இராமநாதனை இராஜராஜ சோழன் பிறந்த ராசியிலே தன்னுடைய மூத்த மகனாய்ப் பெற்றெடுத்த தாயே!
கோபக்காரனென ஒருசிலர் சொன்னாலும் தன்மான இனக் குரலோனென எந்நாளும் வாழ்த்திடும் தாயே!
யாராக இருந்தாலும் எழச் சொல்லிச் சமையற் கட்டு நிலையருகே திண்ணையில் அமர வைத்து உணவளித்த தாயே!
சனிக்கிழமையிலே சூடு பறக்க மரச்செக்கு நல்லெண்ணெயைத் தேய்த்து அரப்பைச் சேர்த்து குளிக்க வைத்த தாயே!
கட்டையன் என்னோடு சண்டைப் போடையிலே குச்சி வைத்து அவனை அறிவுரித்திக் கண்டித்து என்னை அரவணைத்த அன்புத் தாயே!
இளங்காலைப் பொழுதினிலே வீட்டுக் கோழி முட்டையை உடைத்து வாயில் ஊற்றி ஓட வைத்து உடலைக் காத்த தாயே!
பதினாறு வயது முதல் பிறந்த இட வீட்டை விட்டுப் பிரிந்து வாழும் என் வாழ்க்கை ஓட்டமாய் ஓடிக்கொண்டே இருக்கின்றது என் தாயே! அவ்வோட்டத்தை சிங்காரச் சிங்கையிலும் சிங்கமாய்த் தொடர்கின்றேன் தாயே!
கண்டியர்தெரு அம்மா வீடெனும் பெருங்குடியில் பிறந்த என் தாயே சோமன்தெரு காசாங்குளம் வீடெனும் குலக் குடியை வாழ வைக்கின்ற தாயே!
அன்னையர் தினத்தில் இறையை வேண்டி உம் காலடி நோக்கி வணங்குகிறேன் தாயே!
அனைத்து அன்னையர்களுக்கும் வாழ்த்துகள்!
- தஞ்சை த.இராமநாதன் (ஆம்பலாப்பட்டு - சோமன்தெரு)