Monday, 31 July 2023

தக்காளியின் குரல்

தக்காளியின் குரல்

விளைந்திருந்தால் நடுத்தெருவில்          நின்று கொட்டுகின்றீர்
விளையாதிருந்தால் கடைத்தெருவில்      நின்று திட்டுகின்றீர்

விலையை உயர்த்தி வியாபாரத்தைத்        திட்டம் தீட்டி பெருக்குகின்றீர்
விலையைக் குறைத்து விவசாயியைக் 
கட்டம் கட்டி நொறுக்குகின்றீர்

சிவப்பாகச் செடியிலேயே பறித்து
அழுக விட்டு நாற வைக்கின்றீர்
பச்சையாகச் செடியிலேயே பறித்துப்      பழுக்க விடாது தூர வைக்கின்றீர்

கிடைக்கும்போது அரிந்து அரிந்து
எண்ணெய்யில் போட்டு வதக்கின்றீர்
கிடைக்காதபோது எரிந்து எரிந்து
என்னைப் போட்டு வதைக்கின்றீர்!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 28 July 2023

நியாயம் இல்லாதது அநியாயம்

 

நியாயம் இல்லாதது அநியாயம்

நியாயமே இல்லாதோரிடம்      நிலைத்திருப்பது அநியாயமெனில் யோக்கியமே இல்லாதோரிடம் நிறைந்திருப்பது அயோக்கியமோ?

நாகரிகம் இல்லாதோரிடம்
நிலைத்திருப்பது அநாகரிகமெனில்
நாத்திகமே இல்லாதோரிடம்
நிறைந்திருப்பது ஆத்திகமோ?

ஜாக்கிரதையாக இல்லாதோரிடம்
நிலைத்திருப்பது அஜாக்கிரதையெனில்
சாதாரணமாக இல்லாதோரிடம்
நிறைந்திருப்பது அசாதாரணமோ?

சுத்தம் இல்லாதோரிடம்
நிலைத்திருப்பது அசுத்தமெனில்
பந்தமே இல்லாதோரிடம்
சேர்ந்திருப்பது அபத்தமோ?

பலம் இருப்போரிடம்
நிறைந்திருப்பது அம்பலமெனில்
பரம் இருப்போரிடம்
நிலைத்திருப்பது அம்பரமோ?

நயம் இருப்போரிடம்
நிலைத்திருப்பது அபிநயமெனில்
பயம் இருப்போரிடம்
நிறைந்திருப்பது அதிபயமோ?

காரம் இருப்போரிடம்
நிலைத்திருப்பது அகங்காரமெனில்
கோலம் இல்லாதோரிடம்
நிறைந்திருப்பது அலங்கோலமோ?

மதி இருப்போரிடம்
நிலைத்திருப்பது அமைதியெனில்
நீதியே இல்லாதோரிடம்                                            நிறைந்திருப்பது அநீதியோ?

வைப்பு இருப்போரிடம்
வைப்பிருப்பது அவைப்புயெனில்
கரிப்பு இருப்போரிடம்
கலந்திருப்பது அபகரிப்போ?

- தஞ்சை த.இராமநாதன்


Wednesday, 26 July 2023

வாழ்ந்தோரும் - வீழ்ந்தோரும்

 

வாழ்ந்தோரும் - வீழ்ந்தோரும்

கை கொடுத்துத் தூக்கிவிட்டால்
தூக்கியவர் வாழ்ந்ததுண்டு
வாய் கொழுத்துத் தாக்கிவிட்டால்
தாக்கியவர் வீழ்ந்ததுண்டு
புத்தியைக் கூர்மையாக்கி 
பேசியவர் வாழ்ந்ததுண்டு
கத்தியைக் கூர்மையாக்கி
குத்தியவர் வீழ்ந்ததுண்டு

உறவைக் கட்டிக் கொண்டாடி
புகழ்ந்தோர் வாழ்ந்ததுண்டு
உறவை வெட்டித் துண்டாடி
இகழ்ந்தோர் வீழ்ந்ததுண்டு
மரபைக் கொண்டாடித் தூக்கி
போற்றியோர் வாழ்ந்ததுண்டு
மானத்தை மறந்து மனித மரபை
தூற்றியோர் வீழ்ந்ததுண்டு

உரிமைக்காகப் போராடியோர்          இறந்தாலும் வாழ்வதுண்டு             பெருமைக்காகப் போராடுவோர்        இருந்தாலும் வீழ்வதுண்டு 
உண்மையாக உழைத்து வாழ்வோர்                    வறுமையோடு வாழ்வதுண்டு
ஏய்த்துப் பிழைத்து வாழ்வோர் வெறுமையோடு வீழ்வதுண்டு!

