Thursday, 31 August 2023

பாரத பரதத்தில் புதுமை

பாரத பரதத்தில் புதுமை

அங்க அசைவின் வெளித் தோற்றத்தில் பழமைக் காட்சியைக் கோர்ப்போம்
அங்க அசைவில் உள்ளப்  பொருளில் புதுமைச் செய்தியைச் சேர்ப்போம்

தெரியாத கதையைத் தெரியப்படுத்த                ஆடிய ஆட்டத்தை அப்படியே ஆடுவோம்
தெரிந்த கதையைத் தெளிவுபடுத்த கருத்துடைய ஆட்டத்தை ஆடுவோம்

அழியாப் பூதங்களை இன்னிசையோடு சேர்த்து பாவனையைக் கூட்டுவோம்
அழியும் சோகங்களை இயற்கையோடு சேர்த்து வேதனையைக் காட்டுவோம்

கொதிக்கும் சூரியனின் சூட்டோடு
பரதத்தில் பாடுவதைச் சேர்ப்போம் 
உடையும் ஓசோனின் ஓட்டையோடு
பாரதத்தில் பரதத்தைப் பார்ப்போம்

அகச்சிவப்பு கதிர்கள் ஊடுருவுலோடு
புறத்தின் கேவலத்தைக் காண்பிப்போம்
புற ஊதா கதிர்கள் கூடும் உடலோடு                  அகத்தின் அவலத்தைக் காண்பிப்போம்!

- தஞ்சை த.இராமநாதன்

Friday, 25 August 2023

சந்திரயான் போல் சூரியான்

சந்திரயான் போல் சூரியான்

நிலவிற்குச் சந்திரயானைச் சாதனை    செய்து அனுப்பினோம்
கதிரவனுக்கு சூரியானைச் சோதனை  செய்து அனுப்புவோம்

கண்ணை மூடும் மெஞ்ஞானத்தால் பல கோள்களைக் காணலாம்
காணாததைத் தேடும் விஞ்ஞானத்தால் சில கோள்களைக் காணலாம்

பூமியின் வளத்தைச் சுரண்டித் தீர்த்து பூமியை முடிப்போம்
நிலவில் நிலத்தின் வளத்தைத் தீர்த்து நிலவையும் முடிப்போம்

பூமியைச் சொந்தமாக்கப் பல நாட்டினர் பலவாறு ஓடினோம்
நிலவைச் சொந்தமாக்கப் பல நாட்டினர் பலமாக ஓடுவோம்

கோள் விட்டு கோள் போய் பெண்ணைக் கொடுத்து எடுப்போம்
கோள் விட்டு கோள் போய் பொன்னை எடுத்துக் கொடுப்போம்

விண்ணைத் தாண்டி மண்ணைத் தேடி மகிழ்வைக் காணலாம்
மண்ணைத் தோண்டி மரபை நாடி        புகழைக் காக்கலாம்!

- தஞ்சை த.இராமநாதன்

Wednesday, 23 August 2023

சந்திரயானைப் போல் சரித்திரம்

 

சந்திரயானைப் போல் சரித்திரம்

மனிதனை மனிதனே கொல்வதென்பது மிருகத்தனமான கொடுமைதானே?
சாதியினை சாதியால் வெல்வதென்பது மூர்க்கத்தனமான மடமைதானே?

சாதிக்குச் சாதி சங்கம் இருப்பது சாதியை உணர்வோடு வெறுக்கவா?
வீதிக்கு வீதி சாதி கொடி பறப்பது சாதியை வேரோடு அறுக்கவா?

இத்தனை வருடம் பேசியதையே பேசி வேற்றுமையை வளர்ப்பது சரியா?
பேசும் அனைவரும் சாதியைப் பேசியே ஒற்றுமையைத் தகர்ப்பது சரியா?

நாளுக்கு நாள் சாதி சச்சரவுகள் கூடுவது பகுத்தறிவுப் பலனின் வளர்ச்சியா?
நாளுக்கு நாள் சாதி கட்சிகள் கூடுவது படிப்பறிவுப் பலனின் வளர்ச்சியா?

ஒற்றுமையெனப் பேசி வேற்றுமையை வளர்க்கும் அரசியலார் வேண்டுமா?
வேற்றுமையைப் பேசி ஒற்றுமையைச் சீர்குலைக்கும் அரசியலும் வேண்டுமா?

இளைஞர்களே இளைஞர்களே.....

வெறுப்பை வெறுத்து பொறுப்பைப் பெற்று உயர்ந்து வாழுங்கள்!
சந்திரயானைப் போல் சரித்திரம் படைத்து தலைநிமிர்ந்து வாழுங்கள்!

- தஞ்சை த.இராமநாதன்

Monday, 21 August 2023

வயதானோரை வாட்டி வதைப்பதேன்?

 

வயதானோரை வாட்டி வதைப்பதேன்?

