தால்தான் உலக வாழ்வு சிறக்கும்

ஆதவன் ஒளியால்தான் உயிர் வாழ்வே சிறக்கும்!

- தஞ்சை த இராமநாதன்

பக்த பகத் சிங்



 

பக்த பகத் சிங்

தேச பக்திக்கு பகத் சிங் குரு பக்திக்கு பக்த சிங்

தவறாக சுடாத பகத் சிங் தவறி சுட்ட பகத் சிங்

பழிக்குப் பழி பகத் சிங் பழிக்குப் பலியான பகத் சிங்

பாடம் புகட்டிய பகத் சிங் பாடமாகி வாழும் பகத் சிங்!

- தஞ்சை த இராமநாதன்


Tuesday, 12 October 2021

மனிதரின் சிறப்பு சிரிப்பு



 

மனிதரின் சிறப்பு சிரிப்பு

உண்பதும் உறங்குவதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது

கத்துவதும் கதறுவதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது

அலறுவதும் அழுவதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது

ஓடுவதும் ஓய்வெடுப்பதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது

பிறப்பதும் இறப்பதும் உயிர் உள்ள பிறவி அனைத்திற்கும் பொது

அகத்தால் மகிழ்ந்து முகத்தால் சிரிப்பது மனிதருக்கு மட்டும் பொது!

- தஞ்சை த இராமநாதன்

தேர்தல் கூட்டணி

 

வந்தத் தேர்தலில் அந்தப் பக்கம் உங்கள் கூட்டணி                                                              வரும் தேர்தலில் இந்தப் பக்கம் உங்கள் கூட்டணி

தேர்தலில் சாதிக்காத கழிவுக் கூட்டணியும் உண்டு                                                                            தேர்தலில் சாதிக்காக இழிவுக் கூட்டணியும் உண்டு

சதிக்காரர் கொள்ளைக்காக திருட்டுக் கூட்டணியும் உண்டு                                சாதிக்காரர் கொள்கைக்காக வறட்டுக் கூட்டணியும் உண்டு

கோடிகள் உதவியோடு அடாவடிக் கூட்டணியும் உண்டு                                    கேடிகள் உதவியோடு அடிதடிக் கூட்டணியும் உண்டு

கொடுத்து வெல்லப் பார்க்கும் கூட்டணியும் உண்டு                                                                          கெடுத்து கொல்லப் பார்க்கும் கூட்டணியும் உண்டு

தகுதி இல்லாதவர்களின் தரங்கெட்டக் கூட்டணியும் உண்டு                                        மனம் கெட்டவர்களின் மானங்கெட்டக் கூட்டணியும் உண்டு

எல்லாம் மாறி வர வேண்டும் கசடற கற்ற கல்வியாளர்களின் கூட்டணி

அதுதான் மக்களால் மக்களுக்காக மாசற்ற பண்பாளர்களின் கூட்டணி!

- தஞ்சை த இராமநாதன்

Monday, 11 October 2021

சோலை போல சாலை

 

சோலை போல சாலை

சாலை இருபுறமும் கச்சிதமாய் நிற்கும் இந்த மரம் தாவரம் என்றாலும் மாவரம்

இவை பெரும்பாலும் காய்க்கா மரம் என்றாலும் நிழல்தர ஏய்க்கா மரம்

கிளையோடு கிளை சேர்ந்து குடைபோல் கொடை தருவது இயற்கையின் வரம்

என்ன மரம் இம்மரம் என பார்ப்போரை பார்த்தவுடன் கேட்க வைக்கும் மரம்

இது இயற்கையான மரம் இதற்குத் தேவையில்லை செயற்கையான உரம்

காற்றைத் தூய்மையாக்கி குளிராக்கி மழையை நமக்கு கொடுக்கும் மரம்!

- தஞ்சை த இராமநாதன்

எங்கும் தண்ணீர்

 

எங்கும் தண்ணீர் 

தைவானிலே சுடு வான் ஆஸ்திரேலியாவிலே குளிர் வான்

பூமி காக்க மழை தரும் வான் பூமி நோக்கி பொழியும் வான்

காசுக்கு நீரை விற்பான் குடித்து வீதியில் நிற்பான்

தண்ணிப் போட்டு மிதப்பான் மாசுபடுத்தி தண்ணியைக் கெடுப்பான்!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 10 October 2021

வயல் காட்டில் வசந்தம்

 

வயல் காட்டில் வசந்தம்

மலையடிவாரத்திலே வயல் காக்கும் வரப்பினிலே

காலைப் பொழுதினிலே காலார நடக்கயிலே

கதிரிவன் ஒளியினிலே கருநிழல் நீங்கயிலே

ஓடும் வாய்க்காலிலே சின்ன மீன் குதிக்கயிலே

வாழை இலையினிலே முத்தாக நீர் இருக்கயிலே

தென்னங் காற்றின் வீசலிலே நெற்பயிரின் ஆடலிலே

களையைப் பறிப்பதிலே கவனம் குறைவதில்லே

களைப்பும் தெரிவதில்லே மலைப்பும் தெரிவதில்லே!

