Tuesday, 29 November 2022

தடி

தடி

தடியெடுத்து தாவிக் குதித்து கம்பைச் சுழற்றி சுத்தியவர்கள் தடியாகிப் போனதுமில்லை அடியெடுத்து நடக்க மறுத்து குண்டாகிப் போனவர்கள் தடியாகாதுப் போனதுமில்லை

தடியெடுத்து தண்டல்காரனாக சுற்றியவர்கள் தண்டமாகாதுப் போனதுமில்லை
அடித்து ஆக்கிரமித்து அடுத்தவரைக் கெடுத்து வாழ்ந்தவர்கள் வீழ்ந்து போகாதுப் போனதுமில்லை

தடியெடுத்து சிலம்பமாடி மரபோடு சுத்தியவர்கள் நல்ல ஆட்டக்காரரென பெயரெடுக்காதுப் போனதுமில்லை                        அடிக்காதில் துளையிடாது ஆபரணம் அணிந்துத் திரிந்தவர்கள் குலப் பெயரை கெடுக்காதுப் போனதுமில்லை!

- தஞ்சை த இராமநாதன்

Sunday, 27 November 2022

தாடி

 

தாடி

வாழ்ந்து தொடர்கின்ற சோகங்களைச் சொல்லவே வளர்க்கின்றார் பலபேர் தாடி வாழ்ந்து தொடர்கின்ற சுகங்களைச் சொல்லவும் வளர்க்கின்றார் சிலபேர் தாடி

சிறிதாக முளைத்தால் முளையிலேயே மழிக்கப்படுகிறது பலபேரின் தாடி
பெரிதாக தழைத்தால் முகத்திலேயே மதிக்கப்படுகிறது சிலபேரின் தாடி

தடவப் பார்த்தாலும் தடவும் அளவிற்கு வளர்வதில்லை பலபேருக்கு தாடி
தடவத் தடவ மீண்டும் தடவச் சொல்லும் அளவிற்கு                                                                      வளர்கின்றது சிலபேருக்கு தாடி

முனிவரானவருக்கு அக மாற்றத்தைக் காட்டுகின்றது பலபேரின் தாடி
ஞானியானவருக்கு முக மாற்றத்தைக் காட்டுகின்றது சிலபேரின் தாடி

இத்தாடி குறுந்தாடியோ நெடுந்தாடியோ இளந்தாடிகள் யாவும் கருந்தாடிகளே
அத்தாடி உந்தாடியோ எந்தாடியோ முதுந்தாடிகள் யாவும் வெண்தாடிகளே!

- தஞ்சை த இராமநாதன்

Saturday, 26 November 2022

மூடி

 

மூடி

காடி கஞ்சியானாலும் மூடிக் குடித்தால் குடித்ததும் அகம் மகிழாது போகுமா?
மூடி மூஞ்சியானாலும் பாடி முடித்தால்
முடித்ததும் முகம் மலராது போகுமா?

ஓடி ஒளிந்து மெய்யை மூடி மறைத்தாலும் மறைத்த மெய் மெய்யாகாது போகுமா?
தேடி அலைந்து பொய்யை மூடி மறைத்தாலும்
மறைத்தப் பொய் பொய்யாகாது போகுமா?

நாடி அடங்கி வாய் மூடி ஒடுங்கிக் கிடந்தாலும்
அடங்காத வாய் மூடாதுப் பேசியது மறந்துப் போகுமா?
ஆடி தொடர் முகிலை மார்கழியில் ஆடாது பனி மூடித் தடுத்தாலும்
தடைப்பட்ட முகில் கோடை இடியோடு மாரி பொழிவது தடைப்பட்டுப் போகுமா?

மூடிய மூடியை மூடியபடியே மூடி வைத்தாலும்
வைத்த மூடியால் முடிவு விபரீதம் ஆகாதுப் போகுமா?
உலை வைத்து வேக வைக்கவே மூடி
பயன்பட்டாலும்
பயன்பட்ட மூடியே வடித்து எடுக்க பயன்படாமல் போகுமா?

- தஞ்சை த இராமநாதன்


Saturday, 19 November 2022

முடி

 


முடி

குறுக்கு வாட்டில் வெட்டினாலும் அழுதுத் துடிப்பதுமில்லை
நெடுக்கு வாட்டில் சீவினாலும் துள்ளிக் குதிப்பதுமில்லை

சுத்தமாக மொட்டை அடித்தாலும் அதோடு முடிந்து விடுவதுமில்லை
மொத்தமாக நெட்ட வளர்த்தாலும் அதோடு ஒடிந்து விடுவதுமில்லை
 
முடி முடிந்தவரை முளைத்து வளராமல் அடியோடு மடிந்து விடுவதுமில்லை
முடி முடிந்தவரை முனிவராக்காமல் அடியாரை மடிய விடுவதுமில்லை

மீசையாக இருந்தாலும் முடியை முறுக்காமல் விடுவாருமில்லை
ஆசையாக இருந்தாலும் தாடியை நறுக்காமல் விடுவாருமில்லை!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 18 November 2022

அகர முதல எழுத்திலும்...

