Sunday, 25 July 2021

ஞாபகத்திற்கு வரும் ஞாபகங்கள்

 

ஞாபகத்திற்கு வரும் ஞாபகங்கள்

அப்பாவின் தோளில் அம்ர்ந்து வெகு தூரம் சென்ற ஞாபகம்

அம்மா ஊற்றிய கட்டித் தயிரை கையில் பிடித்து ருசித்த ஞாபகம்

பாலத்தின் அடியில் எதிரொலியைக் கேட்க சத்தமாகக் கத்திய ஞாபகம்

பொருக்கு மண்ணில் நடந்து கால் சிவந்த ஞாபகம்

தாத்தா பாட்டிக்கெல்லாம் பல் பிடுங்கிய ஞாபகம்

அப்பாயி இடித்த வெற்றிலைப் பாக்கின் வாசம் நுகர்ந்த ஞாபகம்

ரதிக்கேற்ற மன்மதரே எனப் பாடி பரவசமடைந்த ஞாபகம்

தீபாவளிக்கு போட்டிப் போட்டு வெடி வெடித்த ஞாபகம்

புனையல் அடித்த மாடுகள் பின்னே சுற்றி சுற்றி வந்த ஞாபகம்

கவலசால் தண்ணீர் இறைக்கும் கயிற்றால் தூக்கி எறியப்பட்ட ஞாபகம்

வாய்க்காலில் மம்பட்டியால் காலை வெட்டிக் கொண்ட ஞாபகம்

பத்தாயத்தின் உள்ளே அசையாமல் ஒளிந்து விளையாடிய ஞாபகம்

பந்தால் மட்டையை சாய்த்து ஆட்டம் கொடுத்த பந்தாட்ட ஞாபகம்

பளிங்கி ஆட்டத்தில் அடித்து ஆட்டம் கொடுத்த ஞாபகம் 

கிட்டிபில் ஆட்டத்தில் ஓங்கி அடித்து மகிழ்ந்த ஞாபகம்

கபடி ஆட்டத்தில் நாக்கைக் கடித்துக் கொண்ட ஞாபகம் 

குறிஞ்சான் இலை மென்று நாக்கு சிவந்த ஞாபகம்

குளத்தில் அக்கரைக்கு நீந்திச் சென்ற ஞாபகம்

இன்னும் சொல்லாமல் இருப்பது எத்தனை ஞாபகங்களோ?

- தஞ்சை த இராமநாதன்


No comments:

Post a Comment