- தஞ்சை த.இராமநாதன்


Sunday, 16 July 2023

எப்படி இதையெல்லாம் மறந்தீரோ?

 

எப்படி இதையெல்லாம் மறந்தீரோ?

எத்தனையோ காலங்களைக் கடந்தீர் அத்தனைக் காலங்களையும் மறந்தீர்
எத்தனையோ தடைகளைத் தகர்த்தீர்
தடைகள் தகர்ந்ததையும் மறந்தீர்

எத்தனையோ படங்களைப் பார்த்தீர் படங்களின் பாடங்களை மறந்தீர்
எத்தனையோ பாடல்களைக் கேட்டீர்
கேட்டப் பாடல்களையும் மறந்தீர்

எத்தனையோ பாதைகளில் நடந்தீர்
பாதைகளின் வழிகளை மறந்தீர்
எத்தனையோ முகங்களைப் பார்த்தீர்
முகங்களில் வலிகளையும் மறந்தீர்

எத்தனையோ வேளைகளில் மகிழ்ந்தீர் மகிழ்ந்த வேலைகளை மறந்தீர்
எத்தனையோ துயரங்களில் ஒடிந்தீர்
ஒடிந்த உயரங்களையும் மறந்தீர்
 
எத்தனையோ தருணங்களில் கரைந்தீர்    கரைந்தக் காரணங்களை மறந்தீர்
எத்தனையோ நிறங்களில் வரைந்தீர் வரைந்த நேரங்களையும் மறந்தீர்

இத்தனை வரிகளை இவ்வளவு வேகத்தில் படித்தீர்!
அத்தனை வரிகளையும் அவ்வளவு வேகத்தில் மறப்பீர்!

யாரும் அடுத்தவர் சொன்ன சொல்லை  கேட்டகப் போவதுமில்லை!
சொல்பவரோ சொல்வதை சொல்லாமல் நிறுத்தப் போவதுமில்லை!

- தஞ்சை த.இராமநாதன்


Thursday, 13 July 2023

அன்பைத் தந்த மாமா

 

அன்பைத் தந்த மாமா
(4வது வருட நினைவு நாள் 13-07-2023)

இரத்த சொந்தங்களையும் மொத்தப் பந்தங்களையும் படிக்கத் தூண்டிய ஆன்மிகப் பகுத்தறிவுப் பண்பாளர்

பணத்தின் செல்வ வளங்களோடும் குணத்தின் சொல் வளங்களோடும்    சீரோடும் சிறப்போடும்  வாழ்ந்தவர்

தமிழில் இலக்கண எளிய மரபோடும் ஆங்கிலப் புலமையில் வலிய அறிவோடும் 
தெளிவாக எழுதவும் பேசவும் தெரிந்தவர்

தாயின் வழியில் என் மாமாயிவர்             தாரத்தின் வழியில் என் மாமனாரிவர்
தரத்தின் வழியிலோ மாமனிதரிவர்

உறவுக்கு உறுதுணையாக இருந்து
மரபுக்கு உதாரணமாக இருந்தார்
பாசத்துடன் உண்மையாக இருந்து
நேசத்துடன் மென்மையாக இருந்தார்

கடமையைக் கண்ணியத்துடன் காத்து
கட்டுப்பாட்டைக் கண்டிப்புடன் காத்தார்
உரிமையை உறுதியோடுக் காத்து
உடைமையை இறுதிவரைக் காத்தார்

பகுத்தறிவோடு சிந்திக்க வைத்து
பண்பாளர்களோடு சந்திக்க வைத்தார்
பயின்று பாடத்தைப் படிக்க வைத்து
முயன்று பட்டத்தைக் கிடைக்க வைத்தார்

அவர் இருந்தபோது ஆறுதலாய்        இருந்ததை உணர வைக்கின்றார்
அவர் இல்லாதபோது மாறுதலாய்    இருப்பதை உணர வைக்கின்றார்

அவர் இருந்ததை எண்ணும்போது                    ஆனந்தக் கண்ணீரில் தெரிகின்றார்
அவர் இல்லாததை எண்ணும்போது அழுகைக் கண்ணீரில் தெரிகின்றார்!