 அகர முதல எழுத்திலும்...

நீதிக்குத் தலை வணங்கிய இனம்                      அநீதிக்குத் தலை வணங்கும் இனமானது ஏன்?

நியாயத்திற்குக் கை கொடுத்த இனம் அநியாயத்திற்குக் கை கொடுக்கும் இனமானது ஏன்?

யோக்கியனைப் போற்றிய இனம் அயோக்கியனைப் போற்றும் இனமானது ஏன்?

நாகரிகத்தைப் படைத்த இனம் அநாகரிகத்தைப் படைக்கும் இனமானது ஏன்?

மானத்தோடு வாழ்ந்த இனம் அவமானத்தோடு வாழும் இனமானது ஏன்?

ஜாக்கிரதையாக செயல்பட்ட இனம் அஜாக்கிரதையாக செயல்படும் இனமானது ஏன்?

சுத்தமான சுற்றுச் சூழலில் இருந்த இனம்  அசுத்தமான சுற்றுச் சூழலில் இருக்கும் இனமானது ஏன்?

- தஞ்சை த.இராமநாதன்

Sunday, 13 November 2022

வயதுக்கேற்ற அழகு


வயதுக்கேற்ற அழகு

துள்ள முடிந்த வயதில் துள்ளியமை அழகு
துள்ளல் முடிந்த வயதில் துள்ளாமை அழகு
துள்ள முடிந்தபோது துள்ளி முடித்தமை அழகு
துள்ள முடியாதபோது தள்ளி வைத்தமை அழகு

சிரித்தாலே குழி விழுந்த இள முகமும் அழகு
சிரிக்காமலே குழி விழுந்த கிழ முகமும் அழகு
வாழ்ந்ததைப் பற்றி கவலைப்படாததும் அழகு
வாழ்வதைப் பற்றி கவலைப்படுவதும் அழகு

கற்க வேண்டியதை கற்காதக் காலமும் அழகு
கற்காதப் பாடத்தை கற்பிக்கும் காலமும் அழகு
ஓடி அடங்கி களைத்துப் போனதும் அழகு
நாடி அடங்கி இளைத்துப் போனதும் அழகு!

- தஞ்சை த.இராமநாதன்




Tuesday, 8 November 2022

தமிழர்களுக்கு தமிழ்நாட்டின் கேள்வி



தமிழர்களுக்கு தமிழ்நாட்டின் கேள்வி

கல்கத்தா கொல்கத்தா என்றானதும்          Calcutta Kolkatta என்றானது

பம்பாய் மும்பாய் என்றானதும்
Bombay Mumbai என்றானது

ஒரிசா ஒடிஷா என்றானதும்
Orissa Odisha என்றானது

பெங்களூர் பெங்களூரு என்றானதும்
Bangalore Bengaluru என்றானது

தமிழ்நாடு தமிழ்நாடாகவே இருந்தும்
Thamizhnatu Tamilnadu என்றானதேன்?

சென்னை சென்னையாகவே இருந்தும்
Sennai Chennai என்றானதேன்?

சோழன் சோழனாகவே இருந்தும்
Sozhan Cholan என்றானதேன்?

தூத்துக்குடி தூத்துக்குடியாகவே இருந்தும்
Thooththukkuti Tuticorin என்றானதேன்?

கோயம்புத்தூர் கோயம்பத்தூர் ஆகாமலே  
Coimpuththoor Coimbatore என்றானதேன்?

- தஞ்சை த.இராமநாதன்


Monday, 7 November 2022

வாசு சித்தப்பா - நினைவலைகள்

 


வாசு சித்தப்பா - நினைவலைகள்

வாசு சித்தப்பாவென நானழைப்பேன்
வாடா அய்யாவென அவரழைப்பார்

புதிதாய் சைக்கிளை வைத்திருப்பார்
சுத்தமான ஆடையை அணிந்திருப்பார்

ஆலத்தூர்வரை சைக்கிளில் பேசிக் கொண்டே சென்றதுண்டு
ஆலமரத்தடியில் பலதடவை பேசிக் கொண்டே சிரித்ததுண்டு

நாகரிகத்துடன் நகைச்சுவையாகப் பேசுவார்
நயவஞ்சகமின்றி மனம் திறந்துச் சிரிப்பார்

அனைவரும் படிக்க வேண்டும் என்பார்
அயல்நாடு செல்ல வேண்டும் என்பார்

வரும் பொங்கலுக்குப் போகும்போது சென்றுப் பார்க்கலாம் என்றிருந்தேன்
செல்லும்போது அவர் இருக்க மாட்டார் என்றச் செய்தியை இன்றறிந்தேன்

இறந்தார் என்றறிந்தவுடன்.....