அலையாமல் அரை வயிறு நிறைவதும் கிடையாது
அலைந்தாலும் முழு வயிறு நிறைவதும் கிடையாது
அலைவோருக்கு வெயிலின் சூடு சுடுவதே தெரியாது
அலையாதோருக்கு வெயிலின் சூடு சுடுமென்பதே தெரியாது

வந்தாரை மட்டும் வாழ வைத்தால் அது இனத்தின் வறட்டு கெளரவம்
இருப்போரை அலைய வைத்தால் அது இனத்தின் குருட்டுக் கேவலம்
இருந்ததை இழந்து நொந்தால் முரட்டுக் குணத்தின் முட்டாள்தனம் 
இருப்பதையும் இழந்து வீழ்ந்தால் வெட்டிக் குலத்தின் கோழைத்தனம்

இழுவண்டி அப்போது மிதிவண்டியாகி    மதியோடு வீதிக்கு வந்தது
மிதிவண்டி இப்போது தள்ளுவண்டியாகி சதியோடு சாலைக்கு வந்ததது
மிதிவண்டியைத் தளராமல் தள்ளும் வீரனுக்கு வீர வணக்கம்
உயிருள்ளவரை உழைக்க நினைக்கும் உத்தமனுக்குத் தீர வணக்கம்!

- தஞ்சை த.இராமநாதன் 

Tuesday, 15 August 2023

மரமும் அழுவதுண்டு

 


மரமும் அழுவதுண்டு

முடியை வெட்டினால் பிழைத்துக் கொள்ளலாம்
மொட்டை அடித்தாலும் பிழைத்துக் கொள்ளலாம்
தழையை வெட்டினால் பிழைத்துக் கொள்ளலாம்
தலையை வெட்டினால் பிழைப்பது எப்படி?

அடித்த காற்றோடு கிளை ஒன்றை  இழந்தேன்
ஒடிந்த கிளையோடு உறுப்பு ஒன்றை இழந்தேன்
உடைந்த கிளையை வெட்டியபோது உடைந்தேன்
உடையாததை வெட்டினால் உடையாமல் இருப்பேனா?

வெட்டிக் கழித்திருந்தால் துளிர் விட்டுப் பெருக்கியிருப்பேன்
வெட்டி வீழ்த்தும்போது மரமான நான் உடையாது இருப்பேனா?
அறுத்தபோது என் அழுகைக் குரல் உங்களுக்குக் கேட்கலியா?
நான் அழுதபோது மழையும் சேர்ந்து அழுததைப் பார்க்கலியா?

- தஞ்சை த.இராமநாதன்


Friday, 11 August 2023

குடிசையானாலும் குடிலே

குடிசையானாலும் குடிலே

குடிசையில் வாழ்ந்தாலும் குடிலின்                சில அடி நிலம் சொந்தமாகுதே
பல அடுக்கு மாடியில் வாழ்ந்தாலும் குடிலின் பல அடிநிலம் சொந்தமாகாதே

குடிசையில் வாழ்வோர் வாழும்
வாழ்க்கை இயற்கையாகக் கிடைத்தது
அடுக்குமாடியில் வாழ்வோர் வாழும் வாழ்க்கை செயற்கையாகக் கிடைத்தது

மண்ணில் உருண்டு புரண்டு இறுதி அடக்கம் மண்ணின் மடியினிலே
விண்ணில் பறந்து இறந்து இறுதி அடக்கம் மண்ணின் அடியினிலே

உள்ளதைக் கொண்டு மண் வளத்தோடு உலாவரும் வாழ்வு தன் நிலத்தினிலே
உள்ளதைக் கண்டு பண வளத்தோடு
நிலைமாறும் வாழ்வு மாடி தளத்தினிலே!

- தஞ்சை த.இராமநாதன்


Tuesday, 1 August 2023

கூட்டம்

கூட்டம்

சுய புத்தியோடு கூடினால் அது கூட்டம்
பய விரக்தியோடு கூடினால் அது கூட்டமா?

கூடுபவர்களோடு சேர்ந்து கூடினால் அது கூட்டம்
கூட்டியவர்களோடு சேர்ந்து கூவினால் அது கூட்டமா?

நீதிக்காகக் காட்டமாகக் கூடினால் அது கூட்டம்
நிதிக்காகக் கட்டாயமாகக் கூடினால் அது கூட்டமா?

கூட்டத்தோடு கூட்டமாகக் கூடினால் அது கூட்டம்
கூட்டத்தைக் கூட்டவேக் கூடினால் அது கூட்டமா?

உரிமையோடு உணர்வுக்காகக் கூடினால் அது கூட்டம்
பெருமையோடு உணவுக்காகக் கூடினால் அது கூட்டமா?

நிற்பதற்குக் கூட இடமில்லாமல் கூடினால் அது கூட்டம்
நிற்பதற்காகவே கூட்டம் கூட்டினால்
அது கூட்டமா?

பட்டி தொட்டியெல்லாம் நடந்து கூடினால் அது கூட்டம்
பாட்டுப் பேட்டியெல்லாம் நடத்தக் கூடினால் அது கூட்டமா?

கூடிய கூட்டத்தைப் பற்றிப் பேசப்பட்டால் அது கூட்டம்
கூடியவரே கூடியதைப் பற்றிப் பேசினால் அது கூட்டமா?

- தஞ்சை த.இராமநாதன்