- தஞ்சை த இராமநாதன்

ஆணும் கவிஞர் பெண்ணும் கவிஞர்

 

ஆணும் கவிஞர் பெண்ணும் கவிஞர் 

ஆழ் கிணற்றின் ஊற்றைப்போல் அடி மனதின் கூற்றுதான் கவிதை

அள்ள அள்ளச் சுரப்பதைப்போல் சொல்லச் சொல்ல சிறப்பதுதான் கவிதை

இருபாலரையும் இணைத்து ஒருபாலராக்கி கவிப்பாடினோர் கவிஞரானார்!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 9 October 2021

அழகு மயில்

 

அழகு மயில்

உளிகொண்டு கல்லில் உருகண்ட கலைச் சிற்பியின் கற்பனை மயில்

மையலோடு இயல்பாக ஆடுவது மயில் இது சிலையாக நின்று ஆடா மயில்

மழை வருவதை அறிந்து ஆடும் மயில் இது நனையத் துணிந்த ஆடா மயில்

திரும்பிப் பார்ப்பதால் பார்ப்பவரை திரும்பிப் பார்க்க வைக்கும் மயில்

ஆணா பெண்ணா என தேட வைத்து தோகையைப் பார்க்க வைக்கும் மயில்

இம் மயிலை ஆக்க ஆகும் செலவுத் தொகையைக் கேட்க வைக்கும் மயில்

கல்லால் ஆனாலும் கண்ணைக் கவரும் காட்சியாய் மாறிய அழகு மயில்!

- தஞ்சை த இராமநாதன்

புதியதோர் உலகம்

 

புதியதோர் உலகம் 

நடந்ததை என்றும் மறக்காமல் நடப்பதை இன்றும் மறக்காமல்

நல்லதை மனதில் நிறுத்தி நல்லதை செயலில் நிறுத்தி 

புதியதோர் உலகம் செய்வோம்!

திறந்தவெளி கழிப்பிடம் நீங்கி அனைவரும் தங்க வீடு வாங்கி

இயற்கை தெய்வத்தை வணங்கி இல்லார்க்கு உணவை வழங்கி

புதியதோர் உலகம் செய்வோம்!

சாதி வெறி அறவே அகன்று சமத்துவம் நிலையாக நின்று

அகத் தூய்மை நிலை கொண்டு புறத் தூய்மை மாற்றம் கண்டு

புதியதோர் உலகம் செய்வோம்!

நிலம் நீர் காற்று தூய்மையாகி உடல் மனம் ஆன்மா புனிதமாகி

ஆன்மீகம் லௌகீகம் சமமாகி சமன்பட்ட வாழ்வு ஆனந்தமாகி

புதியதோர் உலகம் செய்வோம்!

- தஞ்சை த இராமநாதன்

Friday, 8 October 2021

தாயை இழந்தால்...

 

தோளில் சுமந்து தூங்க வைத்த தாயின் புறப்பாட்டைத் தாங்கவே முடியாது                  தாயை இழந்து துடிக்கும் இதயத் துடிப்பின் வேகத்தோடுத் தூங்கவே முடியாது

தாயின் ஆறுதலான குரலை இழந்தால் ஏங்காமல் இருக்கவே முடியாது                      தாயின் மாறுதலான உடலைப் பார்த்தால் தேம்பாமல் இருக்கவே முடியாது

இறந்த தாயைச் செல்ல வேண்டாமெனச் சொல்லி அழுதிடவும் முடியாது                  இருந்த தாயை இழந்தோமேயெனச் சொல்லி அழாமலும் இருந்திட முடியாது!

- தஞ்சை த இராமநாதன்

எது படிப்பு?



எது படிப்பு?

அன்று நன்னீர் ஆடி தலை வாரி நண்பர்களுடன் கூடிப் படித்தப் படிப்பு

அன்று ஆசிரியரை வணங்கி மகிழ்ந்து ஓடிப் பாடி பண்புடன் படித்தப் படிப்பு

இன்று வீட்டிலேயே அமர்ந்து அக்கறை இல்லாத அலட்சியப் படிப்பு

இன்று தூக்கம் கலையாது பேசியின் முகத்தை முறைத்துப் பார்த்துப் படிப்பு

கற்பிக்க நல் ஆசாண்கள் குறைந்த நவீனப் படிப்பு 

கசடற கற்க விருப்பம் இல்லா மாணவர் நிறைந்த நவீனப் படிப்பு 

பள்ளியில் படித்தாரையெல்லாம் நல்லவராக்காதப் படிப்பு

பள்ளிப் பக்கம் போகாதவரையும் நல்லவராக்கும் கேள்வி ஞானப் படிப்பு!