மனதிலோடும் நினைவலையின்
துளிச் சிதறல் கண்ணில் தெரிகிறது!

- தஞ்சை த.இராமநாதன் 


Sunday, 6 November 2022

இதற்குத் தேவை இது


 இதற்குத் தேவை இது

பட்டுக்குத் தேவை துட்டு
பாட்டுக்குத் தேவை மெட்டு
பூவுக்குத் தேவை மொட்டு
காவுக்குத் தேவை வெட்டு
மாதுக்குத் தேவை பொட்டு
சூதுக்குத் தேவை பகட்டு
தப்புக்குத் தேவை தட்டு
தவறுக்குத் தேவை திட்டு
பறிக்கத் தேவை துரட்டு
நரிக்குத் தேவை திருட்டு
மாடிக்குத் தேவை படிக்கட்டு
தாடிக்குத் தேவை முடிக்கட்டு
நீருக்குத் தேவை அணைக்கட்டு
நீதிக்குத் தேவை ஆணையிட்டு
முயற்சிக்குத் தேவை மெனக்கட்டு
முதிற்சிக்குத் தேவை மனக்கட்டு!

- தஞ்சை த.இராமநாதன்


Friday, 4 November 2022

ஆதிக்கு சமமானதே சமாதி நிலை

 


ஆதிக்கு சமமானதே சமாதி நிலை

வெய்யில் அடித்தால் சுடும் நிலைக்கு
மழையின் குளிரால் பெறுவது சமநிலை

தண்டவாளத்தில் தடம் புரளாது பயணம் தொடர ரயிலுக்குத் தேவை சமநிலை

அனைவருக்கும் பசியாற உணவுக் கிடைத்து விட்டால் எங்கும் சமநிலை

ஆணும் பெண்ணும் முழு உரிமையுடன் வாழ்ந்து விட்டால் வாழ்வில் சமநிலை

நல்லவரை வாழ்த்தி தீயவரை தாழ்த்திப் பேசினால் பேசும் பேச்சினில் சமநிலை

நியாயத்திற்குத் தட்டிக் கொடுத்து  அநியாயத்தை அதட்டிக் கேட்டால் சமநிலை

ஆதி இறை நிலைக்கு சமமாக மனிதன் வாழ்ந்தால் சம+ஆதி= சமாதி நிலை!

- தஞ்சை த.இராமநாதன்


Thursday, 3 November 2022

ஆளுமைப் பெற்றோரின் மண்

 


ஆளுமைப் பெற்றோரின் மண்

பெரிய கோயிலின் கட்டிடக் கலையால்
பெயரைப் பதித்த பேரரசனின் தஞ்சை

மலையே இல்லாத ஊரிலே கட்டிக் காட்டி
மலைக்க வைத்த புனித மண் தஞ்சை

இப்படி எப்படிக் கட்ட முடிந்ததென
அசர வைத்த அரசனின் தஞ்சை
 
அகில உலகையும் அன்னாந்துப் பார்க்க
வைத்து உயர்ந்த மண் தஞ்சை

அரசியலில் கேட்டை விரட்டி கோட்டைக் கட்டி ஆளப்போகும் மண் தஞ்சை

மஹாராஜர் மாமன்னர் இராஜராஜர்
புகழைப் பரப்பப் போகும் மண் தஞ்சை!

- தஞ்சை த.இராமநாதன்


Tuesday, 1 November 2022

மோர் குழம்பு

 


மோர் குழம்பு

பிறந்தக் கன்றுக்குக் கொடுக்காது
கொதிக்க வைத்தால் கடும்புப் பால்

கன்றைக் கொஞ்சம் குடிக்க வைத்து கறந்ததைச் சேர்த்தால் குடும்பப் பால்

கறந்தப் பாலைக் கொதிக்க வைத்து சூட்டோடுக் குடித்தால் சூடானப் பால்

சூடானப் பாலைக் கெடாமல் தடுத்து
நொதிக்க வைத்தால் தயிரானப் பால்

தயிரில் வெண்ணெய்யை கடைந்துப் பிரித்தால் மோராக தயாரானப் பால்

மோரை அளவோடு கொதிக்க வைத்து தாளித்ததால் மோர் குழம்பானப் பால்!

- தஞ்சை த.இராமநாதன்