- தஞ்சை த.இராமநாதன் 

Tuesday, 11 July 2023

கவிஞருக்கு அழகு...

 

கவிஞருக்கு அழகு...

கவிஞராக இருப்போர் ஊற்றுக் கவிதையை அருமையாகப் படைக்கவும் வேண்டும்
கவிஞராக இருப்போர் வேற்றுக் கவிதையைப் பொறுமையாகப் படிக்கவும் வேண்டும்

புதுக் கவிதையாக இருந்தாலும் அக்கவிதை புரட்சியை உண்டாக்கவும் வேண்டும்
புரட்சிக் கவிஞராக இருந்தாலும் அக்கவிஞர் புதுமையை உண்டாக்கவும் வேண்டும்

கவியாக இருப்பவர் அறிஞரானால் கவியறிஞராக இருக்க வேண்டும்
கவிஞராக இருப்பவர் அரங்கேறினால் கவியரங்கமாக இருக்க வேண்டும்

கவிஞருக்கு மற்றக் கவிஞரின்    கவிதையைப் படித்துப் பழகவும் வேண்டும்
கவிஞருக்கு மாற்றுக் கருத்துடையக் கவிதையைப் படித்துப் பார்க்கவும் வேண்டும்

படித்தவர் கவிஞராக இருந்தால் படிக்காதவரையும் படிக்க வைக்க வேண்டும்
படிக்காதவர் கவிஞராக இருந்தால் படித்தவரையும் படிக்க வைக்க வேண்டும்!

- தஞ்சை த.இராமநாதன்


Sunday, 9 July 2023

தொட்டால் குத்தும்

 

தொட்டால் குத்தும்

கையைக் கொடுக்கும்போதே கையில் பட்டதும் உணரலாம் பாச நேசத்தை
கையைக் கொடுக்கும்போதும் கையின்
வலியில் உணரலாம் மோச வேஷத்தை

கையை எடுக்கும்போதே முகத்தின் சிரிப்பில் பார்க்கலாம் நேச பாசத்தை
கையை எடுக்கும்போதும் முகத்தின் கரிப்பில் பார்க்கலாம் வேஷ மோசத்தை

கை கொடுக்கும் கையை கையோடு கோர்த்தால் உணரலாம் பாச நேசத்தை
கையோடு கை சேர்த்து நெறித்தால் உணரலாம் மோச வேஷத்தை

ரோஜாப் பூவைத் தொடாது உணரலாம்    இதழ் தந்திட்ட மயக்கும் வாசத்தை                  ரோஜாப் பூவைத் தொட்டால் உணரலாம்    முள் குத்திட்ட விரலில் காயத்தை!

- தஞ்சை த.இராமநாதன்


Thursday, 6 July 2023

ஒரு மரத் தோப்பு

 

ஒரு மரத் தோப்பு

ஒத்த மரத்தை மட்டும் வைத்து அதைத் தோப்பெனச் சொல்லிடவும் முடியாது
செத்த மரத்தை மட்டும் வைத்து அதைத் தோப்பாவெனக் கேட்டிடவும் முடியாது

ஒத்த மரத்தோடு மத்த மரம் எதுவுமே      சேராது தோப்பாகிடவும் முடியாது
மத்த மரத்தோடு ஒத்த மரம்  எப்போதுமே சேராது தோப்பாகிடவும் முடியாது

ஒரு மரத் தோப்பென்றால் ஒரே மரத் தோப்பெனச் சொல்லிடவும் முடியாது
ஒரே மரத்தின் தோப்பென்றால் பல மரத் தோப்பெனச் சொல்லிடவும் முடியாது

ஒரு மரத் தோப்பை பல மரத் தோப்பெனச் சொன்னால் அது தப்பாகிட முடியாது
ஒரே இன மரத்தில் பல மரத் தோப்பெனச் சொன்னாலும் அது தப்பாகிட முடியாது

மாமரத் தோப்பை பழ மரத் தோப்பென அழைத்தால் அதைத் தவறென சொல்லிட முடியாது
மாம்பழ மரத் தோப்பை மாந்தோப்பென அழைத்தால் அதையும் தவறென சொல்லிட முடியாது

பழ மரத்தோடு பல தோப்பு இருந்தால் பணபலன் தருமெனக் கூறவும் முடியாது
பனை மரத்தோடு சில தோப்பு இருந்தால்
பனை பலன் தராதெனக் கூறவும் முடியாது!

- தஞ்சை த.இராமநாதன்