- தஞ்சை த இராமநாதன்

Thursday, 7 October 2021

இரையைத் தேடி

 

இரையைத் தேடி

விடிந்த காலம் நல்ல விடிவு காலமாய் ஆகுமென விடிய வைத்த இறையை நம்பி இரையைத் தேடும் நேரம்

ஒருகால் இரையே கிட்டாமல் போனால் இறையே எங்களுக்கு இரை கொடு என ஒரு காலால் நின்று தவம் புரியும் நேரம்

காலைக் கதிரவனின் கருணை ஒளியில் பனியின் தாக்கம் குறைய நிறைய நேரம் ஆகாதெனக் காத்திருக்கும் நேரம்

சுள்ளென இல்லாது மிதமான சூடேற மெல்லெனக் குளத்தில் குடும்பத்தோடு குதிக்கப் பார்த்திருக்கும் நேரம்

மூத்த வாத்தின் வழியைப் பார்த்து குஞ்சு வாத்தெல்லாம சேர்ந்து இரைதேட நீந்தப் போகும் நேரம்!

- தஞ்சை த இராமநாதன்

வாய்க்குப் பூட்டு

 

வாய்க்குப் பூட்டு 

வாயைப் பூட்டும் பூட்டுதான் இந்த நோட்டு; ஓட்டைப் போட்டப் பிறகுதான் இருக்குது வேட்டு!

தலைக்கு எவ்வளவு என நிர்ணயமாகுது ரேட்டு ; மூஞ்சில துப்ப ஆள் இல்லையே தட்டிக் கேட்டு!

நீங்குமா வாங்கும் இந்த இழிவானப் போக்கு; கிடைக்குமா கொடுப்பவனுக்கு தண்டனையா தூக்கு?

வாங்கிக் கொண்டு போடாமல் போட்டுத் தாக்கு; ஏங்கிக் கொண்டே ஒழியணும் கோக்கு மாக்கு!

- தஞ்சை த இராமநாதன்

Wednesday, 6 October 2021

அதிசயமாகாத அதிசயங்கள் பல

 

அதிசயமாகாத அதிசயங்கள் பல 

அதிசயங்கள் என அறிவித்ததால் ஒரு சில மட்டும் அதிசயங்களானது அதிசயம்!

அதிசயங்கள் என அறிவிக்காததால் பல அதிசயங்கள் அதிசயங்களாகாததும் அதிசயம்!

அதிசயங்களாக அறிவித்ததால் சில அதிசயங்கள் அதிசயங்களாகவே இருக்கட்டும்!

அதிசயங்களாக அறிவிக்கப்படாததால் பல அதிசயங்களையும் அதிசயங்களாக அறிவிக்கட்டும்!

பாறையே இல்லாத காவிரிப்படுகையில் பாறையாலான பெரிய கோவில் அதிசயம் இல்லையா?

80 டன் எடையை 1000 ஆண்டுக்கு முன்பே 60 மீட்டர் உயரத்தில் வைத்ததும் அதிசயம் இல்லையா?

- தஞ்சை த இராமநாதன்

அது அந்தக் காலம்

 

அது அந்தக் காலம்

அடுப்பூதி சமைத்ததெல்லாம் அந்தக் காலம் - அய்யா அந்தக் காலம்!

ஊதா அடுப்பு வந்த போதும் சமைக்காதது இந்தக் காலம் - அய்யோ இந்தக் காலம்!

வீட்டில் இருந்து பிள்ளையை வளர்த்தது அந்தக் காலம் - அய்யா அந்தக் காலம்!

வேலையே வேலையானதால் பராமரிப்பு நிலையம் வந்தது - இந்தக் காலம் அய்யோ இந்தக் காலம்!

மூத்தோரை வீட்டில் வைத்து கவனித்தது அந்தக் காலம் - அய்யா அந்தக் காலம்!

முதியோருக்கு தனி இல்லம் வந்தது இந்தக் காலம் - அய்யோ இந்தக் காலம்!

வந்தோரையெல்லாம் வாழ வைத்தது அந்தக் காலம் - அய்யா அந்தக் காலம்!

ஊர் ஊராய் ஓடி வாழ்வைத் தேடுவது இந்தக் காலம் - அய்யோ இந்தக் காலம்!

- தஞ்சை த இராமநாதன்

Tuesday, 5 October 2021

எண்ணத்தின் வண்ணம்

 

எண்ணத்தின் வண்ணம்

எண்ணிய எண்ணம் கைகூடி கலை எண்ணம் கூடிய வண்ணம்

மன எண்ணம் கை கொடுத்ததால் கிடைத்தது யானையின் வண்ணம்

நீருக்கு நீரின் நிறத்திலேயே நிறம் கொடுத்து கொட்டுவது நீரின் வண்ணம்

தும்பிக்கைக்கு கை கொடுத்தது தன்னம்பிக்கையின் கலை வண்ணம்

மலையை யானையாக்கி யானையை மரமாக்கிய இயற்கையான வண்ணம்

மலைமீதேறி யானைமீதேறி தும்பிக்கைமீதேறும் ஆசையின் வண்ணம்!

- தஞ்சை த இராமநாதன்