மனித நேயமும் அநியாயமும்
அனைவருக்கும் உணவு வேண்டுமென நினைத்தால் அது மனிதநேயம்
தனக்கு மட்டும் இருந்தால் போதுமென நினைத்தால் அது அநியாயம்
பசியோடு இருப்போர்க்கு பசியாறக் கொடுத்தால் அது மனிதநேயம்
பசியால் வாடுவோரை பரிதவிக்க விட்டு பசியாமலே புசிப்பது அநியாயம்
போராடுபவரை அழைத்துப் பேசி பிரச்சினையைத் தீர்த்தால் மனிதநேயம்
வருந்தி சாகும்வரை போராட விட்டு வஞ்சனை செய்தால் அது அநியாயம்
அடுத்த நாட்டில் அபாயமென்றால் முன் சென்று உதவுவது மனிதநேயம்
அனாதையாகி இறக்கும் போது இங்கே அகதியாக வா என்பது அநியாயம்
முடியும்போது முடிந்ததை செய்து சார்ந்தோரைக் காப்பது மனிதநேயம்
உதவியவர்க்கு நன்றியோடு இல்லாது நயவஞ்சகம் செய்வது அநியாயம்
கன்று நட்டு நீர்ப் பாய்ச்சி மரமாக்கி சந்ததியைக் காப்பது மனிதநேயம்
நட்டவனை கெட்டவன் மொட்டை அடித்து காசை தனக்காக்குவது அநியாயம்
அன்பால் அரவணைத்து மனிதரைக் காத்தால் அது மனிதநேயம்
ஆசையின் போதையில் சூழலுக்கேற்ப ஆட்டம் போட்டால் அது அநியாயம்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment